1.1 தோற்றமும் பிள்ளைப் பருவமும்

தமிழ்நாட்டுப் பெருங் கவிஞர்களுள் ஒருவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் என்ற ஊரில், 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாளில் (தமிழ்க் கணக்குப் படி சித்திரபானு ஆண்டு கார்த்திகை மாதம், 27ஆம் நாள் மூலநட்சத்திரத்தில்) பிறந்தார். தந்தையார் பெயர் சின்னசாமி ஐயர்; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். பிற்காலத்தில் 'மகாகவி' என்று அனைவராலும் மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப் பெற்ற பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம். இது அவருடைய பாட்டனாரின் பெயர். இப்பெயரைச் செல்லமாகச் சுருக்கிச் 'சுப்பையா' என்றே அவருடைய உற்றாரும் உறவினரும் அழைத்தனர்.

1.1.1 இளமைப் பருவ ஈடுபாடு

சின்னசாமி ஐயர் அந்த நாளில் எட்டயபுரம் மன்னரின் சமஸ்தானத்தில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்தார். சுப்பையா இளமைப் பருவத்தில் தம் தந்தையிடமே தொடக்கக் கல்வி கற்றார். சின்னசாமி ஐயர் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்; தமிழில் புலமை மிக்கவர்; கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்; கூரிய மதி நுட்பம் கொண்டவர். எனவே, அவர் தம் மகனும் கணிதம், ஆங்கிலம் போன்ற துறைகளில் புலமை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சுப்பையாவோ கவிதையில் நாட்டம் கொண்டிருந்தான். நல்ல தமிழ்க் கவிதை புனைய விரும்பினான்.  தீயைப் போல ஒளி வீசும் கவிதை, இந்த வையகத்தையே காத்து வளர்த்திடக் கூடிய கவிதை.  இதுவே அவன் கனவாக இருந்தது. சுப்பையாவின் இளமைப் பருவம் பற்றி திரு ரா.அ.பத்மநாபன் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது:

“சுப்பையாவுக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடில்லை. கணக்கும் யந்திரக் கலையும் வேப்பங் காயாகக் கசந்தன. தகப்பனார் 'கணக்குப் போடு' என்றால், அவன் மனதுக்குள், 'கணக்கு', 'பிணக்கு', 'வணக்கு', 'ஆமணக்கு' என்று எதுகையும் மோனையுமாக அடுக்கிக் கொண்டே போவான்.” (பாரதியார், பக். 4)

1.1.2 தாயார் மறைவு

சுப்பையா 1887ஆம் ஆண்டில், தம் ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். தாயற்ற சேயான அவர், சிறிது காலம் தாய்வழிப் பாட்டனாரின் வீட்டில் வளர்க்கப் பெற்றார்.

என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய்        (சுயசரிதை: 20)

எனப் பிற்காலத்தில் பாடிய 'சுயசரிதை'யில் தம் தாயைப் பற்றிய நினைவைப் பதிவு செய்துள்ளார் பாரதியார். தாயின் மறைவுக்குப் பிறகு, பாட்டியான பாகீரதி அம்மாளே சுப்பையாவை அன்புடன் வளர்த்து வந்தார்.

1.1.3 கவிதையில் ஆர்வம்

1889ஆம் ஆண்டில் சின்னசாமி ஐயர், வள்ளியம்மாள் என்னும் மங்கை நல்லாளை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். அச் சமயம் குலமரபுப்படி சிறுவன் சுப்பையாவுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. சிற்றன்னையான வள்ளியம்மைதான் சுப்பையாவைப் பரிவுடன் போற்றி வளர்த்த வளர்ப்புத் தாயார் ஆவார். பிள்ளைப்பருவத்தில் சுப்பையா தம் தந்தையிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார். சுப்பையாவை உரிய பருவத்தில் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளியில் படிக்கும் போதே, சுப்பையா தம் தந்தையுடன் எட்டயபுரம் சமஸ்தானத்திற்குச் செல்வார்; அங்கே நடைபெறும் விவாதங்களைக் கூர்ந்து கேட்பார்.  தந்தையும் கல்வியறிவு மிக்கவர்; பழகிய இடமோ கற்றோர் அவை. எனவே இயற்கையிலேயே அதுவும் இளமையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் சுப்பையாவுக்கு வாய்த்து விட்டது. அவர் தம் ஏழாம் வயதிலேயே கவிதை புனையத் தொடங்கி விட்டார். அவ்வப்போது சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிகளைக் கொண்டே அருமையான பாடல்களைப் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அத்தகைய சுவையான நிகழ்ச்சி ஒன்று இதோ!

