1.3 தமிழ்நாடு
 

E

சங்க காலத்தில், சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற முப்பிரிவுகளால் ஆளப்பட்டது தமிழ்நாடு. சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களும், தம் ஆட்சிச் சிறப்பாலும், மொழி உணர்வாலும், தமிழ் இலக்கியத்திற்கு - அதன் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு ஆற்றினர். அதனால், தமிழ் இலக்கியம் வளம் பெற்றது. தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணமும், இலக்கியமும் இன்றளவும் வாழ்ந்து வருகின்றன.

பழம்பெருமை வாய்ந்த தமிழ்நாடு, அரசியல் படையெடுப்புகளாலும், அந்நியர் ஆதிக்கத்தாலும் பல்வேறு வகையான அகப்புற மாற்றங்களைப் பெற்றது. அதனால் தமிழ்நாட்டில், தமிழருக்கும், தமிழுக்கும் பல சோதனைகள் ஏற்பட்டன. பிறமொழிச் செல்வாக்கினாலும், அரசியல் ஆட்சியின் சூழலாலும், தமிழ்நாடு பழைய நிலையிலிருந்து தாழ்வுற்றதாகப் பாரதிதாசன் கருதினார். அதிலிருந்து மேம்பாடு அடையவேண்டும் என்ற நோக்கில் தமிழ் நாட்டைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

தமிழன் தன் நாட்டின் தொன்மைப் பெருமையை அறிந்திருந்தால்தான், தற்காலத்தில் தமிழ்நாட்டில் காணப்படும் சீர்கேடுகளிலிருந்து விடுபட்டு முன்னேற முடியும் என்று கருதினார்.
 

1.3.1 தமிழ்நாட்டின் பெருமை
 

சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப் பெற்ற தமிழ்நாட்டின் எல்லை வடக்கே வேங்கட மலை முதல், தெற்கே கன்னியாகுமரி வரையிலும் பரந்து காணப்பட்டது. இமயமலை வரையிலும் தமிழர் படையெடுத்துச் சென்றனர். கடல் கடந்து சென்று, இலங்கை, கடாரம் போன்ற இடங்களையும், கைப்பற்றித் தம் ஆட்சிக்கு உட்படுத்தி ஆண்டு வந்தனர். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்நாட்டைப் பற்றி, அதன் எல்லையைப் பற்றிக் குறிப்பிடும் போது,
 

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் - நல்
குமரிமட்டும் தமிழர் கோலங்கண்டே
நாம் ஆடுவமே ! பள்ளுபாடுவமே !

(இசையமுது, தமிழ்ப்பள்ளு: 1)
 

என்று கூறுகிறார்.
 

1.3.2 தமிழ்நாட்டின் வளம்
 

தமிழ்நாட்டின் செல்வச் செழிப்பிற்குக் காரணம் தமிழ்நாட்டின் மண்வளம். தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்பிற்குக் காரணம் தமிழ் மக்களின் மனவளம். இவ்வாறு பல வளங்கள் பெற்ற ஒரு நாடு தமிழ்நாடு.

மண்வளத்தால் இயற்கை வளம் மிகுந்துள்ளது. மனவளத்தால் மக்களின் பண்பு வளம் சிறப்பாகக் காணப்படுகிறது.
 

இயற்கை வளம்
 

மலைவளமும், கடல்வளமும், நிலவளமும் நிறைந்த ஒரு நாடு தமிழ்நாடு. இந்தச் சிறப்புகளை மையமாகக் கொண்டு, குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் என்று தமிழ்நாட்டைப் பாகுபாடு செய்திருந்தனர். நில அமைப்பிற்கேற்ப, தம் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். இது தமிழ்நாட்டிற்கு உரிய தனிச்சிறப்பு. பாரதிதாசன் நெய்தல், குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் தலைப்புகளில் பாடல்களை இயற்றினார். அப்பாடல்களில், தமிழ்நாட்டின் வளத்தைச் சுட்டுகிறார்.
 

