4.3 நாட்டுப்புறவியலும் உளவியலும்

மனித மன அமைப்புப் பற்றியும், அதன் இயங்கியல் குறித்தும் ஆய்வு செய்த சிக்மண்ட் ஃப்ராய்டு என்பாரின் ஆய்வு உளவியல்; மானுடவியல், இலக்கியம், தத்துவம், வரலாறு, சமயம், மருத்துவம் போன்ற புலங்களுக்குப் புதிய பார்வையைத் தந்தது எனலாம். ஃப்ராய்டு பாலுணர்வு அல்லது காம இச்சையை அடிப்படையாகக் கொண்டதே மனம் என்ற கருத்தாக்கம் உடையவர். அவர் எடுத்துக் கூறிய கருத்தாக்கங்களான நனவு மனம் (Conscious), நனவடங்கு மனம் (Sub- conscious), நனவில் மனம் (Unconscious), இச்சை உணர்ச்சி (Id), தன்முனைப்பு (Ego), பண்பாட்டுணர்ச்சி (Super Ego) ஆகியவை நாட்டுப்புறவியல் ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்தின. நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள், தொல்பழங்கதைகள், பழமொழிகள், குலக்குறி வழிபாடு, விலக்குகள் (Taboos) மற்றும் பல பிற வழக்காறுகளின் அர்த்தங்களின் ஆழத்தைக் கண்டறிய ஃப்ராய்டின் சிந்தனை வழிகாட்டியது. ஃப்ராய்டு உளவியல் வழியில் நாட்டுப்புற வழக்காறுகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார்.