2.5 தேசிங்குராசன் கதை (நாட்டுப்புறப் பாடலின் அடிப்படையில்)

இது தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தேசிங்கின் வீர வரலாற்றை மையமாகக் கொண்ட வரலாற்றுக் கதைப் பாடலாகும். செஞ்சியின் வரலாறு கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

செஞ்சிக் கோட்டை

எண்ணற்ற மன்னர்களின் ஆட்சிப் பொறுப்பில் வளர்ச்சி அடைந்திருக்கிறது செஞ்சிக்கோட்டை. ஆயினும் செஞ்சிக் கோட்டை என்றவுடன் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிங்குராசன் நினைவே அனைவர்க்கும் எழுகிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து, செஞ்சியில் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் ஆட்சி புரிந்தது பத்தே மாதங்கள்தாம். எனினும் நீண்ட நாட்கள் அரசாண்டவனைப் போல் பேரும்புகழும் அவனுக்கு வாய்த்தன, இவ்வாறு அவன் புகழ் தமிழக மெங்கும் பரவக்காரணமாக அமைந்தது தேசிங்குராசன் கதைப் பாடலாகும்.

தேசிங்குராசன் கதைப்பாடல் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகிறது. தேசிங்கின் வாழ்க்கை வரலாறு மிகைப்படுத்தப்பட்டும் திரித்தும் இக்கதைப் பாடலில் கூறப்பட்டிருப்பினும் வீரச் சுவையை விளங்கக் காட்டுவதற்காகவே புகழேந்திப் புலவர் இக்கதைப்பாடலை இவ்வாறு இயற்றி உள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இக்கதைப்பாடலை ஒட்டி ஐந்து நூல்கள் கிடைத்துள்ளன. அவை தேசிங்கு கும்மி, தேசிங்கு ராசாப் பாட்டு, தேசிங்குராசன் சண்டை, தேசிங்குராசன் கதை, தேசிங்குராசன் சிந்து என்பவையாகும்.

2.5.1 கதைச்சுருக்கம்

செஞ்சி துருகத்தை (கோட்டையை) ஆளும் தேரணிராஜன், டில்லி பாதுஷாவிடமிருந்த தெய்வலோகப் புரவியை அடக்குவதில் தோல்வி கண்டு, முன்பே ஒப்புக்கொண்ட நிபந்தனையின்படி சிறையிலடைக்கப்படுகிறான். செஞ்சியில் பிறந்து வளர்ந்த தேசிங்கு தனது ஐந்தாவது வயதில் நண்பன் மோவுத்துக்காரனுடன் டில்லி சென்று, அரங்கனின் அருளால் புரவியை அடக்கித் தந்தை தேரணி சிங்கைச் சிறைமீட்டு, பாதுஷாவிடம் குதிரையும் பொன்னும் பரிசுகளாகப் பெற்றுத் திரும்புகின்றான்.

· பெற்றோர் இழப்பும் ஆட்சிப் பொறுப்பும்

தேசிங்கு எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும்போது அவன் பெற்றோர் இறந்து விடுகின்றனர். தேரணிசிங்கின் தம்பி தரணிசிங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தேசிங்கை வளர்க்கிறான். தேசிங்கு தன் பதினெட்டாவது வயதில், செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பில் அமர்கின்றான்.

· வரிப்பணமும் போரும்

மைய அரசிலிருக்கும் டில்லி பாதுஷா வரி செலுத்தும்படி ஆர்க்காட்டு நவாபுக்கு ஆணை அனுப்புகின்றான். நவாபு தன் ஆளுகைக்கு உட்பட்ட கோட்டைத் தலைவர்களுள் செஞ்சியை ஆளும் தேசிங்கு பன்னிரண்டு ஆண்டுகள் வரிப்பணம் கட்டவில்லை என்பதை அறிந்து, பணத்தை உடனே கட்டும்படி தோற்றமல்லன் என்பவன் மூலம் ஆணை அனுப்புகிறான். தேசிங்கு அதைக் கேள்வியுற்று

டாறு டாறாய்க் கிழித்துப் போடுவேன் சிற்றப்ப ராசாவே
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு சிற்றப்ப ராசாவே
பிறந்த அன்றைக்கே சாவிருக்குது சிற்றப்ப ராசாவே
வந்தவ னாரென்று கேட்டுப்பாரு சிற்றப்ப ராசாவே

