|  
 
  
 | 1.3 பத்திரிகை ஆசிரியர் பணியும் 
 விடுதலை இயக்க ஈடுபாடும்
 |  
 |  கவிதையே தொழில் 
 எனக் கொண்டு, இமைப்பொழுதும்  சோராது நாட்டிற்கு உழைக்க விரும்பினார் 
 பாரதியார்.  அவருடைய கவிதை ஓட்டத்திற்கும், விடுதலை உணர்ச்சிக்கும் 
 துணையாக நின்றன பத்திரிகைகள். எழுச்சி ஊட்டும் கவிதைகள்,
 உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் இவற்றை மக்கள் மத்தியிலே 
 எடுத்துச் செல்வதற்குப் பத்திரிகைகள் உதவின.  எஞ்சிய 
 நேரங்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டினார், சோம்பியிருந்த 
 மக்களுக்குத் தம் பாடல்கள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் 
 உணர்ச்சி ஊட்டினார்; விடுதலை வேட்கையை மக்களிடையே 
 பெருகவிட்டார்.  1.3.1 சுதேசமித்திரனும், 
 சக்கரவர்த்தினியும் 
         ' சுதேசமித்திரன்' 
          அக்காலத்தில் தேசிய இயக்கத்திற்குத் துணையாய்ச் செயலாற்றிய பத்திரிகை ஆகும். 
          'தமிழ்ப் பத்திரிகையின் தந்தை' எனப் பாராட்டப் பெற்ற ஜி.சுப்பிரமணிய ஐயர் 
          தாம் சுதேசமித்திரனின் உரிமையாளராக இருந்தவர். அவர் 1904ஆம் ஆண்டு நவம்பர் 
          மாதம் பாரதியாரைச் சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டார். சுப்பிரணிய 
          ஐயரிடம் பாரதியார், பத்திரிகைப் பயிற்சியை முறையாகப் பெற்றதோடு, அவரது 
          அரிய வழிகாட்டுதலில் நாடறியும் கவிஞரானார். தேசிய இயக்கத்திற்குப் புதிய 
          உயிரும் உருவமும் கொடுத்தார்.  சுதேசமித்திரனில் பணியாற்றிய வேளையில்தான் பாரதியாருக்குத்
 தங்கம்மாள் என்னும் மகள் பிறந்தார். 
         1905ஆம் 
 ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் வங்காளம் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையால் பாரத நாடு முழுவதும் 
 தேசிய உணர்ச்சி அலையெனப் பொங்கி எழுந்தது; அது கிளர்ச்சியாக வெடித்தது. இந்த  அலையின் வீச்சு பாரதியாரின் உள்ளத்திலும் 
 மோதியது; இதன் விளைவாக அவர், தீவிர அரசியலில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.  இந்த நிலையில் தமது தீவிரமான 
 கருத்துகளையும் கொள்கைகளையும்  'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளியிட  இயலாதது குறித்து வருந்தினார். தம்முடைய 
 எண்ணங்களையும் உணர்வுகளையும் எந்த ஒரு தடையும்  இல்லாமல் சுதந்திரமாக வெளியிடும் நோக்கோடு  அவர் 
 தொடங்கிய புதிய தேசிய இதழே 'சக்கரவர்த்தினி' ஆகும்.  'சுதேசமித்திர'னில் பணியாற்றிக் கொண்டே  அவர்  'சக்கரவர்த்தினி'யிலும் அவ்வப்போது எழுதிவந்தார். 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதச் 'சக்கரவர்த்தினி' இதழில் பங்கிம் 
 சந்திரரின் 'வந்தே மாதரம்' என்ற புகழ்பெற்ற  பாடலின்  மொழிபெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிட்டார்  பாரதியார். 1.3.2 காங்கிரஸ் மாநாடுகளும் 
 தேசியத் தலைவர்களின்
 தொடர்பும் 
  1905ஆம் ஆண்டு 
 காசியில் நடைபெற்ற 
 காங்கிரஸ் மாநாட்டிலும், 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற 
 காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து
 கொண்டார்  பாரதியார். 
 தாதாபாய் நவுரோஜி தலைமையில்
 நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாடு
 இந்திய தேசிய இயக்க வளர்ச்சியில் புதிய
 வரலாறு ஒன்றைப் படைத்தது. அந்த
 மாநாட்டில்தான் நவுரோஜி நாட்டிற்குச்
 'சுயராஜ்யம் வேண்டும்' என்ற தாரக
 மந்திரத்தினை முழங்கினார். அந்த மாநாடு பாரதியாரின் அரசியல் வாழ்வில் மட்டுமன்றி, 
 தனிவாழ்விலும் ஒரு 
 திருப்புமுனையை மாற்றத்தை ஏற்படுத்தியது. அம் மாநாட்டில் 
 கலந்து கொள்ளச் சென்ற பாரதியார், அச்சமயம் டம்டம் நகரிலே 
 இருந்த நிவேதிதா அம்மையாரைத் தரிசித்து அருளுபதேசமும் 
 ஆசியும் பெற்றார். 1.3.3 'இந்தியா' பத்திரிகையின் 
 தொடக்கம் 
  கல்கத்தா 
 மாநாட்டில் இருந்து சென்னை 
 திரும்பிய பாரதியாரின் உள்ளத்தில் தேசிய 
 உணர்ச்சி கரை புரண்டு ஓடியது; அவரது  பார்வையில் புதிய ஒளி வீசியது; 'சுயராஜ்யம் எமது 
 பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்' என 
 முழங்கிய பால கங்காதர திலகரின் தலைமையை  அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 
 மிதவாதியான சுப்பிரமணிய ஐயரின் தலைமையில் இயங்கிய  'சுதேசமித்திர'னில் 
 பாரதியார் தமது எண்ணங்களையும் 
 உணர்ச்சிகளையும், சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளியிட 
 இயலாமல் தவித்தார்; அவற்றை வெளியிடுவதற்குச் சரியான கருவி 
 தனிப்பத்திரிகை ஒன்றைத் துவங்குவது தான் என்று தெளிந்தார்.
