1.4 வளமைச் சடங்குகள் (Fertility Rituals)

இயற்கை நமக்கு உதவ வேண்டுமாயின் நாமும் இயற்கையைப் போலச் செய்து காட்ட வேண்டும். நாம் செய்வதைப் பார்த்து இயற்கையும் அதே போலச் செய்யும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப் படுபவையே வளமைச் சடங்குகள் எனப்படுகின்றன. இவற்றைச் செழிப்புச் சடங்குகள் என்றும் குறிப்பிடுவது உண்டு. இயற்கையின் சீற்றத்திற்கும் தாக்குதலும் உட்பட்ட நிலையிலேயே மனிதரால் இத்தகைய சடங்குகள் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறுவதுண்டு. இது குறித்த சில சடங்கு முறைகளை எடுத்துக் கூறினால் உங்களுக்கு எளிதில் விளங்கும்.

1.4.1 மழைச் சடங்கு

மழைச் சடங்கு நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளுள் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். நீரின்றி அமையாது உலகு என்பார் திருவள்ளுவர். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று மழையை வாழ்த்திப் பாடுவார் இளங்கோவடிகள். மழைபொய்த்தால் மண்ணில் உயிர்கள் ஏது? பயிர்கள் ஏது? மண்வளம் செழிக்க மழைவளம் வேண்டும். நாட்டுப்புற மக்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மையாகும். வேளாண் பயிர்கள் வளர மழை அவசியம். அதுவும் குறித்த காலத்தில் மழை பெய்தால்தான் பலன் பெற முடியும். இல்லையென்றால் வறுமைதான். மழையின்றிப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் மழை பொழிய வேண்டி நாட்டுப்புற மக்களால் பல்வேறு சடங்குகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருமணமான பெண்களும் கன்னிப் பெண்களும் வீடு வீடாகச் சென்று, மழைக் கஞ்சி..... மழைக் கஞ்சி என்று கூவி அரிசி, மாவு தானியங்களைப் பிச்சையாகச் பெற்று வந்து ஊரின் பொது இடத்தில் வைத்து உப்பில்லா மழைக் கஞ்சி காய்ச்சுவர். காய்ச்சிய கஞ்சியை ஊர்மக்கள் அனைவருக்கும் வழங்குவர். பிறகு வயது முதிர்ந்த பெண்கள் கஞ்சி காய்ச்சிய சட்டிகளைக் கீழே போட்டு உடைத்து மாரடித்து (மார்பில் கைகளால் அடித்து) ஒப்பாரி பாடுவர்.

மானத்த நம்பியல்லோ
மக்களைத்தான் பெத்தோமையா
மக்களைத்தான் காப்பதற்கு
இப்போமழை பெய்யவேணும்
மழைக்குவரம் கேட்டு நாங்க
மருகுகிறோம் சாமி

(மானம் = வானம்,மழை, மருகுதல் = வாடுதல்)

என்று ஒப்பாரி பாடிக் கொண்டே சுடுகாட்டிற்குச் செல்வர். சுடுகாட்டிற்குச் செல்வோரை ஏனைய பெண்கள் வழிமறித்து மழைபெய்து விடும்; நம் பஞ்சமெல்லாம் தீர்ந்து விடும் வாருங்கள் என்று கூறித் திரும்ப அழைத்து வருவர். அன்றோ அடுத்த நாளோ மழை பெய்யும். தாய்மார்கள் விடும் கண்ணீரைப் பார்த்து வருணனும் கண்ணீர் விடுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ‘போலச் செய்தலாக’வே இம்மழைச் சடங்கு நடத்தப்படுகிறது.

பெண்கள் நிர்வாண பூசை செய்தல், கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தல், கொடும்பாவி கட்டி இழுத்தல் போன்ற சடங்குகளும் மழை வேண்டி மேற்கொள்ளப் படுவதுண்டு.

