5.3 பிசிராந்தையார்
 

E

பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாடகம் பிசிராந்தையார் என்னும் நாடகம் ஆகும். கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே தோன்றிய நட்பை அடிப்படையாகக் கொண்டது இந்த நாடகம்.

ஒரு நாட்டில் தீமையே நிகழ வில்லை என்றால் அந்நாட்டு மக்களால் திடீரென்று அயலாரால் நிகழும் தீமையை எதிர்க்க இயலாது; திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கவும், அவற்றைப் போக்கவும் வலிமை இல்லாமல் போய் விடுகிறது. எனவே ஒரு நாட்டில் தீயவர்களும் சிலர் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் வலிமையை வளர்த்துக் கொள்வார்கள் என்னும் மாறுபட்ட கருத்தையும் இந்த நாடகம் வலியுறுத்துகிறது.
 

5.3.1 பிசிராந்தையார் நாடகக்கதை
 

காற்றும் மழையும் வேகமாக அடித்தன. யானைமேல் இருந்தபடி ஓர் உருவம் ஆராய்ச்சி மணியை அடித்தது. அரண்மனை நிலாமுற்றத்தில் நின்று கொண்டிருந்த மன்னன் வெளியே வருகிறான்.
 

காட்சி
 

வேகமாக வீசிய காற்று ஆராய்ச்சி மணி அடித்தவரைத் தூக்கி எறிந்தது. விழுந்தவரைத் தாங்குவதற்கு ஓடிச் சென்ற மன்னனையும் காற்றுத் தூக்கி வீசியது. முன்பே ஒருவர் ஆலமரக் கிளை அருகே தூக்கி எறியப்பட்டுக் கிடந்தார்.

காற்றும் மழையும் குறைந்தது. ஆராய்ச்சி மணியை அடித்தவர் பிசிராந்தையார் என்பது தெரிந்தது. ஆலமரக்கிளையின் அருகே கிடந்தவர் மேற்படியார் என்னும் புலவர் என்பதும் புரிந்தது.

மக்கள் இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சி ஒளிவதைக் கண்டு பிசிராந்தையார் வியந்தார். இயற்கைச் சீற்றத்தைத் தாங்கும் வலிமை இல்லாதவர்களா இந்த மக்கள்? என்று எண்ணிய பிசிராந்தையார் வருந்தினார்.
 

5.3.2 பெட்டியில் பிணம்
 

புயல் மழையால் மக்கள் அடைந்த துன்பத்தைப் பார்வையிடுவதற்கு மன்னனும் பிசிராந்தையாரும் மேற்படியாரும் சென்றனர். அவ்வாறு செல்லும் போது ஒரு சிற்றூரில் உள்ள குளக்கரைக்கு அவர்கள் அதிகாலையில் வந்தனர். அந்தக் குளத்தில் உடையப்பன் என்பவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஓடைப்பூ என்பவள் அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறாள். அவன், ‘மீன் பிடிக்காமல் வரமாட்டேன்’ என்கிறான்.
 

காட்சி
 

இவற்றை மன்னனும் மற்றவர்களும் மறைந்து நின்று பார்க்கிறார்கள். உடையப்பனின் வலையில் ஏதோ பெரிதாக மாட்டிக் கொண்டது. அவனாலும் ஓடைப்பூவாலும் அதை இழுக்க முடியவில்லை. மன்னனும் புலவர்களும் சென்று வெளியில் இழுத்தார்கள். அது ஒரு பெட்டி. அந்தப் பெட்டியில் கருவுற்ற பச்சைக்கிளி என்ற பெண்ணின் பிணம் இருந்தது. அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருந்தாள். அந்தக் கொலையைச் செய்தது யார் என்று தெரியவில்லை.
 

5.3.3 அமைச்சருக்குத் தண்டனை
 

அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். மூன்று நாட்களுக்குள் கொலை செய்தவனைக் கண்டு பிடித்து விடவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கவில்லை என்றால் அமைச்சரைத் தூக்கிலிடுமாறு மன்னன் ஆணையிட்டான். அப்போது ஒருவன் ‘நான்தான் கொலை செய்தேன்’ என்று கூறினான். ஆனால், அவன் யார் என்பதையும் கொலை செய்த காரணத்தையும் கூறவில்லை.
 


