முத்துப்பட்டன்
கதை சமூகக் கதைப் பாடல்களுள் சிறப்பான
இடத்தைப் பெறுகிறது. இக்கதையின் பின்புலம், நடந்த இடம்,
காலம், கதை மாந்தர்கள் ஆகியன சிறப்புக்குரியன.
இக்கதையைப் பற்றி ஆய்வாளர்கள் பலர் ஆராய்ந்து இதன்
திட்பநுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே
இக்கதைப்பாடல் பற்றிய சிறப்புப் பாடமாக இப்பாடம்
அமைகிறது. இப்பாடலை நீங்கள் தமிழ் இணையப்
பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தில் பெறலாம்.
“கதையின்
உயிர்நாடியே கீழ்ச்சாதியில் பட்டன் மணம் செய்து கொண்டது, அவர்கள் வாழ்க்கையில்
இணைந்து ஒன்றுபட்டது, அவர்களது நலனைப் பாதுகாக்க உயிர்விட்டது ஆகியவையே”
என்கிறார் பேராசிரியர் வானமாமலை.
“18ஆம்
நூற்றாண்டில் நிலவிய அயலார் ஆட்சியின்
விளைவாகப் பழைமைச் சாதிமுறைகளைத் தகர்க்கும் புதிய
சமுதாய மாற்றம் தலைதூக்க முயன்றதன் முன் அடையாளமாக
இப்பட்டன் கதை அமைந்துள்ளதாகக் கருதலாம்” என்று
குறிப்பிடுவார், மு.அருணாசலம்.
இதுவரை
எடுத்துக்காட்டிய கதைத்
தலைவர்களுள்
முத்துப்பட்டன் பெருஞ்சிறப்புடையவன். குலச்சிறப்பும் கல்வி
நலமும் அரசனிடம் செல்வாக்கும் உள்ளவன். உயர் குலத்தில்
பிறந்த முத்துப்பட்டன், தாழ்வான குலத்தில் பிறந்து, உழைத்துப்
பிழைக்கும் இளநங்கையரிடம் அழகையும் இனிமையையும்
மானிடப் பண்பையும் கண்டான். அவர்களோடு மண உறவு
கொள்ள வாலப்பகடையின் நிபந்தனைகள் அனைத்தையும்
மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான். தனது மனைவியரது
உறவினரைத் தனது உறவினராக்கிக் கொண்டான்.
அவர்களுடைய வாழ்க்கைக்கு வரும் இடையூறுகளைப்
போக்கப் போராடினான். சக்கிலியர்களைத் திரட்டிக்
கொள்ளைக்காரர்களை விரட்டி, பொதிமாட்டுக்காரர்களுக்குப்
பாதுகாப்பு அளித்தான். இதனால் ஏற்பட்ட மோதலில் தான்
உயிர் நீத்தான்.
3.6.1
கோயிலும் வழிபாடும்
முத்துப்பட்டன்
கதை நிகழ்ச்சி உண்மையானதே என்பதற்கு,
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம் எனும் ஊரிலுள்ள
சொரி முத்தையன் கோயில், அதனையடுத்த பட்டவராயன்
கோயில் ஆகிய இடங்களில் காணப்படும் குறிப்புகளும் சொரி
முத்தையன் கோயிலில் நடைபெறும் தீக்குளிப்பு நிகழ்ச்சியும்
சான்றுகளாக அமைகின்றன. தனது மாமனார் வாலப்பகடைக்குப்
பின் ‘பட்டவராயன்’ எனப்பெயர் பூண்ட முத்துப்பட்டன்
தெய்வமாகிக் குடிகொண்டுள்ள பட்டவராயன் கோயில்
பொதிகைமலை மேல் தற்போது காரையாறு அணை கட்டியுள்ள
இடத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இது
சொரி முத்தையன் கோயிலுக்கு வடக்கே உள்ளது.
இக்கோயிலில் பட்டவராயன் சிலை இடுப்பில் சல்லடம், ஒரு
கையில் வல்லயம், மற்றொன்றில் சூர்க்கத்தி, தலையில்
முண்டாசு, முறுக்கிவிட்ட மீசையுடன் கலைத்திறன் விளங்கக்
காட்சியளிக்கிறது. இடுப்பில் கூடையோடு ஒரு பக்கம் திம்மக்கா,
கையில் கலயம் மற்றும் தடி ஒன்றைத் தாங்கிய நிலையில்
மறுபக்கம் பொம்மக்கா. வன்னியரை எதிர்த்துச் சண்டை
செய்யும் போது பட்டன் உபயோகித்தாகச் சொல்லப்படும்
ஈட்டியும் வல்லயமும் கோவிலினுள்
சார்த்தி
வைக்கப்பட்டுள்ளன. மக்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்திய
வல்லயங்களும் ஈட்டிகளும் கோயிலுக்கு வெளியே உள்ளன.