 'ஆங்கில மோகம்' தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில் 
 தமிழிலே நல்லதொரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற 
 தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் 
 மண்டயம் 
 திருமலாச்சாரியார்; தாம் புதிதாகத் துவங்க 
 இருக்கும் பத்திரிகைக்குப் பாரதியாரே தகுதியான, 
 சிறந்த பொறுப்பாசிரியர் ஆவார் 
 என்பதை உணர்ந்தார். இருவரது 
 சந்திப்பின் விளைவாக, 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற 
 மூன்று தாரக மந்திரங்களைத் தனது 
 இலட்சியங்களாகக் கொண்டு 'இந்தியா' 
 பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. 
 தீவிரமான எண்ணமும் உணர்வும் 
 கொண்ட தேசபக்தர்களின் வீரமுரசாக விளங்கியது அப்பத்திரிகை.   
  'இந்தியா' பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் சுதந்திர 
 உணர்வை ஊட்டத்தக்க நாட்டு  
 நடப்பைக் காட்டக்கூடிய கருத்துப் 
 படங்களை (Cartoons) வெளியிட்டார் பாரதியார். 
 இம் முறையை முதன்முதலில் பத்திரிகைத் 
 துறையில் கையாண்டு வெற்றி கண்டவர் 
 பாரதியாரே ஆவார். இது தவிர வேறு பல புதிய 
 உத்திகளையும் 'இந்தியா' பத்திரிகையில் புகுத்திப் 
 பத்திரிகைத் துறையில் பெரும் புரட்சி செய்தார் 
 அவர். இதனால் 'இந்தியா' பத்திரிகை 
 மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றது.
 இந்தச் சமயத்தில் பாரதியாரை வ.உ.சிதம்பரனார் 
 சந்தித்தார்; இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.  
  'இந்தியா' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் 
 பணியாற்றிக்கொண்டே 'பால பாரத்' என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் 
 பாரதியார் வெளியிட்டார்; 'இந்தியா' பத்திரிகையின் 
 இணைப்பத்திரிகையாகவே அதனை வெளியிட்டார்.  1.3.4 கடற்கரைக் கூட்டங்களும் 
 தேசிய எழுச்சியும் 
 பத்திரிகைப் பணியோடு 
          பாரதியார் அமைதி அடைந்து விடவில்லை; ஓய்வு நேரத்தில் திருவல்லிக்கேணிக் 
          கடற்கரையில் அவர் கூட்டம் கூட்டிப் பேசினார். 'வந்தே மாதரம்' என்று முழங்கினார்; 
          நாட்டில் எங்கும் சுதந்திர ஆர்வத்தை ஊட்டினார். கோழையான ஜனங்களுக்கு உண்மைகளைக் 
          கூறினார்; எழுச்சியூட்டும் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடினார். இந்தக் கால 
          கட்டத்தில் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.துரைசாமி ஐயர், வி.சர்க்கரைச்செட்டியார், 
          டாக்டர் நஞ்சுண்ட ராவ், சுரேந்திரநாத் ஆர்யா ஆகியோரின் நட்பும் தொடர்பும் 
          பாரதியாருக்குக் கிடைத்தன. 
         1907ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் நாடு 
          கடத்தப்பட்டார். அதனை ஒட்டிச் சென்னையில் மே மாதம்
        17ஆம் நாள் விபின் சந்திர 
          பாலர் பேசினார். அவரது  ஆவேசமான,  உணர்ச்சிமயமான சொற்பொழிவு தேசிய எழுச்சிக்கு உரம் ஊட்டியது.
 விபின் சந்திர பாலரின் சென்னை வருகைக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் பாரதியார்தான். 1.3.5 சூரத் காங்கிரஸ் 
 மாநாடும் தீவிரவாத ஆதரவும் 
         சூரத் 
          நகரில் 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் 23ஆவது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
 தமிழ்நாட்டில் இருந்து மிகுதியான
 எண்ணிக்கையில்
 சார்பாளர்களை (delegates) அழைத்துச் செல்வதில்
 தீவிரம் காட்டினார் பாரதியார். அம்
 மாநாட்டின் போது திலகர், அரவிந்தர், 
 லஜ்பத்ராய் போன்ற
 தலைவர்களை அவர் நேரடியாகச் சந்தித்து 
 அவர்களுடன்
 தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக,
 இக் காலகட்டத்தில்
 பாரதியார் திலகரின் தீவிரவாதக் 
 கொள்கையை முற்றிலும்
 ஆதரிக்கத் தொடங்கினார். சூரத்தில் இருந்து சென்னை திரும்பிய பாரதியார், 
 முன்னைக்
 காட்டிலும் முனைப்பாகப் பல புதிய 
 பணிகளில் ஈடுபட்டார்.
 தீவிரவாதிகளுக்கு என்று 'சென்னை 
 ஜனசங்கம்' என்ற ஓர்
 அமைப்பைத் தோற்றுவித்தார்; 
 சென்னையில் வெளிநாட்டுப்
 பொருள்கள் புறக்கணிப்பு இயக்கத்தையும் 
 முழுமூச்சோடு
 நடத்திக்காட்டினார்; திலகரின் கட்டளையை 
 ஏற்று 'சுயராஜ்ய
 தினத்தைச்' சென்னையில் மிகச் 
 சிறப்பான முறையில்
 கொண்டாடினார்.  |