காட்சி

பாடிவரும் ஆறுகள் பல
பரந்துயர்ந்த மலைகளும் பல
கூடிநடக்கும் உழவுமாடு
கொடுக்கும் செல்வம் மிகப் பலபல

(நாடு, மருதம்: வரிகள் 5 - 8)
 

பெரிய ஆறுகள் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் இரைச்சல், கவிஞருக்கு அவை பாடுவன போன்ற, ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றது. எனவே, அவற்றைப் ‘பாடிவரும் ஆறுகள்’ என்கிறார்.

மருத நிலத்தின் வளத்தைச் சொல்ல விரும்பிய கவிஞர், உழவுத் தொழிலால், நாடுபெறும் செல்வத்தைச் சிறப்பாகச் சொல்கிறார்.
 

சோலை தரும் காட்சி
 

கனிகளும், தானியங்களும் கொடுக்கும் இயற்கை வளத்தைப் போல, சோலைகளும், சோலைகளிலுள்ள மரம், கொடி ஆகியவற்றில் பூத்த மலர்களும், மரங்களிலும், மலர்களிலும் பொருந்தியிருக்கும் குயிலும் சிட்டும் பாடும் பாக்களும் இயற்கை வளத்திற்கு அழகு சேர்ப்பவை என்கிறார் பாரதிதாசன். அதனைத்


 

தென்றல் சிலிர்க்க வரும்சோலை
     தனிற் குயிலும்
தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை
     மணக்கும் மலர்

(நாடு, எழில்மிகுநாடு. வரிகள்: 8 - 11)
 

என்று குறிப்பிடுகிறார்.

காற்றடிக்கும் பொழுது, மரத்தின் இலைகள் அசையும். இல்லையா? அதைத் தென்றல் காற்று பட்டதும் சிலிர்க்கும் உடலைப்போல், காற்றுப்பட்டதும், மரமும் சிலிர்க்கிறது என்று சுவையாகவும், நயமாகவும் விளக்குகிறார் பாரதிதாசன். கவிஞரின் கற்பனைச் சிறப்பினை எண்ணிப் பாருங்கள்!
 

• பண்பு வளம்
 

தமிழ்நாட்டு நிலவளத்தைக் கூறிய கவிஞர் பாரதிதாசன், தமிழ்நாட்டு மக்கள் பண்பு வளத்தையும் சுட்டுகிறார். அறத்தோடு வாழ்ந்த தமிழர்கள், சிறந்த பண்பாடும் நாகரிகமும் உடையவர்கள். தமிழர்கள் பண்புக்கூறுகளில் ஒன்று வீரம். வீரர்களைப் பெண்கள் விரும்பி மணந்த தன்மையையும், வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கியமையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் வீரம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வளப்படுத்தியது. கற்பினைத் தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்தனர் தமிழ்ப் பெண்கள். இத்தகைய நற்பண்புகளால் வளம் பெற்ற ஒரு நாடு தமிழ்நாடு என்று பெருமிதமாகக் கூறுகிறார் பாரதிதாசன்.
 

அறங்கிடந்து பண்பாடும்
அன்பிருந்து சதிர் ஆடும்
திறங்கிடந்த நாகரிகம்
செய்து தந்தது தமிழ்நாடு !
மறங்கிடந்த தோள் வீரர்
மகளிர்தரும் பெருங்கற்புச்
சிறந்திருக்கும் தமிழ்நாடு
செந்தமிழர் தாய்நாடு !

(நாடு, மருதம் : வரிகள்: 11 - 18)
 

(சதிர் = நாட்டியம்)
 

1.3.3 தமிழ்நாட்டில் கல்வி
 

உலகிலுள்ள சிறந்த மொழிகளுள் ஒன்றாகவும், சிறந்த பண்பாடு உடையதாகவும், பல செல்வங்கள் கொண்டதாகவும், தமிழ் மொழி, திகழ்ந்தது. அதனால் தமிழ் மக்களும், பெருமைப்பட்டனர். தமிழ்நாடும் சிறப்புடன் திகழ்ந்தது. ஆனால் அந்த நிலை இன்று இல்லையே என்று மிகவும் வருந்துகிறார் பாரதிதாசன். கல்வியில் சிறந்திருந்த தமிழ்நாடு, இன்று அதிலும் பின்தங்கி உள்ளதை,
 

எல்லாம் இருந்த தமிழ்நாடு படிப்பு இல்லாமல்
பொல்லாங்கு அடைந்தது பிற்பாடு

(நாடு, எழில்மிகு தமிழ்நாடு : 1-2)
 

என்று கவலைப்படுகிறார் கவிஞர். தன் கவலையைப் போக்கும் வகையில் தமிழ் நாட்டவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகிறார்.
 

கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு
யாவர்க்கும் வாக்குரிமை இருக்கும் நாட்டில்
யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும்
. . . . . . . . . . . . . . . . . . . . .

(நாடு, நாட்டியல் நாட்டுவோம், வரிகள்: 27 - 29)
 

இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தீர்களா? கல்வியின் சிறப்பினை இதைவிடச் சிறப்பாகக் கூற முடியுமா? விடுதலை பெற்று, வாக்குரிமை பெற்றோர்க்கு இருக்க வேண்டிய முக்கியமான பொருள் கல்வி என்கிறார் பாரதிதாசன். கல்வியறிவு பெற்றோராலேதான் தகுதி வாய்ந்த ஆட்சியாளரைச் சீர்தூக்கிப்பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கவிஞர் நம்பினார். குடியாட்சி வெற்றி பெறவேண்டுமானால், கல்வித் தகுதி பெற்ற வாக்காளர் தேவை என்பதைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.
 

• நிலைத்து நிற்கும் கல்வி
 

நாம் ஈட்டும் செல்வம் நம் கையை விட்டும் போகலாம். ஆனால், நாம் கற்கும் கல்வி என்றைக்கும் நிலைத்து நிற்கும். இந்த உண்மையைப் பாரதிதாசன்,
 

இல்லை என்பது கல்வி இல்லாமையே !
உடையவர் என்பவர் கல்வி உடையவரே !

(நாடு, நாட்டியல் நாட்டுவோம், வரிகள்: 33 - 34)
 

என்று குறிப்பிடுகிறார். அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்று, தமிழ் நாட்டிற்குப் பெருமை ஏற்படுத்துங்கள் என்கிறார் பாரதிதாசன்.
 

1.3.4 தமிழ்நாட்டில் ஒற்றுமை
 

பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சி சிதைந்தமைக்கும், தமிழ் மக்கள் அல்லல் பல அடைந்தமைக்கும், தமிழ் மொழியின் செல்வாக்கு குறைந்தமைக்கும் காரணம் தமிழ்நாட்டில் இருந்த மன்னர்களுக்குள்ளே போட்டி, பொறாமை, அவற்றின் விளைவான சண்டைகள். அவற்றால் ஏற்பட்ட அந்நியர் ஆதிக்கம், அந்நியர் ஆட்சி ஆகியனவேயாகும். நாட்டில் ஒற்றுமை இருந்தால்தான், நாடும், மக்களும், மொழியும் பாதுகாப்போடு, சிறப்படையும் என்பதை நன்கு உணர்ந்தவர் பாரதிதாசன். எனவே,
 

உற்ற நலம் உணர்ந்திடுக தமிழ் இனத்தார்
உள்ளூர ஒன்றுபட்டால் வாழ்தல் கூடும்.

(தமிழ் ; தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும் : 15-16)
 

என்று வேண்டுகிறார்.

ஒற்றுமையாக இருந்ததால் நாம் பெற்ற நன்மைகளையும் ஒற்றுமை இல்லாமையால் அடைந்த துன்பங்களையும் நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். நம் உள்ளத்தின் உணர்வுகளால் ஒன்று பட்டால் நமக்கு நல்வாழ்வு ஏற்படும். எனவே தமிழர்களே! ஒன்று படுங்கள் என்று குறிப்பிடுகிறார்.
 

