3.2
பாரதிதாசனும் பெண் விடுதலையும்
|
E |
பல தளை (தடை, கட்டுபாடு)களிலிருந்து
பெண் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் பாவேந்தர். அவற்றில்
மூன்று தலையாயவை.
1. கைம்மைக் கொடுமை
2. வழிவழி வந்த அச்சம்
3. பழைய கண்மூடி வழக்கங்கள்
இவற்றை அகற்றப்
பாடுபடும்போது அவர்க்கு எதிர்ப்பு இருந்தது. அவர் ஓர் எதிர் நீச்சல்காரர்.
அவர் தொய்வடையாமல் தொடர்ந்து முழங்கினார். வைதிக நெறி பரப்பியிருந்த
மடமைக் கருத்துகளைச் சாய்ப்பதற்கென்று கவிதை சமைத்த முதல்வர் அவர்தாம்.
|
|
மூடத்தனத்தின்
முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
|
(பெண்குழந்தை
தாலாட்டு தொகுதி:1)
|
என்று பெண் குழந்தையை இதற்கு முன்பு இப்படித் தாலாட்டியவர் உண்டா?
பாரதிதாசனின் பெண் அறிவின் உரு; ஆற்றலின் மைய அச்சு; ஆணுக்கு அவ்வப்போது
நெறிகாட்டும் ஆசான். கவிஞர்களெல்லாம் இதற்கு முன்பு பெண்களை அழகுப்
பதுமையாகவே வருணித்தனர். அவள் கைம்மைக் கோலம் கண்டு கண்ணீர் வடித்தனர்;
விதி இப்படி ஆக்கிற்றே என நொந்தனர். பெண்கள் அச்சப்படும்போது அழகாயிருப்பதாகப்
புனைந்து பாடினர். பழைய வழக்கங்களை விடாமல் பின்பற்றுவதில்தான் பெண்மையின்
அழகு உறைவதாகக் கூறினர். பாரதிதாசன் இந்த வேலிகளைத் தகர்த்தெறிந்தார்.
பெண்ணின் உரிமைப் பயணத்திற்கென அகலமான சாலையைக் கவிதையின் வழியில்
அவர் காட்டினார்.
|
3.2.1 கைம்மையிலிருந்து.....
|
கணவன் இறந்தபின் பெண்
கூந்தலில் மலர் சூடுதல் கூடாது; நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்ளக்
கூடாது. ஏதேனும் ஒரு செயல் கருதிப் புறப்பட்டவர் எதிரே அவள் வருவது
அபசகுனம் - அதாவது அந்தச் செயல் நடவாது தடுத்துவிடக் கூடிய தீங்கு
எனக் கருதினர். இவை மட்டுமா?
|
|
தரையிற்
படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல்
வேண்டும்
|
இப்படியெல்லாம் வாழப் பணித்தது வைதிகம். கணவனை இழந்த பெண் காதலிக்கலாம்;
மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பாரதிதாசன் சீர்திருத்தப் பாதை காட்டினார்.
வெள்ளைப்
புடவை உடுத்திக் கொண்டு, நெற்றியைப் பாழாக்கும் வெறுமையுடன், கூந்தலில்
மலர் சூடாமல் இதோ ஓர் இளம் பெண் நிற்கின்றாள் பாருங்கள்! இவள் ஓர்
இளைஞனைக் காதலித்தாள்; அவனுந்தான். ஆனால் என்ன செய்வது? சமூகம் இவர்கள்
மணந்து கொள்ள ஒப்பவில்லை. பாரதிதாசன் பாட்டு ஒலிக்கிறது கேளுங்கள்!
|
 |
காட்சி
|
இன்பவருக்கம்
எல்லாம் நிறைவாகி
இருக்கின்ற பெண்கள் நிலைஇங்கு
இவ்விதமாய் இருக்குதண்ணே!
இதில்
யாருக்கும் வெட்கமிலை!
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே
- கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்
- ஒரு
கட்டழகன் திருத்தோளினைச்
சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!
|
(30.
