1.2 சடங்கு (Ritual)

சடங்குகளும் நம்பிக்கைகளும் என்னும் இப்பாடத்தில் நாட்டுப்புற மக்களால் மேற்கொள்ளப்படும் சடங்குகள், அவர்தம் வாழ்வில் உலாவரும் நம்பிக்கைகள், சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் உள்ள உறவு நிலை, நாட்டுப்புறப் பண்பாட்டில் அவை பெறும் இடம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்படுகிறது.

சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரன்முறை ஆகும். மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். ‘புனிதத் தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பே சடங்கு’ என்றும், ‘நம்பிக்கைகளின் அடிப்படையில் மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் புனிதச் செயல்களே சடங்குகள்' என்றும் சடங்கு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் ‘சடங்கு என்பது புனிதத்துவம் கருதி ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையுடன், குறியீட்டு நிலையில் மக்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடு’ என்று விளங்கிக் கொள்ளலாம்.

1.2.1 சடங்கின் தோற்றம்

மனிதன் தோன்றிய அன்றே சடங்கும் தோற்றம் பெற்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சடங்கானது மனித மனத்தின் வெளிப்பாடாகும். தொடக்கக் கால இனக்குழுச் சமூகத்தில் (Primitive Society) சடங்குகளே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே சடங்குகளாகவும் இருந்தன. வேட்டைக்குச் செல்லும் முன் வேட்டைச் சடங்கு நிகழ்த்திச் சென்றதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இத்தகைய சடங்குகளே இனக்குழுச் சமூகத்தை இயக்கின; இணைத்தன. இந்நிலை இன்றும் தொடர்ந்து வருவதை நீங்கள் அறியலாம். இயற்கை விளைவுகளால் நன்மை ஏற்படும் பொழுது மகிழ்ச்சியடைந்த மனிதன் அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டும், பாதிப்பு அடையும் போது இயற்கையைத் திருப்திப்படுத்தும் வகையிலும், நம்பிக்கையின் அடிப்படையில் சில சடங்குகளை மேற்கொண்டான். மனிதனால் குறியீட்டு நிலையில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய சடங்குகள் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டு நிலைத்த வடிவம் பெற்றன. தொடர் செயல்பாட்டிற்கு உரிய ஒன்றாய் விளங்கின; விளங்கி வருகின்றன.

1.2.2 சடங்கின் நோக்கம்

சடங்கு பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பம் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்ப துயரங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளைத் தண்டிக்க, இயற்கையை வசப்படுத்த, விஞ்சிய ஆற்றலைப் பெற என்றவாறு பல்வேறு வகை நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்னிட்டுச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் முழுக்க முழுக்க மக்களின் நம்பிக்கை சார்ந்தவை; கூட்டாக மேற்கொள்ளப்படுபவை.

1.2.3 சடங்கின் தன்மை

சடங்கின் தன்மை பன்முகம் கொண்டது. சடங்கின் சிறப்புக் கூறு அது செயல் வடிவம் கொண்டது என்பதுதான். சடங்கு நிகழ்த்தப் படுவதாகும். நம்பிக்கை மனிதரின் உணர்வு நிலையில் இருக்க, சடங்கு செயல் வடிவில் நிகழ்த்தப்படுவது. ஒன்றைச் செய்து மற்றொன்றைப் பெறுவது சடங்கின் நோக்கமாக இருப்பதால், நிகழ்த்துதல் என்பது இதன் அடிப்படைக் கூறாக அமைகிறது. பெரும்பாலான சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப் படுகின்றன. சடங்கின் மற்றொரு சிறப்புக் கூறு பலரின் கூட்டு முயற்சியால் அது நிகழ்த்தப் படுவதாகும். சில சூழல்களில் தனி மனிதரால் நிகழ்த்தப் பட்டாலும் பெரும்பாலும் கூட்டுத் தன்மை உடையவையாக, சமூகம் சார்ந்தவையாகவே நிகழ்த்தப் படுகின்றன. ஏனெனில், சடங்கு நிகழ்வு என்பது சடங்கு செய்வோர், சடங்கில் பங்கேற்போர், பார்வையாளர் ஆகியோருடைய நடத்தை முறைகளின் தொகுப்பாகும்.

1.2.4 சடங்குகள் - வகைப்பாடு

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை, ஏன்? இறந்த பின்பும் கூடப் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சடங்கின் பின்னணியிலும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சடங்குகளை வகைப்படுத்தி விளக்குவதன் வாயிலாக எந்தெந்தச் சடங்குகள் எம்மாதிரியான சூழல்களில் என்னென்ன காரணங்களுக்காக நிகழ்த்தப் படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாட்டுப்புற மக்களின் வாழ்வில் இடம்பெறும் சடங்குகளைக் கீழே கண்டவாறு வகைப்படுத்தலாம்.

சடங்குகள்

இவ்வகைப்பாட்டில் உள்ள வழிபாட்டுச் சடங்குகள் குறித்து ‘வழிபாடும் திருவிழாக்களும்’ என்ற இரண்டாம் பாடத்தில் எடுத்துரைக்கப்படுவதால் ஏனைய மூன்று சடங்கு முறைகள் மட்டுமே இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.