 

‘இன்னும் மூன்று நாட்களுக்குள் கொலைக்கான காரணத்தை அமைச்சர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் கொலை செய்ததாகச் சொன்னவனுடன் அமைச்சரும் தூக்கிலிடப்படுவார்' என்றான் மன்னன்.
 

5.3.4 முன் கதை
 

பச்சைக்கிளி சிறுபெண்ணாக இருக்கும் போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது குளத்திற்குள் ஒரு கரடி வந்தது. கரடியைப் பார்த்த பச்சைக்கிளி பயந்து விட்டாள். அந்த வழியாக வந்த தூயன் என்பவன் அவளைக் காப்பாற்றினான். அவன் சோழ நாட்டைச் சேர்ந்தவன். பச்சைக்கிளியுடன் தூயனும் அவளது வீட்டிற்குப் போனான். தூயன் பச்சைக்கிளியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், பச்சைக்கிளி அவ்வாறு கருதவில்லை.
 


 

ஆண்டுகள் கழிந்தன.

அதே குளக்கரையில் மான்வளவன் என்பவனைக் கண்டு பச்சைக்கிளி காதல் கொள்கிறாள். பெற்றோர் சம்மதத்துடன் அவனைத் திருமணம் செய்து கொண்டாள். பச்சைக்கிளியின் திருமணத்தை அறிந்த தூயன் கோபம் கொண்டான். அவளைப் பழிவாங்க எண்ணினான்.

பச்சைக்கிளிக்குப் பொன்னன் என்று ஒரு மகன் இருந்தான். மீண்டும் பச்சைக்கிளி கருவுற்றாள். தனது கணவனிடம் அவள் இலந்தப் பழம் கேட்டாள்.

பல இடங்களில் அலைந்த பிறகு ஐந்து இலந்தப் பழங்களை மட்டும் மான்வளவன் வாங்கி வந்தான். பச்சைக்கிளி ஒரு பழத்தைத் தனது மகன் பொன்னனுக்குக் கொடுத்தாள். மீதம் நான்கையும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்கி விட்டாள்.
 

காட்சி
 

இலந்தப் பழத்தில் ஆசை கொண்ட பொன்னன் மேலும் இரண்டு பழங்களைத் தனது தாய்க்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

தாடியுடன் அங்கே வந்த தூயன் அந்தக் கனி இரண்டையும் பொன்னனிடமிருந்து வாங்கினான். பொன்னன் பள்ளிக்குப் போய் விட்டான்.

மான்வளவன் வரும் வழியில் இலந்தப் பழத்துடன் வந்தான் தூயன். அவனிடம் ‘இலந்தப் பழம் வேண்டும், கிடைக்குமா? எங்கே கிடைக்கும்?’ என்று கேட்டான் மான்வளவன்.

‘இது எனக்கு ஒரு பெண் தந்த அன்பளிப்பு. அவள் கணவன் ஐந்து கனிகள் தந்தான். அதில் ஒன்றை அவளது மகனுக்குக் கொடுத்தாள். இரண்டை அன்பால் எனக்குத் தந்தாள்’ என்றான்.

தனது மனைவி பச்சைக்கிளிதான் இவ்வாறு செய்தவள் என்று அறிந்தான் மான்வளவன்; வீட்டுக்கு வந்ததும் ஆத்திரத்தில் மனைவியைக் கொன்று விட்டான்.
 

5.3.5 இளங்கோச் சோழனின் பதவி ஆசை
 

பச்சைக்கிளியின் கொலையில் சோழநாட்டுத் தூயனும் தொடர்பு உடையவன். எனவே இந்தக் கொலைக்குச் சோழநாடு தான் காரணம் என்று பதவி ஆசையில் இளங்கோச் சோழன் பொய்ச் செய்தியைப் பரப்பினான். சோழநாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரின் மகள் மணியிடையை இளங்கோச் சோழன் விரும்பினான். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகப் படைத்தலைவரிடம் கூறினான். திருமணத்திற்கு முன்பு, தான் மன்னன் ஆவதற்கு உதவுமாறு அவரிடம் வேண்டினான்.

