3.4 சமூகக் கதைப்பாடல்களில் பெண்கள்

சமூகக் கதைப்பாடலில் இடம்பெறும் தலைவியர், தலைவன் இறந்தவுடன் அவர்களும் இறந்ததாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர். கணவன் அல்லது காதலனின் இறப்பிற்காக நீதி கேட்டுப் போராடியதாக எந்தத் தலைவியரும் இடம்பெறவில்லை. அவர்களைக் காணலாம்.

3.4.1 பொம்மியும் வெள்ளையம்மாளும்

மதுரை வீரன் கதைப்பாடலின் தலைவியருள், பொம்மி முதல் மனைவி; வெள்ளையம்மாள் மதுரை வீரனால் கடத்தி வரப்பட்டவள். மதுரை மண்ணிற்கு உரியவளான, ஆரத்தியிட்டு மதுரை வீரனை வரவேற்றவளான வெள்ளையம்மாளின் அழகில் மயங்கி அவளை இரவில் கடத்துகிறான். அவளது விருப்பத்திற்கு மாறாக வெள்ளையம்மாளை மதுரை வீரன் கடத்தும் பொழுது,

நானோ பதிவிரதை நன்மை யறியாமல்
தொட்டென்னை எடுத்துத் தூக்கியே வந்ததினால்
இனியெனக்கு நீ புருஷன் என்பதற்கோர் ஐயமில்லை

என்று கூறுவது அவளுடைய பண்பைப் பறைசாற்றுவதாக அமைகிறது. மதுரை வீரன் மீது வெள்ளையம்மாளுக்குக் காதலும் இல்லை, காமமும் இல்லை. இருப்பினும் மதுரை வீரன் கொல்லப்பட்டு உயிர் துறந்தவுடன் பொம்மியுடன் சேர்ந்து இவளும் உடன்கட்டையேறுகிறாள்.

3.4.2 பொம்மக்காவும் திம்மக்காவும்

இவ்விருவரும் முத்துப்பட்டனின் காதல் மனைவியர். சக்கிலியர் குலப்பெண்களான இவர்களை மணந்ததனால் முத்துப்பட்டன் கொல்லப்படுகிறான். கணவனின் இறந்தவுடலைக் கண்டு கதறிய இப்பெண்கள் இருவரும், கணவனோடு தீப்பாய உத்தரவு கேட்டு, சிங்கம்பட்டி அரண்மனைக்கு வருகின்றனர். ஜமீன்தார் இவர்களைத் தன் மனைவிமாரோடு வந்து இருக்குமாறு அழைக்கிறான். ஆனால் இவர்கள்

மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே
வாலைப் பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளிகள் போய்வாரோம்

என்று சொல்லி முத்துப்பட்டன் இறந்து கிடக்கும் இடத்திற்கு வருகின்றனர். ஜமீன்தாரும் மனமிளகித் தீப்பாய அனுமதி அளிக்கிறான். இருவரும் உடன்கட்டை ஏறுகின்றனர்.

3.4.3 பூவணைஞ்சும் ஐயம்குட்டியும்

சின்னநாடானின் மனைவி பூவணைஞ்சு, காதலி ஐயம் குட்டி. பருவமடையாத பூவணைஞ்சை மனைவியாய் அடைந்த சின்னநாடான், நாவிதர் குல மங்கையான ஐயம்குட்டியோடு சேர்ந்து வாழ்ந்தான். பூவணைஞ்சு பருவமெய்திய பின் அவளோடு வாழ மறுத்து சின்னநாடான் ஐயம்குட்டியுடனே வாழ்கிறான். அதனால் கொல்லப்படுகிறான். இதன் விளைவாக அவனோடு வாழ்ந்த ஐயம்குட்டியும், அவனால் எந்த இன்பத்தையும் அனுபவியாத பூவணைஞ்சும் உடன்கட்டையேறி உயிரை விடுகின்றனர்.

3.4.4 நல்லதங்காள்

பெண்களைத் தலைமைக் கதாபாத்திரங்களாகக் கொண்டிலங்கும் கதைப்பாடல்களுள் நல்லதங்காள் கதை முதலிடத்தைப் பெற்றுள்ளது எனலாம். ‘நாடறிந்த நல்லதங்காள்’ என்ற அடைமொழியே இதன் தன்மையை உணர்த்தும். பஞ்சத்தின் காரணமாக, தன் கணவனது சொல்லைக் கேளாமல், தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அண்ணன் வீடு வந்து சேர்ந்த நல்லதங்காள் அண்ணியின் கொடுமை தாளாமல் வெளியேறுகிறாள். காடு, வனம் தாண்டிச் செல்லும் நல்லதங்காள், கணவன் சொல் கேளாது வந்து துன்பப்படும் தலைவிதியை எண்ணி வருந்துகிறாள். கணவனது சொல்லை மீறுவது பெருந்தவறு என்ற கருத்து இவளால் வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தை

உற்று நினைத்தாளே ஒருகோடி யோசனையை
பர்த்தாவின் வார்த்தை தள்ளிப் பதறி நடந்தோமே
கணவனிட வார்த்தையது கடந்து நடந்தோமே
எங்கேயோ வானம் இடிந்ததென்று நானிருந்தேன்
தப்பாதே வானம் தலையி லிடிந்த தென்றாள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பெண்புத்தி யாலேயல்லோ பிழை வந்து நேர்ந்த தென்றாள்

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ‘பழிகார அண்ணனை நம்பி வந்தேனே, இனியும் உயிரோடு திரும்பினால் ஊரும் உலகமும் சிரிக்கும், செத்து மடிவதே சிறந்தது' என முடிவு செய்து தன் குழந்தைகள் எழுவரையும் கிணற்றில் தள்ளிவிட்டுத் தானும் வீழ்ந்து மடிகின்றாள். தமிழ்நாட்டுப் பெண்களை மிகப்பெரிய வருத்தத்திற்குள்ளாக்கிய சோகக் கதை இது என்றால் அது மிகையாகாது.

3.4.5 தோட்டுக்காரி

கோனாண்டி ராசன் மகளான தோட்டுக்காரியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்ய அனுமதி கேட்கிறான் கொந்தனப்பராசன் மகன் குமரப்பன். கோனாண்டி மறுத்து விடவே இருவருக்கும் போர் நடக்கிறது. போரில் ஏற்பட்ட அழிவை, சிறை வைக்கப்பட்டிருந்த தோட்டுக்காரி அறிகிறாள். அதிலிருந்து தப்பி, தன்னால் நேர்ந்த அழிவுக்காக வருந்தித் தீப்பாய, அவளை அடைய விரும்பிய குமரப்பனும் உடன் பாய்ந்து இருவரும் உயிரை விடுகின்றனர்.

வெங்கலராசன் கதையில் வரும் தலைவியும் இவ்வாறே கேரள அரசன் ஒருவனால் விரும்பப்படுகிறாள். தன்னால் தந்தைக்கும் கேரள மன்னனுக்கும் போர் வருவதை விரும்பாத கதைத்தலைவி தன் தலையைத் துண்டித்துக் கோட்டைக்கு வெளியே எறிந்துவிடும்படி, தன் தந்தையை வேண்டுகிறாள். அவளது தந்தையும் அவ்வாறே செய்கிறான்.

இவ்வாறாக, சமூகக் கதைப்பாடலில் இடம்பெறும் தலைவியர்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஊராரின் ஏளனப்பேச்சிற்கு ஆளாக நேரிடலாம் என்ற காரணம் கருதியே அவர்கள் இவ்வாறு தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கலாம்.