3.5 பாரதிதாசனின் பெண்ணுலகம்
 

E

பாரதிதாசனின் பெண்ணுலகம் மற்றைக் கவிஞர்களின் படைப்பிலிருந்து வேறுபட்டது. பாரதிதாசனின் பெண் புதுமைப்பெண் மட்டும் அல்லள்; அவள் புரட்சிப் பெண்ணும் ஆவாள். சிங்காரச் சிமிழாய்க் காட்சி தரும் அவளிடம் பொங்கி வெடிக்கும் எரிமலையும் இருக்கும். அறிவுத்திறன் மட்டுமன்று; ஆண்மகனை வழிநடத்தும் செயல்திறமும் அவளுக்கு உண்டு. வஞ்சி என்பவள் குப்பன் என்ற தன் காதலனைச் சஞ்சீவி பர்வதத்திற்கு அழைத்து வந்தாள். எதற்கு? சத்தமில்லாமல் முத்தமிடுவதற்கா? இயற்கை அழகு கண்டு இன்பம் அள்ளவா? இல்லை இல்லை. அவளே கூறுகின்றாள் கேளுங்கள்!
 

மீளாத மூடப்பழக்கங்கள் மீண்டும் உமை
நாடாது இருப்பதற்கு நான் உங்களை இன்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன்
 

என்கிறாள். புராணக் கதைகளால் பகுத்தறிவு அழிவதை வஞ்சி குப்பனுக்குப் புரிய வைத்தாள். வையத்தை வழிநடத்த வலிமை மிக்க ஆற்றலாக விளங்குகின்றாள். புரட்சிக்கவிஞர் படைத்த பெண்!
 

3.5.1 தங்கம்-நகைமுத்து
 

தங்கம், நகைமுத்து இருவரும் குடும்ப விளக்கில் வரும் பாத்திரங்கள். தமிழ்நாட்டுப் பண்பாட்டின் முத்திரைகளாக இவர்கள் உருவகிக்கப் பெற்றுள்ளனர்.

வானூர்தி செலுத்தவும், கடலில் மூழ்கி அளக்கவும் பெண்களால் ஆகுமென்று தங்கம் கருதுகின்றாள். புதுமைப் பெண்ணாக உருப்பெற வேண்டுமென்று கருதும் தங்கம் வீட்டுக் கடமைகளைப் புறக்கணிக்கவில்லை. சமையலில் புதுமை வேண்டும் என்ற கருத்துடையவளாய் அவள் விளங்குகின்றாள். ஒரு பெண்ணுக்குப் பெருமிதம் அவள் பலகலையும் தேர்ந்தவளாக இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் கவிஞர். தங்கம் வீட்டுக் கடமைகளை ஆற்றுவதிலும் வல்லவள்; நாட்டுத்தொண்டு, மொழித்தொண்டு ஆகியவற்றிலும் கருத்துச் செலுத்தும் திறன் மிக்கவள்.
 

இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக!

(குடும்பவிளக்கு)

என்று தங்கத்தம்மையார் கூறுவது பாரதிதாசனின் இலக்கியப் பெண்ணுக்குரிய பண்பாகும்.

நகைமுத்து குடும்பவிளக்கில் இடம்பெறும் மற்றொரு பாத்திரம். நகைமுத்து வேடப்பன் மீது காதல் கொள்கிறாள். சிக்கலின்றி அவர்கள் விரும்பியவண்ணம் திருமணம் நிகழ்கின்றது. குழந்தை வளர்க்கும் கலையைப் பாவேந்தர் நகைமுத்து வழியாக நமக்கு விளக்குகின்றார்.
 

3.5.2 அன்னம் - ஆதிமந்தி
 

‘பாண்டியன் பரிசு’ என்ற காவியத்தில் இடம்பெறும் அன்னம் கதிர்நாட்டு அரசனின் மகள். எளிய குடியில் பிறந்த வேலனோடு இவள் காதல் கொள்கின்றாள். அன்னத்தின் தந்தையும் தாயும் கொல்லப்படுகின்றனர். அரச உரிமையைப் பெறுவதற்குரிய பேழை எங்கே இருக்கின்றது எனத் தெரியவில்லை. (பேழை-பெட்டி) அந்தப் பேழைக்குள் அரச உரிமை குறிக்கும் பட்டயமும், உடைவாளும் இருக்கும். இந்தப் பேழை பாண்டிய அரசன் ஒருவனால் அளிக்கப்பட்டது. இது பாண்டியன் பரிசெனப்படும்.
 


 

என்பாண்டியன் பரிசை எனக்களிப்போன் எவன்
எனினும் அவனுக்கே உரியோள் ஆவேன்

(பாண்டியன் பரிசு)

என்று அறிவிக்கின்றாள். பாண்டியன் பரிசைக் கொண்டு வருபவன் ஒரு கிழவனாக இருந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது அன்னம், “கிழவர் என்றால் என்னை மணக்க நினைப்பாரா? நினைப்பார் என்றால் அவர் நெஞ்சத்தில் இளையார் வயதில் மூத்தார்” என்கின்றாள். அரச குடும்பத்தில் பிறந்திருந்தும் அன்னம் புரட்சி மனப்பாங்கு உடையவளாகப் படைக்கப்ட்டிருக்கின்றாள்.

ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகள்; சேர இளவரசன் ஆட்டனத்தியிடம் ஆடல் பயின்றவள். இருவரும் மணம் புரிந்து கொள்கின்றனர். ஆட்டனத்தி காவிரியில் நீராடுகையில் வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது. ஆதிமந்தி வருந்திக் கண்ணீர் வடித்து ஆற்றின் கரையில் தொடர்ந்து செல்கிறாள். காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் கணவனைப் பெறுகின்றாள். இந்த நிகழ்ச்சி பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பாரதிதாசன் இதனை அழகிய நாடகமாகச் ‘சேரதாண்டவம்’ என்ற பெயரில் வடித்திருக்கிறார். இதோ அலைகொழிக்கும் காவிரியில் ஆட்டனத்தி ஆடுவதைப் பாருங்கள்! ..........கரையோரத்தில் ஆதிமந்தி கணவனைத் தேடிக் கலங்குவதைக் காணுங்கள். காதல் மடந்தையான ஆதிமந்தி கலை மடந்தையாகக் கவிஞரால் அழகுற உருவாக்கப் பெற்றுள்ளாள்.
 

3.5.3 கண்ணகி - மணிமேகலை
 

சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள்.
 


 

சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். பாவேந்தரின் கண்ணகி “உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே” என்று எச்சரிக்கின்றாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன். கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர். கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.