| 1.6
 நம்பிக்கை
  | 
 
 
     
       யானையின் 
        பலம் தும்பிக்கையிலே 
        மனிதனின் பலம் நம்பிக்கையிலே 
      
  | 
 
 
    |  
        என்ற பழமொழியை 
        நீங்கள் கேட்டிருப்பீர்கள். நம்பிக்கையானது மனிதனோடு பிறந்து மனிதனோடு அழிவதாகும். 
        மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது. நம்பிக்கைகள் 
        தாமே மனிதனை இயக்குகின்றன. இதை எவராலும் மறுக்க முடியுமா? முடியாதுதானே.  | 
 
 
    |  
       ‘இயற்கையின் 
        புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும், திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் 
        அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே 
        நம்பிக்கைகள்’ ஆகும். இந்நம்பிக்கைகள் மனித மனத்தின் வெளிப்பாடுகளாகும். 
        குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மனிதனின் அச்ச உணர்வே இந்நம்பிக்கைகளின் தோற்றத்திற்குக் 
        காரணம் எனலாம். மனித வாழ்வில் நம்பிக்கைகள் என்று தோன்றின என்று திட்ட வட்டமாகக் 
        கூற இயலாது என்றாலும், இவை மக்களின் வாழ்வில் தொடர்ந்து இருந்து வருவனவாகும். 
        தெய்வங்கள், தெய்வங்களின் தோற்றம், அருள், சக்தி, வழிபாடு, சடங்குகள், சாத்திரங்கள் 
        இவை எல்லாமே நம்பிக்கைகளின் விளைவில் தோன்றியவையே. இந்நம்பிக்கைகளை வகைப்படுத்திக் 
        காணலாம்.  
      
  | 
 
 
    |  1.6.1 
      நம்பிக்கைகள் - வகைப்பாடு  | 
 
 
    |   
       
        நம்பிக்கைகளின் 
        நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின்
        அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை, திட நம்பிக்கை, மூட
        நம்பிக்கை என்று வகைப்படுத்துவர்.
        
         
  | 
 
 
 | 
  நம்பிக்கைகள் 
  | 
 
 
 | 
   
  | 
 
 
 | நம்பிக்கை
 (Belief) 
  | 
 திட
 நம்பிக்கை
 (Faith)
  | 
 மூட
 நம்பிக்கை
 (Superstition)
  | 
 
 
    |   
        
        காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை 
        நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் 
        தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (எ-டு, 
        நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் 
        என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட 
        நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. சிந்தனைத் 
        திறன் மிக்க சமூகத்தில் மூட நம்பிக்கைகள் குறைவாகவும், சிந்தனைத் திறன் குறைந்த 
        சமூகத்தில் மூட நம்பிக்கைகள் மிகுதியாகவும் இருக்கும். இவ்வாறு சமூகத்தில் 
        நிலவும் மூட நம்பிக்கைகளைக் கொண்டு அச்சமூகத்தின் அறிவுத் திறனை அளவிட முடியும் 
        என்று கூடக் கூறுவதுண்டு. நம்பிக்கை என்பது கற்றவர், கல்லாதவர், பணக்காரர், 
        ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமும் வழக்கில் இருந்துவரும் 
        ஒன்றாகும். ஒரு சமூகத்தினரின் நம்பிக்கைகள் மற்றொரு சமூகத்தினருக்கு மூட 
        நம்பிக்கையாகத் தோன்றலாம். சான்றாக, பலியிடுதல் என்பது வைதீக மரபினருக்கு 
        மூட நம்பிக்கையாகத் தோன்றுவதைக் கூறலாம். அதேபோல் வைதீக மரபில் உள்ள நம்பிக்கைகளை 
        ஏனையோர் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். எனவே நம்பிக்கைகளை அவற்றின் பின்புலத்தில் 
        வைத்துப் புரிந்து கொள்ள முயல வேண்டுமே தவிர மூட நம்பிக்கை என்று எவற்றையும் 
        ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. ஏனெனில், நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் காரண காரியத்திற்கு 
        உட்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.  
  |