1.3.5 தமிழ்நாட்டில் தமிழ்
 

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்று முழங்கியவர் பாரதிதாசன். தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலும், ஏடுகளிலும், கூத்துகளிலும், இசையிலும், தெருக்களிலும், தமிழ் உரிய இடத்தைப் பெறவில்லையே என்று மிக வருந்தியவர் பாவேந்தர். எனவே, தமிழ்நாட்டின் இன்றைய நிலையையும் சுட்டிக்காட்டி, அந்த நிலையை மாற்றியமைத்து, புதியதோர் உலகம் செய்வோம், தமிழுக்குப் புத்துயிர் ஊட்டுவோம் என்று கூறுகிறார் பாரதிதாசன். அதற்கு ஒரே வழி, எல்லாத் துறைகளிலும் தமிழுக்கு உரிய இடத்தைப் பெறச் செய்வதாகும் என்று கூறுகிறார்.
 

நன்று தமிழ் வளர்க ! தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக !
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !

(முதல்தொகுதி, தமிழ் உணவு: 9-வது பாடல் வரிகள்: 3 - 6)
 

தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை எல்லாம் தமிழ்த்தொண்டு மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதை இளைய தலைமுறை செய்ய வேண்டும். எனவே, இளைஞர்களைப் பார்த்து,
 

தொண்டு செய்வாய் ! தமிழுக்குத்
     துறைதோறும் துறைதோறும்
     துடித்தெழுந்தே

(தமிழ் இயக்கம். பாடல் 11)
 

என்று வேண்டுகிறார்.
 

• இனிய தமிழ்
 

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமென்று பாடிய பாரதிதாசன், பிறமொழியைப் பயன்படுத்திய இல்லற விழாவில், இனிய தமிழை ஒலிக்க வேண்டுமென்று வேண்டுகிறார்.

இல்வாழ்க்கையைத் தமிழர்கள், இனிய இல்லறம் என்றே குறிப்பிடுகின்றனர். இனிமையின் தொடக்கம் இல்லறம். மனைவி, மக்களுடன், உற்றார் உறவினருடன் வாழும் போது கிடைக்கும் இன்பத்திற்கு இணை ஏது? இன்பம் தரும் இத்தகைய இல்லற வாழ்க்கையில் புகும் போது புரியாத மொழியில், புரியாத மந்திரங்களை ஓதுவதால் என்ன பயன்? புரியும் மொழியில் இனிமைத் தமிழில் வாழ்த்தினால் அந்த இல்லற வாழ்வில் இனிமை பொங்கும் ; மகிழ்ச்சி தங்கும் என்பதனை
 

மணமக்கள் இல்லறத்தை
மாத்தமிழில் தொடங்கிடுக
மல்கும் இன்பம்.

(தமிழ் இயக்கம், விழாநடத்துவோர் :20)
 

என்று குறிப்பிடுகிறார்.

இன்பம் தரும் இல்லற வாழ்க்கையை, இன்பம் தரும் தமிழில் தொடங்குங்கள் என்று வேண்டுகிறார். தாய் மொழியின் மீது கவிஞர் கொண்ட பற்றைத் தமிழ் உணர்வை வாழ்நாள் முழுவதும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே பாரதிதாசன் ஆசை.
 

1.3.6 தமிழ் வாழ்க! நாடு வாழ்க!
 

மொழித் தொன்மையும், இலக்கிய வளமையும், பண்பாட்டுச் சிறப்பும் பொருந்திய தமிழ் நாட்டின் மீது கொண்ட அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தும் பாரதிதாசன்,
 

தமிழ் நாடே வாழ்க - எம்
அமிழ்தாகிய இயல், இசை, கூத்தென்னும்
தமிழாகிய உயிர்தழையும் விழுமிய
தமிழ் நாடே வாழ்க !

(தேனருவி, தமிழ்நாட்டு வாழ்த்து வரிகள்: 1- 4)
 

என்று தமிழ் நாட்டை வாழ்த்துகின்றார். அமிழ்தம் போன்ற சிறப்பு வாய்ந்த, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் உயிர் போன்ற சிறப்புடையது. அத்தகைய சிறப்புக்குரிய மொழி பிறந்த தமிழ் நாடே வாழ்க என்று வாழ்த்துகின்றார்.