5.1 பழமொழிகள்

மக்கள் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடுகளே பழமொழிகள். பழமொழியைச் சுட்டுவதற்குத் தமிழில் முதுசொல், முதுமொழி, பழமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம் போன்ற பல சொற்கள் வழங்கி வருகின்றன. (இவற்றுள் பின்னவை இரண்டும் தென் தமிழ்நாட்டின் வழக்குச் சொற்கள்.) இவையனைத்தும் பழமை, சுருக்கம், உவமைப்பண்பு என்ற அடிப்படையிலே அமைகின்றன. இவை காலங்காலமாக மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியவர்கள் இன்னும் தங்களின் பேச்சுகளுக்கு ஊடாக மிகுதியான பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவது அவர்களின் பேச்சுகளைப் பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாற்றுகின்றன. இத்தகைய பேச்சுகள் அவர்களை மதிப்பு வாய்ந்தவர்களாக ஆக்குகின்றன.

5.1.1 வரையறை

தமிழில் பழமொழி இலக்கியத்திற்கு முதன் முதலாக வரையறை தந்தவர் தொல்காப்பியர்.

 

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்குவரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப

 

என்பது தொல்காப்பிய நூற்பா. இந்நூற்பாவிற்கு தே. லூர்து (1988: 5) பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்:

(நுண்மை - நுண்மை, ஆழ்ந்த அறிவு; சுருக்கம் - சுருங்கக் கூறுதல்; ஒளியுடைமை - விழுமியது (தெளிவாக விளங்கச் செய்தல் (clarity); எண்மை - எளிமை; குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் - ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரும்; ஏது நுதலிய - ஒரு சூழலில் (சந்தர்ப்பத்தில்) காரணம் காட்டுவதற்கு; முதுமொழி - பன்முறையும் வழக்கில் வழங்கி வந்த பழமையான மொழி.)

இந்த விளக்கத்தினைப் பின்வருமாறு தொகுத்துச் சுட்டலாம்.

"ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக் கூடிய) ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி பழமொழி எனலாம்." இந்த வரையறை பழமொழியை விளங்கிக் கொள்ளத் துணை செய்கிறது.

5.1.2 இயல்புகள்

இக்காலத்தில் அறிஞர்கள் பலரும் பழமொழியை வரையறை செய்யவும் விளக்கவும் முற்பட்டுள்ளனர். அவர்களுள் ஆர்.சி. ட்ரென்ச் (R.C. Trench) என்பவரின் கருத்துகள் தொல்காப்பியரின் கருத்துகளை ஒத்துள்ளன என்றும், பழமொழிகளின் இயல்புகள் என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளன என்றும் தே. லூர்து (1988 : 5) குறிப்பிடுகின்றார். அக் கருத்துகள் வருமாறு:

1.

பழமொழி ஒரே மூச்சில் சொல்லக் கூடியதாய் இருக்க வேண்டும்.

2.

சுருக்கம் அதன் மூலப் பண்பாகும்.

3.

சிறந்த பொருள் தருவதாய், செறிவு மிக்கதாய் இருக்க வேண்டும்.

4.

காராசாரமாகக் கூர்மையுடன் திகழவேண்டும்.

5.

எல்லாவற்றையும் விட மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படல் வேண்டும். பழமொழி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போதே (currency) பழைய மொழியாகும் என்பதே மேற்கண்ட கருத்தாகும். பழமொழியின் இயல்பாக தே. லூர்து மேலும் சிலவற்றைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

6.

கோட்பாட்டளவில் பார்க்கும்போது ஒரு பழமொழியில் இரு சொற்கள் இருந்தே தீரும். ஒரு சொல்லில் பழமொழி அமையாது. ஆனால் ஒரு சொல்லைக் கொண்டமையும் வழக்காறுகள் உண்டு. எனினும் அவற்றைப் பழமொழி என்று கூறுவதில்லை.

7.

பழமொழிகள் வாய்மொழி இலக்கிய வழக்காறுகளில் நிலைத்த தொடர்புடையனவையாம். (Fixed phrasegenre)

8.

பழமொழி உரைநடை சார்ந்தது. எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைப் பழமொழியிலும் காணலாம்.

9.

பழமொழி, பிறிதுமொழி அணிகளைப் போலக் கருதிய பொருளை மறைத்து ஒன்று சொல்லி மற்றொன்றை விளக்குவனவாக அமையும்.

10.

பழமொழி, அது வழங்கும் இயற்கைச் சூழலைப் பொருத்தே பழமொழியாகும்.

11.

பழமொழி உருவகமாகவும் அமையும்.

12.

பழமொழி உவமைப் பண்பு கொண்டது.

13.

பழமொழி நேர் பொருளும் உணர்த்தும்.

14.

பழமொழி தற்சார்பற்றது

15.

வாழ்க்கை அனுபவத்திலிருந்து சிக்கலைத் தீர்க்க உதவுவது பழமொழி.

16.

சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன.

 

பழமொழியின் இயல்புகளாக மேலே கூறப்பட்ட கருத்துகள் பழமொழிகளைப் புரிந்துகொள்ள, பிற இலக்கிய வகைகளிலிருந்து வேறு பிரித்து அறிய உதவும் என்பதில் ஐயமில்லை.

5.1.3 சேகரிப்பும், பதிப்பும், ஆய்வும்

தமிழ் எழுத்திலக்கியப் படைப்பாளிகள் சங்ககாலந் தொட்டு இக்காலம் வரை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். எழுத்திலக்கியத்தைப் படைக்கும் போது நாட்டுப்புற இலக்கிய வடிவங்களின் கூறுகளைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்களைச் செழுமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக எப்போதெல்லாம் மக்களை ஒருங்கிணைக்கும் இயக்கங்கள் வலுப்பெற்றனவோ அப்போதெல்லாம் எழுத்திலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியங்களின் தாக்கம் மிகுதியாக இருந்துள்ளது.