படைத்தலைவரின் உதவியுடன் இளங்கோச் சோழனும் அவன் தம்பி செங்கோச் சோழனும் படையுடன் தந்தையை எதிர்த்து வந்தனர். படை வருவதை அறிந்த கோப்பெருஞ்சோழன் வாளுடன் எதிர்த்து வந்தான். அவனைக் கண்டதும் இளங்கோச் சோழனும் செங்கோச் சோழனும் அஞ்சி ஓடினார்கள். அவர்கள் பாண்டிய நாட்டுப்படை உதவியுடன் தந்தையை எதிர்க்க எண்ணினார்கள். ஆனால் பாண்டியன், சோழ இளவரசர்களின் வஞ்சக எண்ணத்தைப் பிசிராந்தையார் மூலம் அறிந்தான். எனவே அவர்களுக்கு உதவ மறுத்து விட்டான். கோப்பெருஞ்சோழனுக்குத் துணையாகத் தனது படையையும் அனுப்பினான்.
 


 

பாண்டியப் படைக்கும் கோப்பெருஞ்சோழனின் படைக்கும் இடையில் சோழ இளவரசர்களின் படை சிக்கியது. இளவரசர்களை அழிப்பதற்கு வாளை உருவியபடி புறப்பட்டான் கோப்பெருஞ்சோழன். மன்னனைப் புலவர் எயிற்றியனார் தடுத்தார். இளவரசர்கள் இறந்த பிறகு இந்த நாடு யாருக்காக என்று உணர்த்தினார்.
 

5.3.6 கோப்பெருஞ்சோழன் வடக்கிருத்தல்
 

இளவரசர்களின் தீய எண்ணத்தை அறிந்த கோப்பெருஞ்சோழன் பெரிதும் வருந்தினான்; இனி மேலும் தான் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதினான்; வடக்கிருந்து உயிர் விடுவதற்கு ஓர் ஆலமரத்தடியைத் தேர்வு செய்தான். தனக்கு அருகில் பிசிராந்தையாரும் வடக்கு இருப்பதற்கு இடம் ஒதுக்கச் சொன்னான்.
 

காட்சி
 

வடக்கிருத்தல்

“உயிரை விடும் நோக்கத்துடன்
வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து
உயிர் விடுதல்.”
 

தாங்கள் வடக்கிருப்பது பிசிராந்தையாருக்குத் தெரியாது. எனவே அவர் ‘வரமாட்டார்’ என்று சான்றோர்களும் புலவர்களும் தெரிவித்தனர். கோப்பெருஞ்சோழனோ, பிசிராந்தையார் உறுதியாக வருவார் என்று நம்பினான்.

அப்போது பிசிராந்தையாரின் யானை வரும் மணி ஓசை கேட்டது ‘அதோ வந்து விட்டார் பிசிராந்தையார்’ என்றான் கோப்பெருஞ்சோழன். பிசிராந்தையாரும் சோழனுடன் வடக்கிருந்தார்.  அதைக் கண்ட புலவர் பொத்தியாரும் அவர்களுடன் வடக்கிருந்தார்.

சோழநாட்டு மக்கள் அனைவரும் பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையில் இருந்த நட்பின் ஆழத்தைப் போற்றினார்கள்.

தந்தையும் புலவர்களும் வடக்கிருப்பதை அறிந்த இளங்கோச் சோழனும் செங்கோச் சோழனும் தங்கள் அறிவற்ற செயலுக்கு வருந்தினார்கள்; தந்தையிடம் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
 


 

வடக்கிருந்த புலவர் பிசிராந்தையார், புலவர் பொத்தியார், கோப்பெருஞ்சோழன் மூவரும் உயிர் துறந்தனர்.

பாரதிதாசன் இந்த நாடகத்தின் வாயிலாகக் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பச்சைக்கிளியின் கொலை நிகழ்ச்சியையும் இணைத்துள்ளார். இந்தக் கொலையைக் காரணம் காட்டி, பதவி ஆசை பிடித்த இளங்கோச் சோழன் குழப்பம் விளைவிப்பதையும் பாரதிதாசன் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளதை நாம் அறிய முடிகிறது.
 

தன் மதிப்பீடு: வினாக்கள் - I
 

  1. நாடக வகைகள் யாவை?
  1. வடக்கிருத்தல் என்றால் என்ன?
  1. பிசிராந்தையார் என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ள புலவர்களின் பெயர்களை எழுதுக.