என்று தன் வளர்ப்புத்தந்தை தரணிசிங்கிடம் கூறுகிறான், தரணிசிங் ஆளையனுப்பித் தோற்றமல்லனை வரவழைக்கிறான். “நவாபுவைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன்” என்று தோற்றமல்லனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறான் தேசிங்கு. ஓலையில், “ஆண்பிள்ளையானால் நவாபுசாயபை இங்கே வரச் சொல்லும் அசல் பெண் பிள்ளையானால் நவாபுசாயபை அங்கே இருக்கச் சொல்லும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் சண்டைக்கு வரச் சொல்லும்” என்று எழுதப்பட்டிருந்தது கண்டு கோபமுற்ற நவாபு தன் ஆட்சிக்குட்பட்ட பாளையக்காரர்கள் அனைவரையும் திரட்டிக்கொண்டு, செஞ்சிக்கு அருகிலிருக்கும் தேவனூரில் தங்குகிறான். படைகளின் வருகையை, பூசை செய்து கொண்டிருக்கும், தேசிங்கிடம் தரணிசிங் கூற, 'அரைக்கால் நாழி பொறு, பின்வந்து அவர்களைப் பத்தல் பத்தலாய்க் கிழிக்கிறேன்’ என்று கோபமாய்ப் பதிலளிக்கிறான். தேசிங்கின் படை வருவதற்கு முன் ‘சுபங்கிதுரை’ என்பவன் தேவனூரின் உள்ளே நவாபின் அனுமதியுடன் புகுந்து கொள்ளையடிக்கிறான். பாதிக்கப்பட்ட மக்கள் தேசிங்கிடம் முறையிடுகின்றார்கள்.

வரிப்பணம் செலுத்தி நவாபுடன் சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறிய தரணிசிங்கின் அறிவுரையைப் புறக்கணித்து, வழுதாவூரிலிருக்கும் தன் நண்பன் மோவுத்துக்காரனுக்குச் செய்தி அனுப்புகின்றான் தேசிங்கு. திருமணக் கோலத்திலிருந்த அவன் திருமணச் சபையில் உள்ளவரை வணங்கி, விடை கொடுத்து அனுப்புமாறு கேட்கிறான். அவன் தாயார் ‘கங்கணம் கட்டியபின் சண்டைக்குப் போனால் குண்டுபாயுமடா மகனே’ என்று கூறி அழுகிறாள்.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு என்னைப் பெற்ற தாயே
இரணகளத்தில் செத்துப்போனால் நல்லபதவியுண்டு
கத்தி முனையில் சாவேனானால் கனத்த பதவியுண்டு

என்று தாயிடம் வீரவுரை ஆற்றிவிட்டுப் புறப்படுகிறான் மோவுத்துக்காரன்.

· தடையும் துணிச்சலும்

கோட்டைக்கு உள்ளிருந்து போரிடுமாறு வேண்டும் இராணியின் யோசனையைக் கேளாமல் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு, சிறுபடை பின் தொடரப் போர்க்களம் செல்கிறான் தேசிங்கு. அவன் வணங்கும் அரங்கநாதரே தடுத்தும் அவன் முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. தேசிங்கு படையுடன் போர்க்களம் நோக்கி வரும் செய்தியை நவாபுக்குக் கூறும் பங்காரு நாயக்கன் ஒரு சூழ்ச்சி செய்து, ஏரிகளை உடைத்துவிட்டுச் சாரங்கபாணி ஆற்றில் வெள்ளம் புரண்டு வரச் செய்கிறான். தேசிங்கு வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடக்கிறான், முப்பது பேர்கள் மட்டுமே அவனைப் பின்தொடர முடிகிறது. ஏனையோர் திரும்பி விடுகின்றனர்.

