| 
  
 | 2.7 பிற நாடுகள் |  |  பாரதியாரின் பார்வை தம் நாடு, தம் மக்கள் என்று குறுகி இருக்கவில்லை. 
        எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற 
        உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது.  
 2.7.1 பெல்ஜியம் 
  
       பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம் 
        உடையதாக இருந்தது. இந்தியாவிலிருந்த தேசபக்தர்களிலே பெரும்பாலோர் ஜெர்மனியின் 
        வெற்றியையே விரும்பினர். இந்த நேரத்தில்தான் ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு 
        வாழ்த்துக் கூறியிருக்கிறார் பாரதியார். இந்த இடத்திலே பாரதியாரின் தேசாபிமானத்தையும் 
        வென்று நிற்கிறது மனிதாபிமானம். 
 இந்திய 
        விடுதலைக்கான போரில் ஜெர்மனிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்திய மக்கள் ஜெர்மனியையே 
        ஆதரித்தனர். இருந்தும், பாரதியார் ஜெர்மனியின் ஆதிக்க மனப்பான்மையைத் தாக்கியும் 
        பெல்ஜியத்தின் வீரத்தைப் பாராட்டியும்,  
   
 
 
  
 | அறத்தினால் வீழ்ந்து விட்டாய்அன்னியன் வலியனாகி
 
 மறத்தினால் வந்து செய்த
 வன்மையைப் பொறுத்தல் செய்வாய்
 
 துளக்கற ஓங்கி நிற்பர்
 துயருண்டோ துணிவுள் ளோர்க்கே!
 |  (பெல்ஜியத்திற்கு 
 வாழ்த்து - 1,9) (துளக்கற = மனக்கலக்கம் இல்லாமல்) என்று பாடுகிறார் பாரதியார். ஜெர்மனிய நாட்டுக்கு ஐரோப்பா 
        கண்டம் ஆதரவளித்தாலும் மிகுந்த மனிதாபிமானத்தோடு பெல்ஜிய நாட்டு மக்களைப் 
        பார்த்து, அவர் பாடுவது அவருடைய மனித நேயத்தைக் காட்டுகிறது.  
 2.7.2 உருசியா  
       ஐப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே உருஷ்யாவில் உள்நாட்டுக் 
        குழப்பம் தொடங்கி விட்டது. அது முதல் புரட்சிக் கட்சியாருக்குப் பலம் அதிகரித்துக் 
        கொண்டு வந்தது. நமது உருசியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின் 
        மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று
        உருசியாப் புரட்சி பற்றிப் பாரதியார் பாடுகிறார். இதற்குக் காரணம் வெளிநாட்டில் 
        நடைபெறுகின்ற செய்திகளை எல்லாம் தமிழர்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற 
        நல்ல எண்ணமே. கொடுங்கோலர்களின் ஆட்சி மறைய வேண்டும் நல்லாட்சி மலர வேண்டும் 
        என்ற துடிப்பில் இப்பாடலைப் 
 பாடியிருக்கிறார். உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். 
        அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். இப்பாடல் சுதந்திரம் கிடைக்குமா 
        என்று அவநம்பிக்கை கொள்ளும் இந்தியர் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் 
        உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு நின்றால் 
        உருசியா கண்ட யுகப் புரட்சியை இங்கும் காண முடியும். ஆங்கில
        ஆட்சியை வீழ்த்த முடியும். மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் 
        என்று எண்ணினார். சமூக மாற்றத்திற்கும் இறையருள் தேவை என்று கருதிய பாரதியார், 
   
 
 
  
 | மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
 ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
 கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
 
 அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
 அடிமையில்லை அறிக
 |  (புதிய 
 உருசியா - 1) என்ற பாடல் உணர்த்துகிறது. சர்வாதிகாரிகள், ஏகாதிபத்திய அரசுகள் தங்களை யாரும் வீழ்த்த முடியாது 
        என்றெண்ணுகின்றனர். அவர்களையும்
 புரட்சியால் வீழ்த்த முடியும் என்பதை உருசிய 
 புரட்சி
 தெரிவிக்கிறது. எனவே இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜார் அரசன் 
         (உருசியா - 5) என்று பாரதி பாடுகிறார். இதுபோல் ஆங்கில ஆட்சியையும் 
        ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். |