3.4 மந்திர மருத்துவம்

தெய்வ நம்பிக்கையும் ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மருத்துவமும் மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

புராதனக் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளைப் புரிந்துகொள்ள இயலாத மனிதன் தன் மன ரீதியான அச்சத்தைப் போக்கவும் இயற்கையினைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெறவும் உருவாக்கப்பட்டதே மந்திர மருத்துவமாகும்.

மந்திர மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தின் ஒரு கூறாக விளங்கி வருகிறது. நோயின் தன்மை அறியப்பட்ட நோய்களுக்கும் மருந்து. மருத்துவம் இல்லாத நோய்களுக்கும் தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தின் துணை நாடப்படுகிறது.

நோய்களுக்குரிய காரணங்கள்

மந்திர மருத்துவத்தில் நோய்கள் உண்டாவதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கூறப்படுகின்றன. அவை தெய்வக் குற்றம், தீய ஆவிகளின் செயல், கண்ணேறு, செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், முன்னோர் செய்த பாவம், வசிய மருந்து உண்ணுதல் என்பனவாகும். இவற்றால் ஏற்படும் நோய்களுக்கு மக்கள் மந்திர மருத்துவ முறையையே நாடுகின்றனர்.

தீர்வுகள்

மந்திர மருத்துவத்தில் நோய்கள் மந்திரித்தல். திருநீறு போடுதல், கோளாறு பார்த்தல், பார்வை பார்த்தல், கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், அக்கி எழுதுதல், கயிறு, ஓலை, தகடு மந்திரித்தல், நேர்த்திக் கடன் செய்தல் என்ற முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன.

திடீரெனக் கைகால்கள் செயலிழத்தல், பைத்தியம் பிடித்தல், பார்வைக் கோளாறு போன்றவை செய்வினையால் விளையும் தீய ஆவிகளின் செயல்களாக நம்பப்படுகின்றன. இதுபோன்ற நோய்களைப் போக்கச் செய்வினை எடுத்தல், யந்திரங்கள் அடங்கிய தாயத்துகளை நோயாளிக்கு அணிவித்தல், பேயோட்டுதல் போன்ற மந்திரச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன.

அம்மை நோயினைத் தெய்வக் குற்றமாகக் கருதி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்யப்படுகிறது. நாட்டுப்புறங்களில் குழந்தைகளுக்குக் காய்ச்சல், இருமல், சளி வந்தால் மருத்துவரை நாடாமல் முதலில் மந்திரிப்பவர்களையே நாடும் முறை இன்றும் வழக்கில் உள்ளது.

மருந்தும் மந்திரமும்

மருந்து மருத்துவ முறை உடலியல் நோய்களையும் மந்திர மருத்துவ முறை உளவியல் நோய்களையும் போக்குகிறது எனலாம். மந்திர மருத்துவம் முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.