மக்களிடையே கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் சிறந்த முறையில் பங்காற்ற முடியும் என்பதை எழுத்திலக்கியப் படைப்பாளிகள் நன்கு உணர்ந்திருந்தாலுங் கூட அவற்றைத் தனியே சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. இருப்பினும் இலக்கிய வகைகளுள் பழமொழி மட்டுமே மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பழமொழி நானூறு என்ற தனி நூலாக உருவாக்கப்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு பழமொழியைப் பொதிந்து முன்றுறையரையனார் இந்த நூலை உருவாக்கினார். இந்நூல் பழமொழிகளை உள்ளது உள்ளபடி சேகரித்து வைக்கவில்லையாயினும் தமிழ்ப் பழமொழியின் முதல் தொகுப்பாக இதனைக் கருதலாம். தொல்காப்பியர் பழமொழியைச் சுட்டுவதற்கு முதுமொழி என்ற சொல் பயன்படுத்தினாலும் சங்க இலக்கியத்திலேயே பழமொழி என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.

 

நன்றுபடு மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபடு பழமொழி

 

என்னும் அகநானூற்றுப்பாடல் தொடரில் பழமொழி என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் காண்க. இதே பெயரில் பழமொழி நானூறும் உருவாக்கப்பட்டுள்ளது. பழமொழி நானூறு நூலைத் தொடர்ந்து தோன்றிய நீதி சதகங்களிலும், நாலடியார், இன்னாநாற்பது முதலான நீதி நூல்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பர் பாடிய பழமொழிப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியைப் பயன்படுத்துகின்றார். இவையெல்லாம் நமக்கு கிடைக்கும் பழமொழிகளின் வரலாற்றுப் பதிவுகள்.

• பாதுகாப்பு

பழமொழிகளைச் சேகரித்து அவற்றை உள்ளது உள்ளபடி பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு முதன் முதலில் அயல் நாட்டிலிருந்து மதத்தைப் பரப்புவதற்கெனத் தமிழகத்திற்கு வந்த பாதிரியார்களையே சாரும். மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப் பழகவும் மிகுதியாக உதவக் கூடிய நாட்டுப்புற இலக்கிய வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச் சேகரித்து அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு அவற்றை வெளியிட்டனர். பீட்டர் பெர்சிவல் (Peter Percivel) 1842இல் 1873 பழமொழிகளைக் கொண்ட பழமொழி அகராதியை ஆங்கில மொழிபெயர்ப்போடு வெளியிட்டார். இவரே தமிழில் பழமொழிகளைத் தொகுத்து ’உள்ளது உள்ளபடி’ வெளியிட்டதில் முதன்மையானவர். ஜான் லாசரஸ் 1894இல் தமிழ்ப் பழமொழி அகராதியைச் சுருக்கமான ஆங்கில விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் 9417 பழமொழிகள் உள்ளன. ஹெர்மான் ஜென்ஸன் 1897இல் தமிழ்ப் பழமொழிகளின் வகைப்படுத்தப்பட்ட தொகுப்பு என்னும் நூலை வெளியிட்டார். தமிழ்ப் பழமொழித் தொகுப்பாளர்களில் இவர் ஒருவரே அவை வழங்கப்படும் சூழல் பற்றிய சிந்தனையோடு பழமொழிகளைத் தொகுத்தவர் என்று தே.லூர்து குறிப்பிடுகிறார். மேலும் அயல் நாட்டினர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகளில் காணப்படும் குறைபாடுகளையும் இவர் சுட்டியுள்ளார்.

• பதிப்புகள்

தமிழகத்திலிருந்து செல்வக் கேசவராய முதலியார் என்பவர் இணைப் பழமொழிகள் (Parallel Proverbs) என்னும் தலைப்பில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என்னும் மொழிபெயர்ப்புடன் 1903ஆம் ஆண்டு பழமொழித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். சமீபகாலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான பழமொழித் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. கி.வா. ஜகந்நாதன் சுமார் இருபதாயிரம் பழமொழிகள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுள்ளார். சமீபகாலங்களில் வெளிவந்த பழமொழித் தொகுப்புகள் அனைத்தும் முன்னர் வெளிவந்த பழமொழித் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பழமொழிகளையும் கொண்டதாகவே அமைந்துள்ளன. பழமொழி அல்லாத சில மரபுத் தொடர்களையும், கதைத் துணுக்குகளையும், இலக்கியத் தொடர்களையும் பழமொழிகளாகக் கருதி அவற்றைப் பழமொழித் தொகுப்புகளில் சேர்த்துள்ள போக்கினைத் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை வெளிவந்த அனைத்துத் தொகுப்புகளிலும் காண முடிகின்றது.

• ஆய்வுகள்

தமிழ்ப் பழமொழிகளை ஆராய்ந்தவர்கள் மிகக் குறைவு. சாலை. இளந்திரையன், தே. லூர்து, வ. பெருமாள், நா. வானமாமலை போன்ற ஒருசிலரே தமிழ்ப் பழமொழிகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள். இவர்களுள் தே. லூர்து பழமொழிகளை அவை வழங்கப்படும் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு நுணுக்கமாக ஆராய்ந்தார். மேலும் பழமொழிகளின் அமைப்புகளையும் இவர் ஆராய்ந்து பிற நாட்டுப் பழமொழிகளிலிருந்து தமிழ்ப் பழமொழிகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் சுட்டியுள்ளார்.

நா. வானமாமலை திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் - ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையும் குறிப்பிடத் தகுந்தது. இக்கட்டுரையில் திரிபுரி உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.