5.1 களத் தேர்வில் கவனிக்க வேண்டியவை

ஆய்வாளர் தனது ஆய்வுக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கத் தகவலாளிகளிடம் தாமே நேரடியாகச் சென்று தொடர்பு கொண்டு சேகரிக்க வேண்டியுள்ளது.

5.1.1 ஆய்வுக் களம்

ஆய்வாளர் களத்திற்குச் செல்வதற்கு முன்பே கவனிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து இனிப் பார்க்கலாம்

சான்றாக :

வில்லுப்பாட்டைப் பற்றி ஆய்வாளர் ஒருவர் ஆய்வு செய்ய முனைகிறார் என்றால் அவர் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கே களப்பணிக்குச் சென்றாக வேண்டும். பிற மாவட்டங்களில் வில்லிசை அதிகமாக வழக்கில் இல்லை. அதுபோன்று தெருக்கூத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் தமிழகத்தின் வட மாவட்டங்களையே களப் பணிக்கான களமாகத் தேர்வு செய்ய வேண்டும். தென் மாவட்டங்களில் தெருக்கூத்துகளைக் காணவியலாது.

அதே போன்று களப்பணிக் களத்தைத் தேர்ந்தெடுக்கும் போது ஆய்வாளரின் நண்பர், உறவினர் போன்றோர் அக்களத்தில் வாழ்பவராக இருந்தால், அம்மக்களோடு தொடர்பு கொள்ள, உறவினை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

5.1.2 கள ஆய்வில் செய்ய வேண்டியவை

நாட்டுப்புறவியல் ஆய்வாளர் ஆய்வு செய்யப்போகும் ஆய்வுக் களத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், களம் பற்றிய விளக்கங்கள் அடங்கிய நூல்களைத் தொகுக்க வேண்டும். மேலும் அவை குறித்து மானுடவியலார், சமூகவியலார், வரலாற்றாய்வாளர், மொழியியல் துறையினர் போன்றோர் கள ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்டிருப்பின் அவற்றையும் தொகுத்து அறிய வேண்டும்.

1) மக்களின் பண்பாடு பற்றிய பொதுவான செய்திகளையும் கற்றறிதல் வேண்டும்.

2) அக்களத்தைக் குறித்துத் தொல்லியலாளர்கள் ஏதேனும் நூல்கள் எழுதியிருப்பின், அவற்றையும் சேர்த்துப் படித்தறிதல் வேண்டும்.

3) அக்களத்தைச் சார்ந்த சங்கத்தினர் பல்வேறு பொருள் குறித்துச் சிறு குறிப்புகள் வெளியிட்டிருப்பின், அவற்றைத் தொகுத்து அப்பகுதியைப் பற்றி அறிதல் அவசியம்.

4) பயணிகளுக்குரிய வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டிருப்பின், அவற்றைப் படித்தறிதல் தேவையானதாகும்.

5) மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையினர் வெளியிட்டுள்ள அரசாங்க வெளியீடுகளைச் சேகரித்தல் வேண்டும்.

6) தேசிய, வட்டார, வரலாறுகள் போன்றவற்றைத் தொகுத்தறிதல், பத்திரிகைச் செய்திகளைத் திரட்டுதல் முக்கியம்.

7) நாட்குறிப்புகள், வட்டார மக்களுள் முக்கியமானோர் பற்றிய வரலாறு அறிதல் வேண்டும். அப்பகுதி மக்களைப் பற்றி, அப்பகுதியில் வாழும் எழுத்தாளரால் ஏதேனும் நாவல்கள் எழுதப்பட்டிருப்பின், அவற்றையும் படித்துணருதல் வேண்டும்.

மேலும் கள ஆய்வு செய்யப் போகும் இடம், அங்குச் செல்வதற்கான சாலை வசதிகள், அருகிலுள்ள பெரிய ஊர்கள், போக்குவரத்து வசதிகள், அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கங்கள் போன்ற செய்திகளை அறிந்து கொள்வதன் மூலம் ஆய்வாளர், கள ஆய்வின் போது தம்மைப் புதுமனிதராகக் காட்டாமல் பழகிய மனிதராக அறிமுகம் ஆகிறார்.

  • பால் இன வேறுபாடு
  • கள ஆய்வின் போது ஆய்வாளர் எதிர்கொள்ள நேரிடும் பால் பாகுபாட்டுச் சிக்கல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    1) ஆண் ஆய்வாளர் ஆண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
    2) ஆண் ஆய்வாளர் பெண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
    3) ஆண் ஆய்வாளருக்குப் பொது நிகழ்வுகளில் ஏற்படும் சிக்கல்கள்.
    4) பெண் ஆய்வாளருக்குப் பொது நிகழ்வுகளில் ஏற்படும் சிக்கல்கள்.
    5) பெண் ஆய்வாளர் பெண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
    6) பெண் ஆய்வாளர் ஆண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.

    இச்சிக்கல்களை எல்லாம் ஆய்வாளர் முன்கூட்டியே தெளிவாக்கிக் கொண்டால், களப்பணியில் தான் சந்திக்கும் ஆண், பெண் தகவலாளிக்கு ஏற்ப நடந்து களப்பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

  • வயது அடிப்படையில்
  • பாடல் வகைகள், எந்தெந்த வயதினரிடம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுகிறதோ, அந்தந்தப் பாடல் வகைகளை அந்தந்த வயதினரிடம் சேகரிப்பதே எளிதானதும் பயன் தரத் தக்கதுமாகும். அதை அறிந்து, அதற்கேற்றபடி பாடல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

    சான்றாக :

    ஏற்றப் பாடல்கள், மீன்பிடிப்புப் பாடல்கள், வளைகாப்புப் பாடல்கள் முதலியன வயதானவர்களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவை.

  • சாதி அடிப்படையில்
  • பலவிதமான சாதிகளைக் கொண்டது சமூகம். ஒவ்வொரு சாதிக்கும் என்று தனிப்பட்ட அடையாளம் காணப்படுகிறது. களப்பணியை மேற்கொள்கிற ஆய்வாளன் பலதரப்பட்ட சாதியைச் சார்ந்த தகவலாளிகளைக் காண நேரிடும். எனவே ஆய்வாளன் தான் சந்திக்க இருக்கும் தகவலாளி எந்தச் சாதி, சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்து, அந்தச் சாதியின் தனிப்பட்ட அடையாளங்கள், சடங்குகள், பழக்க வழக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடன் நெருங்கிப் பழகி உறவினை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.