· போரும் வீரமரணமும்

போர் தொடங்குகிறது. முதல்போரில் மோவுத்துக்காரன் வீர மரணம் அடைகிறான். அவனையும் அவன் குதிரை நீலவேணியையும் நல்லடக்கம் செய்த தேசிங்கு, சீறும் புலியாகப் போர்க்களம் புகுந்து, சேத்துப்பட்டு தாவூத்துக்காரனை நவாபு என எண்ணிக் கொல்கிறான். தாவூத்துக்காரன் இறந்த செய்தியறிந்து பீதியுற்ற நவாபு தோற்றமல்லனைத் தேசிங்கிடம் சமாதானத் தூதாக அனுப்புகின்றான். தேசிங்கு அதனை ஏற்றுக் கொள்ளாமல் நவாபுவைத் தேடிப் புறப்படுகின்றான். அப்போது ரங்கநாதக் கடவுள் தோன்றித் தடுக்கின்றார். முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன் என்று சொல்லிப் புறப்பட்ட தேசிங்கு ஒவ்வொரு பாளையக்காரனையும் கொல்கிறான். தேசிங்கின் குதிரை பாராசாரியின் கால்கள் நவாபால் வெட்டப்பட தேசிங்கு கீழே இறங்கிப் போரிடுகின்றான், நவாபும் அவன் படைகளும் ஓடி ஒளிய, எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தேசிங்கு தான் மட்டும் தனியனாய் நாடு திரும்ப விரும்பவில்லை. எதிரியில்லாத தேசிங்கு கத்தியை மேலெறிந்து அதனைத் தன் மார்பில் தாங்கி வீர மரணம் அடைகின்றான்.

தேசிங்குராசன்

ஒளிந்திருந்த நவாபும் மற்றவரும் ஓடிவந்து தேசிங்கின் வீரத்தைக் கண்டு ‘உன்னைப் போலச் சூரன் ஒருவருமில்லை‘ எனப் பாராட்டிக் கண்ணீர் விடுகின்றனர். தேசிங்கு இறந்த செய்தி இராணியம்மாளுக்குத் தெரிவிக்கப் பட்டது. வீரமரணம் அடைந்த தேசிங்கின் உடலை எரிக்க மூட்டிய தீயிலேயே அவளும் வீழ்ந்து உயிரை விடுகின்றாள்.

வைகுந்த பதவி அடைந்தார்களய்யா ராஜாவும் ராணியும்
அரங்கர்பதம் சேர்ந்தானையா ராஜா தேசிங்கு

எனக் கதை முடிவடைகின்றது.

2.5.2 வரலாறும் கதைப்பாடலும்

கதைப்பாடலும் வரலாறும் பெரும்பாலும் ஒத்திருந்தாலும் சில இடங்களில் மாறுபடுகின்றன.

· பெயர்கள்

நினைவுக் குறையாலும் பிழையான உச்சரிப்பு முறையாலும் கதைப்பாடல் பெயர்கள் மாறுபட்டும் உண்மைப் பெயர்களில் இருந்து திரிந்தும் காணப்படுகின்றன. எனவே, கதைப்பாடலில் காணப்படும் பெயர்களுள் உண்மையான பெயர்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளல் நலம்.

கதைப்பாடல்
உண்மைப்பெயர்
தேசிங்கு
தேஜ்சிங்
தேரணி ராஜன் சூலூபசிங்கு
சொருப்சிங்
டில்லி பாதுஷா
அவுரங்கசீப்
டில்லி துரை
ஃபரூக்ஷியர்
தரணிசிங்கு
-------
மோவுத்துக்காரன்
மோபத்கான்
நவாபு
சதத்துல்லாகான்
தாவூத்துக்காரன்
தவ்லத்கான்

தேசிங்கின் தந்தை பெயர் மட்டும் கதைப்பாடலில் முற்றிலும் மாறுபடுகிறது. தந்தை சொரூப்சிங் என்பதே வரலாற்றாசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே, தேரணிசிங்கு என்ற பெயர் சொருப்சிங்கின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக இருக்கலாம் அல்லது நாட்டுப் புறக் கலைஞர்களின் நினைவு மாறுபாட்டால் ஏற்பட்ட மாற்றமாகவும் இருக்கலாம். தேரணி சிங்கின் தம்பி தரணி சிங்கு என்று கதைப்பாடல் குறிப்பிடுகின்றது. இது பற்றி வேறு குறிப்புகள் கிடைக்கவில்லை.