பட்டவராயன் சிலைக்கு அருகே அவன் வளர்த்த இரண்டு
நாய்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.
3.6.2
கதையின் உண்மைத் தன்மை
முத்துப்பட்டன்
கதையில் வரும் பாத்திரங்கள் உண்மையில்
வாழ்ந்தவர்களாகத் தோன்றுகின்றனர். சமூக உண்மை கதை
முழுவதும் ஊடுருவி நிற்கிறது. தற்காலத்தில் சொரி முத்தையன்
கோவில் நடக்கும் தீக்குளிப்பு வைபவமும் இக்கதையின்
நிகழ்ச்சிகள் உண்மையென்பதை அடையாளப் பூர்வமாகக்
காட்டுகின்றன. இந்த நிகழ்ச்சியின் போது பட்டவராயன்
கோவில் முன்பு விறகை எரிப்பார்கள். தெய்வ ஆவேசம்
கொண்டு ஆடுபவர்கள் தணலில் இறங்கி மறுபுறம் செல்வார்கள்.
அவர்கள் தணலில் இறங்குவதற்கு முன்பு சிங்கம்பட்டி
ஜமீன்தாரிடம் பாசிக்கொத்து வாங்கி அணிந்து கொண்டு
செல்வார்களாம். பாசிக்கொத்து சக்கிலியர்களின் தாலி. இதை
அணிந்து கொண்டு செல்லும் அம்மன் கொண்டிகள்
பொம்மக்கா, திம்மக்காவை உருவகப்படுத்துகிறார்கள்.
தீயிலிறங்குவது, உடன்கட்டையேறியதைக் குறிப்பிடுகிறது.
சிங்கம்பட்டி ஜமீன்தார் பாசிக்கொத்து அளிப்பது அவருடைய
முன்னோன் ஒருவன் உடன்கட்டையேற அனுமதியளித்ததைக்
குறிக்கும்.
மேலும்
பட்டவராயன் கோயிலின் முன்னுள்ள பாறையில்
இக்கோயில் தோன்றிய காலம் 999 ஸ்ரீ என்று
பொறிக்கப்பட்டுள்ளது. இது கொல்லமாண்டு. சுமார் 150
வருஷங்களுக்கு முன் இக்கோயில் தோன்றியது என
விளங்குகிறது. மற்றொரு கல்வெட்டு
இக்கோயில்
சிங்கம்பட்டியாரால் கட்டப்பட்டதென்று கூறுகிறது. இக்கோயில்
கட்டும்முன் இக்கோயிலில் உள்ள சிலைகள், இக்கோயில்
இருக்கும் இடத்திற்குச் சுமார் நான்கு மைல் கீழேயுள்ள
சுளியமுத்து பட்டவராயன் கோயிலில் இருந்ததாகவும் அது
மிகவும் பழமையான கோயில் எனவும் அதுவே ஆதி
பட்டவராயன் கோயில் எனவும் கூறுகிறார்கள். இவ்விரண்டு
கோயில்களுக்கும் நேர்த்திக் கடனாகச் செருப்புகளைச்
சேர்ப்பிக்கின்றார்கள். இது பகடை இனத்தவரின் தொழிலை
நினைவூட்டுகின்றது.
3.6.3
கதை நிகழ்ந்த இடமும் காலமும்
கதைப்பாடல்,
முத்துப்பட்டனைப் பற்றிக்
கூறும்
விவரங்களாவன : முத்துப்பட்டன் தென் ஆரிய நாட்டில்
பிறந்தவன். கொட்டாரக்கரையில் ராமராஜன் அரண்மனையில்
பணிபுரிந்தவன். அவன் தன் சகோதரர்களோடு ஊர் திரும்பும்
போது ஆரியங்கோவில், சபரிமலை, பொதிகைமலை வழியாகத்
தனவாய்க் கொட்டகைக்கு வந்தான். பாபநாசத்திற்கு
அருகிலுள்ள அரசடித்துறையில் நீர் குடித்தான். அவனது
மனைவியர் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் உடன்கட்டையேற
அனுமதி கேட்டனர். இவை சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களைக்
குறிப்பிடுகின்றன. இச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதி இன்று
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் கேரள
மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் காணப்படுகின்றன. மேற்கு
மலைத்தொடரின் தென்பகுதியில் உள்ள நிலப்பகுதி
இருபிரிவிலும் உள்ள சிற்றூர்களனைத்தும் ஆரிய நாடு
என்றழைக்கப்பட்டன.