கைம்மைப்பழி : தொகுதி:1)
|
(வருக்கம்
= வர்க்கம், இனம்; தூர்க்காதீர்
= நிரப்பாதீர்)
இதைவிட மனத்தை
உருக்கும் வகையில் யாரும் கூற முடியுமா? வைதிக நெறி கடுமையான கட்டுப்பாட்டைக்
கைம்பெண்களுக்கு விதித்தது. மனைவி இறந்து விட்டால் கணவன் வேறு பெண்ணை
மணக்கலாம். ஆனால் பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை.
|
வையக
மீதினில் தாலி இழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின்
மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?
|
(பாரதிதாசன்
கவிதைகள் : முதல் தொகுதி)
|
என்று பகுத்தறிவற்ற நிலையில் கேட்டுக் கொண்டிருந்தனர் பழைய மடமைப்பிடியில்
சிக்கித் தவித்தவர்கள். இந்தியா முழுவதிலும் கைம்பெண்களின் வாழ்க்கை
துன்பமிக்கதாக இருந்தது. கணவன் இறந்தவுடன் அவனோடு மனைவியும் சாகவேண்டும்
அல்லது கைம்மை நோன்பேற்றுத் துன்பங்களைத் தாங்க வேண்டும் என்று விதித்த
வழக்கத்தைச் சமூகத்தில் புரட்சி செய்தோர் எதிர்த்தனர். அவர்களில் பாரதிதாசன்
குரல் வன்மையாக ஒலித்தது.
|
மண்படைப்பே
காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக்
கட்டுப்பா டெதற்கு?
|
(பாரதிதாசன்
கவிதைகள் : முதல் தொகுதி)
|
என்று அவர் கேட்டார். காதல் கொள்வது இயற்கை அல்லவா? இளம்பெண் நெஞ்சத்தில்
காதல் ஊற்று நிகழ்வது குற்றமா? பாடாத தேனீயைப் பார்த்ததுண்டா? தென்றல்
உலா வராமல் இருக்க முடியுமா? பசியாத நல்வயிறு எங்காவது இருக்கிறதா?
இவை போலத்தானே இளைஞர்களின் இதயமும்? என்று கேட்டார் பாரதிதாசன். இப்போது
மறுமணம் தடையின்றி நிகழ்கிறது. வரலாறு திசை மாறியிருக்கிறது. எல்லாம்
அந்தப் பாவேந்தனின் கனல் உமிழும் கவிதையால்தான்!
|
3.2.2 அச்சத்திலிருந்து..........
|
பெண்ணுக்கு நான்கு பண்புகளை
விதித்தது சமூகம். அவை அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பன. நண்பர்களே!
இந்த நான்கு சொற்களுக்கும் உங்களுக்குப் பொருள் தெரியுமா? தமிழ்நாட்டில்
பலருக்கு அச்சம், நாணம் என்பவற்றுக்குப் பொருள் தெரியும். அச்சம் என்றால்
பயம் என்றும் நாணம் என்றால் வெட்கம் என்றும் கூறிவிடுவார்கள். ஆனால்
மடம், பயிர்ப்பு என்பவற்றுக்குப் பொருள் கூறமாட்டார்கள். மடம் என்பதற்குச்
சொல்லிக் கொடுத்த நெறிப்படி நடத்தல் என்பது பொருள். அவளாகச் சிந்தித்துப்
பார்க்கக் கூடாது. ஏன் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று அவள் எண்ணிப்
பார்க்கக் கூடாது. இஃது ஒருவகை அறியாமை. அந்த அறியாமை என்னும் பள்ளத்தில்
பெண் இருப்பது சமூக அமைப்பிற்கு நல்லது எனக் கருதினர். பயிர்ப்பு
என்பது அருவருப்பு, அறிமுகம் இல்லாதவற்றிலிருந்து விலகி நிற்பதாகும்.
பெற்றோர் முடிவு செய்யும் இளைஞனுக்கு அல்லது முதியவனுக்குப் பெண் ‘கழுத்தை
நீட்டக்’ கட்டுப்பட்டவள். மாமியாரால் குட்டுப்படவும், கணவனால்
வெட்டுப்படவும், மற்றவரால் திட்டப்படவும் வாழ்க்கைப்பட்டவள். புகுந்த வீட்டில் மாட்டுக்கும்
நாய்க்கும் உள்ள மரியாதை கூட அவளுக்கு இல்லாமல் போகலாம். அவள் ஆமையாகப்
புலனடக்கி வாழ வேண்டும்; ஊமையாகப் பேசாமல் இருக்க வேண்டும். இந்த நிலையில்
புரட்சிக் கவிஞர் எடுத்துரைக்கின்றார் பாருங்கள்!
