2.1 வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும் |
||||||||||||
மனித மனம் ஒரு பலமற்ற கொடியைப் போன்றது. அதனால் தனித்து நிற்கவோ, தன்னியலாகச் செயல்படவோ இயலாது. மானசீகமான ஏதாவது ஒன்றைப் (அது தெய்வமாகவோ தலைவராகவோ இருக்கலாம்) பற்றிக் கொண்டு படர்ந்து எழுவதே அதன் இயல்பாகும். இத்தகைய மனித மன நிலையின் விளைவுகளே மந்திரம், சடங்கு, நம்பிக்கை, வழிபாடு போன்ற புனைவாக்கங்கள் எனலாம். இவை தம்முள் ஒன்றிணைந்து, உருப்பெற்று வழிபாட்டு மரபாக, நாட்டுப்புறச் சமயமாகத் தோற்றம் பெற்று வளர்ந்துள்ளன. |
||||||||||||
‘வழிபடு’ என்பதிலிருந்து பிறந்தது வழிபாடு என்னும் சொல். வழிபடு என்பதற்கு வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை முறை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் பூசனை முறைகளுமே வழிபாடு என்றும், இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு என்றும், உள்ளத்தின் கதவுகளை இறைவனுக்காகத் திறந்து வைப்பதே வழிபாடு என்றும் வழிபாடு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. |
||||||||||||
மேற்கண்ட கருத்துகளின் வழி ‘உயர் நிலையான ஒன்றை உள்ளத்தால் நெருங்கவும் உணர முற்படவும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகளே வழிபாடு’ என்று தெளிவு பெறலாம். |
||||||||||||
இயற்கையோடு இணைந்து தொடங்கிய மனித வாழ்வு பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்திருப்பதைப் போல், நம்பிக்கை அடிப்படையில் தோன்றிய வழிபாடும் வளர்ந்தே வந்துள்ளது. இயற்கை வழிபாடு தொடங்கி இறை வழிபாடு, தனிமனித வழிபாடு என்று பல்கிப் பெருகி வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு கூறாக வழிபாடு நின்று நிலைத்துள்ளது. |
||||||||||||
|
||||||||||||
மனிதனின் அச்ச உணர்வும் குற்ற மனப்பான்மையுமே வழிபாடு தோன்றக் காரணம் எனலாம். இயற்கையானது இடி, மழை, புயலின் வாயிலாக மனிதனுக்கு அச்சமூட்டியது. தான் செய்த குற்றமே இயற்கையின் சீற்றத்திற்குக் காரணம் என்று நம்பிய மனிதன் அவற்றையே வணங்கத் தொடங்கினான். அது அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டியது. இதனால் இயற்கை வழிபாடு வழிபாட்டின் தொடக்கமாக அமைந்தது. |
||||||||||||
|
||||||||||||
இயற்கைச் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலமரம், தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. |
||||||||||||
தெய்வங்களுக்கான மரங்கள் |
||||||||||||
|
||||||||||||
மரங்கள் வளமையின் குறியீடாய்க் கருதி வணங்கப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் ஏதாவதொரு மரத்தின் கீழ் அமைந்திருப்பதையும் மரத்தோடு இணைத்து அவை வழிபடப் படுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். |
||||||||||||
|
||||||||||||
‘மனிதனுக்கு நன்மை செய்யும் ஆற்றல், சில பொருட்களில் உள்ளீடாக அமைந்துள்ளது’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே போலி உரு வழிபாடு ஆகும். பறவைகள், விலங்குகள், ஆயுதங்கள், பொம்மைகள், வேட்டைக் கருவிகள், இசைக் கருவிகள், வேளாண்மைக் கருவிகள், சிலுவை, முன்னோர் பயன்படுத்திய புனிதப் பொருட்கள் போன்றவை போலிஉரு வழிபாட்டில் இடம் பெறுவதுண்டு. குறிப்பிட்ட போலிஉரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதுண்டு. |
||||||||||||
இன்று நீ்ங்கள் பார்க்கும் கரகம் எடுத்தல், குதிரை எடுப்பு, கல் நடுதல், சூலாயுதம், வேல் ஊன்றுதல் போன்றவையும் போலிஉரு வழிபாட்டின் வளர்ச்சியே ஆகும். |
||||||||||||
|
||||||||||||
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தனது முன்னோர்களையும் தாய், தந்தையரையும் போற்றும் வகையில் மனிதன் அவர்களைத் தெய்வமாக வணங்கத் தொடங்கினான். இதனால் முன்னோர்கள் நன்மைகளைச் செய்து காப்பதாகவும் நம்பினான். இதன் விளைவாகத் தோன்றியதே முன்னோர் வழிபாடு ஆகும். முன்னோர் வழிபாட்டிற்கு ஆவி பற்றிய நம்பிக்கையே அடிப்படை என்று கூறப்படுவதுண்டு. |
||||||||||||
போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்தல், பத்தினிக்கல் வழிபாடு, சமாதி வைத்தல் போன்றவையும் இதனோடு தொடர்புடையவை ஆகும். சிறு தெய்வ வழிபாடுகள் முன்னோர் வழிபாட்டின் வளர்ச்சி நிலையே என்று உறுதியாகக் கூறலாம். சீனா, எகிப்து, உரோம் போன்ற நாடுகளிலும் முன்னோர் வழிபாடு இருப்பதை அறிய முடிகிறது. |
||||||||||||
மேற்குறிப்பிட்ட இயற்கை வழிபாடு, மர வழிபாடு, போலிஉரு வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய நான்கும் தொடக்கக் கால வழிபாடுகளாக விளங்குகின்றன. |
||||||||||||
மனித சமூக வாழ்வில் இடம் பெறும் சமூக நிறுவனங்களில் சமயமும் ஒன்றாகும். ‘சமைத்தல்’ என்பதிலிருந்து ‘சமயம்’ என்ற சொல் உருவானதாகக் கூறப்படும். சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் இவற்றின் கூட்டுக் கலவையில் தோன்றிய சமூக நிறுவனமே சமயம் ஆகும். உலகில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு சமயத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும் என்னும் அளவிற்கு இது செழித்து வளர்ந்துள்ளது. நீங்களும் இதில் அடக்கம்தான். உண்மைதானே? |
||||||||||||
இதில் பெருஞ்சமயம், நாட்டுப்புறச் சமயம் என்ற இரு பிரிவுகள் உண்டு. நாட்டுப்புற மக்களின் வழிபாட்டு மரபுகள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவை நாட்டுப்புறச் சமயமாகக் கொள்ளப்படுகின்றன. பாமர மக்களால் ஆழமாக உணரப்பட்டும், பின்பற்றப்பட்டும், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட்டு வரும் மரபுத் தொகுதியாகவும் நாட்டுப்புறச் சமயம் விளங்குகிறது. ஆனால் பெருஞ்சமய மரபு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். |
||||||||||||
நாட்டுப்புறச் சமய மரபிற்கு உட்பட்டவை நாட்டுப்புறத் தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என்றும்; பெருஞ்சமய மரபிற்கு உட்பட்டவை பெருந்தெய்வங்கள், புராணத் தெய்வங்கள் என்றும் பிரித்து வழங்கப் படுகின்றன, வணங்கப் படுகின்றன. |