குற்றாலக்
குறவஞ்சியில் பொதிகை மலைக் குறத்தி தன்
நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘திருக்குற்றால நாதர் தென்
ஆரிய நாடு’, ‘கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே’ என்று
வருணிக்கின்றாள். கர்நாடக ராஜாக்கள் சரித்திரத்திலும்
இப்பகுதி ஆரிய நாடென்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாயக்க
மன்னர் சாசனத்தில் தென்காசி முள்ளிநாட்டின் தென்பால்
ஆரிய நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயின் இப்பகுதி
கடந்த 350 ஆண்டுகளாகத் திருவனந்தபுரம் அரசர்கள்
ஆட்சியில் இருந்து வந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு
முன்னர், மதுரைத் தளவாய் விசுவநாத நாயக்கனின்
சேனைகளோடு தமிழகம் வந்த சக்கிலியர்கள் அல்லது
பகடைகள், தங்களை நரபலியாகப் படைத்த நாயக்கர்களின்
பிடியிலிருந்து தப்பித்து நாயக்கர் ஆட்சி பலமாக வேரூன்றாத
இந்தப் பகுதியில் வந்து குடியேறியிருக்க வேண்டும்.
மேலும்
மலையின் பல பகுதிகள் இக்கதையின் நிகழ்ச்சிகளோடு
சம்பந்தப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளன. பட்டவராயன்
கோயிலுக்குக் கிழக்கேயுள்ள இடம் ‘பசுக்கிடைவிளை’
என்றழைக்கப்படுகிறது. இங்கேதான் வாலப்பகடையின்
பசுக்கிடை இருந்ததாம். இப்பொழுதும் இங்கே பசுக்கிடை
இருக்கிறது. ‘கச்சை கட்டி முடுக்கு’ என்றொரு மலைப்பாதை
இருக்கிறது. இங்குதான் வன்னியருக்கும் பட்டவராயனுக்கும்
சண்டை நடந்ததென்பர். ‘படுகளப்பாறை’ என்ற பாறையில்தான்
பட்டன் இறந்து விழுந்து ஓடைக்கரையில் உருண்டதாகச்
சொல்வர். சக்கிலியர்களும் தொட்டியர்களும் வாழ்ந்த இடம்
‘தொட்டியர் வலசை’ என்றழைக்கப்படுகிறது. இவையாவும்
முத்துப்பட்டன் கதை உண்மையான கதை என்பதையே
வலியுறுத்துகின்றன.
260
ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட சிற்றிலக்கியமான
குற்றாலக் குறவஞ்சியில்,
செப்பருமலைமேல்
தெய்வக் கன்னியர்தான்
ஆரியங்காவா, அருட்சொரிமுத்தே
என்ற
அடிகள் இடம் பெற்றுள்ளன. முத்துப்பட்டன் கதையில்
வரும் காப்புச் செய்யுளில்,
துட்டரை
யடக்குகின்ற சொரிமுத்து ஐயன் வாசல்
பட்டன் மேல் வரவு பாடப் பால முக்கணன் காப்பாமே
என்று
இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டையும்
ஒப்பு
நோக்குவோம். குற்றாலக் குறவஞ்சி ஆரிய நாட்டையும்
சொரிமுத்து என்ற தெய்வத்தையும் குறிக்கிறது. காப்புச்
செய்யுளும் சொரி முத்தைய்யன் வாசல் பட்டன்
என்று
கூறுகிறது. குறவஞ்சி பாடப்படுவதற்கு
முன்பேயே
சொரிமுத்தையன் கோயிலும் பட்டவராயன்
கதையும்
புகழ்பெற்றிருந்தன என்பதை உணர முடிகின்றது.
சொரி
முத்தையன் கோவில் தோன்றிச் சுமார்
400 ஆண்டுகள்
இருக்கலாம். எனவே 260 ஆண்டுகளுக்கும்
300
ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட அதாவது, கி.பி.1658-ற்கும்
1738-ற்கும் இடைப்பட்ட காலத்தில் முத்துப்பட்டன்
கதை
நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள்
வருகின்றனர். |