 

ஒரு முறை எட்டயபுரம் சமஸ்தானத்தில் கூட்டம் கூடியிருந்தது. காந்திமதி நாதன் என்ற புலவரும் அவையில் இருந்தார். சிறுவனான சுப்பையாவும் இருந்தார். சுப்பையாவைச் சற்று ஏளனம் (கிண்டல்) செய்ய விரும்பினார் புலவர். 'பாரதி சின்னப் பயல்' என்று முடியும் படியாக ஒரு வெண்பா இயற்ற முடியுமா என்று சவால் விடுத்தார்.

சிறுவன் ஆயினும் தம் புலமைத் திறமையும் அறிவுக் கூர்மையும் வெளிப்பட, ஒரு பாடல் புனைந்து பாடினார். சுப்பையாவின் பாடல் 'பாரதி சின்னப் பயல்' என்றுதான் முடிந்தது. ஆனால் பொருளோ 'காந்திமதிநாதனைப் பார்! அதி சின்னப் பயல்' என்று ஆகும்படி அமைந்திருந்தது. பாரதியின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, ஏளனம் செய்ய நினைத்தவர் வெட்கித் தலை குனியும்படியாக ஆயிற்று.

1.1.4 தந்தையார் கண்டிப்பும், பள்ளிப் படிப்பில் ஆர்வக்குறைவும்

சின்னசாமி ஐயர் தம் மகன் சுப்பையா கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் சுப்பையாவை மிகுந்த கண்டிப்புடன் வளர்த்தார்; பிற சிறுவர்களுடன், வீதியில் சென்று விளையாட அனுமதிக்கவில்லை. சுப்பையாவால் மற்ற சிறுவர்களைப் போல ஆடியும், ஓடியும், துள்ளித் திரியவும் முடியவில்லை. அந்த ஏக்கத்தை அவர் தம் 'சுயசரிதை'யில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
     ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்
     என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
     வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
     தோழமை பிறிதின்றி வருந்தினேன்

(சுயசரிதை: 4)

இளமைக்கால ஏக்க உணர்வை இப்பாடலில் அழகுறப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் பாரதி. காற்றை வேலியிட்டுத் தடுக்க முடியுமா, என்ன? அல்லது, கடலுக்குத் தான் மூடிபோட்டு அடைத்து விடமுடியுமா? பிறவிக் கவிஞன் பாரதியின் கவித்திறமையைப் பள்ளிக்கூடம் மூட்டைகட்டி ஒதுக்கி வைக்க முடியவில்லை.

"ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும், சிங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார் . . . பசி, தாகம் கூட அவருக்குத் தெரிவதில்லை” என்கிறார் பாரதியின் சரித்திரத்தைப் பின்னாளில் எழுதிய அவர் மனைவி செல்லம்மா. 

ஆம். பள்ளிப் படிப்பிலே அறிவு சென்றிடவில்லை என்றாலும், கவிதை புனையும் ஆர்வம் மட்டும் அவர் உள்ளத்தின் ஆழத்தில் வளர்ந்த வண்ணமாகவே இருந்து வந்தது. நாட்டிலும் காட்டிலும் நாளெல்லாம் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தார் அவர்.
 

பள்ளிப் படிப்பினிலே  மதி
பற்றிட வில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல்  அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதும்  கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா!
 