|
|
காட்சி
|
தனித்துக்
கிடந்திடும் லாயம் - அதில்
தள்ளி அடைக்கப்படும்
குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு
- வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும்
வேண்டும்
|
(35:
பெண்ணுக்கு நீதி தொகுதி: 1)
|
இந்த நிலை மாறப் பெண்கள் புலிநிகர்த்தவராக ஆகவேண்டுமென்று பாரதிதாசன்
கருதினார். பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் வாய்த்தவராக
மாற வேண்டுமென்று பாரதியார் கூறினார். பாரதிதாசன் என்ன கூறுகின்றார்
தெரியுமா?
|
சேவல்
என நிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச்
சீறும் குழந்தைகளைப் பெற்றே-நீ
செல்வம் பலவும் மிக உற்றே-நல்ல
காவல் இருந்துவளம் தாவும்
திராவிடத்தைக்
காப்பது காண வேண்டும்
|
(இசையமுது
2: அன்னையின் ஆவல்)
|
|
இன்று பெண்கள் வான் ஊர்தி இயக்குகின்றனர்; ஆழக் கடலிற் புகுந்து ஆய்வுகள்
செய்கின்றனர். அச்சம் ஒழிந்தது என ஆர்ப்பரிக்கின்றனர். பெண்கள் மேவாத
(விரும்பாத) துறையில்லை. இதோ காந்தியடிகளுக்குத் தென்னாப்பிரிக்க அறப்போரில் துணைநின்ற தில்லையாடி வள்ளியம்மை!
தென்னாட்டின் அறப்போர்த் திலகமெனத் திகழ்ந்த நாகம்மையார்! (பெரியார்
ஈ.வெ.ரா.வின் துணைவியார்) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி
அம்மையார்! சீர்திருத்தப் புயல் மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்! ஆயிரமாயிரமாய்க்
கல்விக் கூடம் நோக்கிச் செல்லும் ஆரணங்குகள் பாரீர்! எதிர்காலத் தமிழகத்தின்
ஏடுகளில் புதிய வரலாறு எழுதப்போகும் புரட்சி எழுத்தாளிகள் இவர்கள்.
இவர்களின்
அணிவகுப்புத்தான் புரட்சிக் கவிஞர் கனவு.
|
3.2.3 பழைய வழக்கங்களிலிருந்து............
|
பெண் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து
விடுதலை அடைய வேண்டுமெனப் புரட்சிக் கவிஞர் விரும்பினார். பதினெட்டு
முழப்புடவையிலே அவள் பதுங்கியிருக்க வேண்டும். வாரத்தில் பலநாள்
விரதம் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டின் எல்லைகளை எந்த நிலையிலும்
தாண்டக் கூடாது. வீட்டுச் சமையலைப் பெண்ணே செய்ய வேண்டும். பால்கணக்கு
தயிர்க்கணக்கு பார்க்குமளவுக்கு அவளுக்குக் கல்வி அறிவு போதும். இப்படித்தானிருந்தது
மகளிர் சமூகம்.
|
ஆடை அணிகலன் ஆசைக்கு
வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதுவும் நாணுவுதுவும் ஆமையைப்போல் வாழுவதும்
கொஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஒர்பகுதி
|
(வீரத்தாய்:
தொகுதி 1)
|
இவ்வாறு மகளிர் வாழ்ந்தநிலை விளக்குகின்றார் பாவேந்தர். கல்வி பெருக
வளர்ந்த சமூகத்தில் பெண்கள் பகுத்தறிவு பெற்றனர்; மூடப்பழக்கங்களைக்
கைவிட்டனர். பெண் இல்லம் தாண்டி, ஊர் கடந்து, நாடு கடந்து, கண்டங்களை
விட்டுப் பறக்கின்றாள்; ஒலிம்பிக் பந்தயங்களில் ஓடுகின்றாள்; ஐக்கிய
நாடுகள் மன்றத்தில் முழங்குகின்றாள்; பழமைக் கட்டுகளை உடைத்தெறிந்து
விட்டாள்.
இதோ கவிஞர் இப்பெண்களைக் கண்டு களி கொள்கிறார் காணுங்கள்!
|
கலையினில்
வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில்
ஒளிமிகுந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ
விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு
போதல் கண்டேன்!
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல்
உரிதல் கண்டேன்!
|
(அழகின்
சிரிப்பு)
|
இதோ பெண்கள் வீரச் செயலுக்காகப் பரிசு பெறுதல் காணுங்கள்! நாட்டின்
காவல்துறையில் பணிசெய்யும் மகளிர் அணி காணுங்கள்! கவிஞர் கனவு நனவாகி
விட்டதன்றோ!
|