மழைச் சடங்குகள் சமூக நன்மை கருதி நாட்டுப்புற மக்களால் கூட்டாக ஒன்றிணைந்து செய்யப்படுபவை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். மழை வேண்டிச் சடங்கு செய்தல் இன்றளவும் வழக்கமாக உள்ளது.

1.4.2 முளைப்பாரிச் சடங்கு

முளைப்பாரிச் சடங்கும் வளமைச் சடங்கின் பாற்பட்டதே ஆகும். தெய்வ வழிபாடுகளின் போது வீடுகளில், மண் சட்டியில் எரு, மணலிட்டு நவ தானியங்களை விதைத்து நீருற்றி உயரமாக முளைக்கச் செய்து சடங்கிற்குப் பயன்படுத்துவதே முளைப்பாரிச் சடங்கு எனப்படும். முளைப் பாலிகை என்ற சொல்லே பேச்சு வழக்கில் முளைப்பாரியாக வழங்கப்படுகிறது. முளைப் பாலிகை என்பதற்கு ‘நவ தானிய முளைத் தாழி’ என்பது பொருளாகும். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். கோயில் விழாக் காலங்களில் வீடு தவறாமல் முளைப்பாரி வளர்த்துத் தெய்வத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் தொன்று தொட்டு நிகழ்ந்து வருவதாகும். முளைப்பாரியில் பயன்படுத்தப்படும் பொருள்களையும், முளைப்பயிர் செழித்து வளரும் அழகினையும், எந்தத் தெய்வத்திற்காக முளைப்பாரி வளர்க்கப் படுகிறது. அந்தத் தெய்வத்திற்குரிய சிறப்புகள் என்ன என்பது பற்றியும் கும்மி கொட்டிப் பாடுவது முளைப்பாரிச் சடங்கின் தனிச் சிறப்பாகும்.

முளைப்பாரிப் பாடல்

தானானை தானானை தானானை தானானை

வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சு
வட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறு
ஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்து
மாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து

கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப் பயறு மிளகுளயுஞ் சிறுபயறு முத்தான மணிப்பயறு மொளபோட்ட ஒண்ணா நாளு ஓரெலையாம் முளைப்பாரி ஓரெலைக்குங் காப்புக் கட்டி ஒருபானை பொங்கலிட்டு

முளைப்பாரி போடுங்கம்மா முத்தாலம்மனைப் பாடுங்கம்மா
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை

ஓடு + ஒடச்சு = ஓடொடச்சு
ஆடு + ஆம் + தொழு = ஆட்டாந்தொழு
ஆட்டு எரு = ஆட்டுச் சாணம்
மாட்டு எரு = மாட்டுச் சாணம் இயற்கை உரம்

என்று முளைப்பாரிப் பாடல் பெண்களால் பாடப்படுவதுண்டு. முளைப்பாரி எந்த அளவிற்குச் செழித்து வளர்கின்றதோ அந்த அளவிற்கு விளை நிலங்களிலும் அந்த ஆண்டு பயிர்களும் செழித்து வளர்ந்து நல்ல விளைவைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வளமைச் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

வழிபாடுகளில் மட்டுமல்லாது திருமணச் சடங்கிலும் முளைப்பாரி தவறாமல் இடம்பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். கோவலன், கண்ணகி திருமணத்தின் போது பெண்கள் தானிய முளைகளைக் கொண்ட குடங்களை ஏந்தி வந்ததை விரித்த பாலிகை முளைக்குட நிரையினர் என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது.

மழைச் சடங்கும் முளைப்பாரிச் சடங்கும் தானியங்களின் செழிப்பையும், மனித வாழ்வில் செழிப்பையும் தூண்டச் செய்யும் வளமைச் சடங்குகளாகப் பெண்களால் தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இச்சடங்கின் வழி நாட்டுப்புற மக்கள் இயற்கையின் மீது கொண்டுள்ள அசையா நம்பிக்கை வெளிப்படுவதையும் உணரலாம்.