('ஸரஸ்வதி காதல்'  1)

(அவள் = கல்விக் கடவுள் ஆகிய ஸரஸ்வதி; விள்ளும் = உணர்த்தும்)

என்று பின்னாளில் 'ஸரஸ்வதி காதல்' என்னும் தலைப்பில் பாடிய தோத்திரப் பாடலில் பாரதியார் தமது இளமைப் பருவத்து அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

1.1.5 புலமைக்குப் பெருமை

1893ஆம் ஆண்டில் சுப்பையாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அனுபவம் சிறப்பானது. எட்டயபுர மன்னருடைய அவைக் களத்தில் சிவஞான யோகியின் தலைமையில் புலவர்கள் கூடியிருந்தனர். அப்புலவர்கள் பதினொரு வயது சுப்பையாவின் கவிபாடும் திறனைக் கண்டு வியந்தனர். அவர் நாவில் கலைமகள் தாண்டவமாடுவதைக் கண்டு 'பாரதி' (கலைமகள்) என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர். புலவர்கள் வழங்கிய இந்தப் பட்டமே சுப்பையாவின் பெயருக்கு மகுடமாக என்றென்றும் நிலைத்துவிட்டது. அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதி ஆனார்.

1.1.6 பாரதி விரும்பாத ஆங்கிலக்கல்வி

சின்னஞ்சிறு வயதில் யாருக்குமே கிடைக்காத பட்டம் புலவர்களால் தம்மகனுக்கு வழங்கப் பெற்றதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், தம் மகன் படித்துப் பட்டம் பெற்று உயர்பதவியில் அமர வேண்டும் என்றே பெரிதும் ஆசைப்பட்டார் சின்னசாமி ஐயர். எனவே, அவர் பாரதிக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க வேண்டி, அவரை 1894ஆம் ஆண்டில் திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்.

ஆங்கிலக் கல்வியில் பாரதிக்குச் சற்றும் விருப்பம் இல்லை. அவர் மனத்தில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது அக்கல்வி. பின்னாளில் தம் 'சுயசரிதை'யில் ஆங்கிலக் கல்வியை 'அற்பர் கல்வி' என்றும் 'பேடிக் கல்வி' என்றும் பலவகையில் தூற்றுகிறார். இக்கல்வியினால் அவர் பெற்ற பயன் என்ன என்று சொல்கிறார் பாருங்கள்:

செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
     தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
     நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!

(சுயசரிதை: 29)

வேண்டா வெறுப்பாக ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்த பாரதியார் 1897ஆம் ஆண்டு வரை படித்தார். அப்போதைய ஐந்தாம் படிவம் என்ற பத்தாம் வகுப்புக் கல்வியை முடித்தார்.

1.1.7 பள்ளிச் சிறுவனுக்குப் பால விவாகம்

பாரதியாருக்குப் பள்ளி நாட்களிலேயே அவருடைய பதினான்கு வயதிலேயே திருமணம் நிகழ்ந்தது. 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் புதல்வி செல்லம்மாள் என்ற ஏழு வயதுச் சிறுமிக்கும் பாரதிக்கும் அவரது தந்தையார் திருமணம் செய்து வைத்தார்.

1.1.8 தந்தையார் செல்வச் சரிவும் உயிர் இழப்பும்

பாரதிக்குத் திருமணம் நடந்து ஓராண்டு கழிந்தது. இந்த நிலையில் அவரது வாழ்வில் ஒரு பெரும்துயரம் நிகழ்ந்தது. பாரதியின் தந்தையார் தம் செல்வத்தை இழந்து வறுமைக்கு ஆளானார். பலப்பல வாணிகம் ஆற்றி மிக்க பொருள் சேர்த்துப் பெருவாழ்வு வாழ்ந்த சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாயை இழந்த பாரதியார் பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். தந்தை இறந்த பின்னர், யாரும் ஆதரவு காட்ட இல்லாத நிலையில் அகதியைப் போல் ஆனார் பாரதியார். தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில் அவர் பாடியிருக்கும் அடிகள் வருமாறு:

தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
     தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
     திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
     ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

(சுயசரிதை: 46)

(மிடி = வறுமை; தோற்றிலது = தோன்றவில்லை)