1.4. நிலையாமை
செல்வம், இளமை, யாக்கை ஆகியன நிலைத்த
தன்மை
உடையன அல்ல.
நெருநல் உளனொருவன் இன்றில்லை
என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு |
 |
(குறள்
- 336)
|
(நெருநல் = நேற்று)
என்று நிலையாமையைச் சொல்லும்
குறட் கருத்தின்
விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது.
நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக்
காட்டப்படுகிறது.
1.4.1
செல்வம் நிலையாமை
அறுசுவை உணவுகள் ஒரு பக்கம். அவ்வுணவினை
ஊட்ட
அன்பு மனைவி அவன் பக்கம். கணவனோ எதை உண்ணுவது
என்று தெரியாமல் ஒவ்வொன்றிலும் ஒரு பிடி
அளவே
உண்ணும் செல்வந்தன். இத்தகைய செல்வச் செழிப்பில்
இருப்பவனும் ஒருநாள் அனைத்துச் செல்வங்களையும் இழக்கக்
கூடும். அத்துடன் நில்லாமல் தனக்குத் தேவையான அற்பமான
கூழையும் பிறரிடம் சென்று யாசிக்கும் நிலையை அடையலாம்
என்ற கருத்தமைந்த பாடல் செல்வம் நிலையாமையை
விளக்குகிறது (நாலடி-1). வண்டியின் உருளை போன்று யார்
மாட்டும் நில்லாது சென்று கொண்டே இருக்கும் செல்வம்
என்று செல்வத்தின் நிலையாமைத் தன்மையைச் சொல்கிறது
இன்னொரு பாடல் (நாலடி- 2).
மிகுந்த செல்வம் பெற்றிருக்கிறோம் என்று அறியாமையினால்
செருக்குற்றுத் திரிவர் சிலர். அவர்கள் வருந்தும்படி செல்வம்
அவர்களை விட்டு நீங்கும். எப்படித் தெரியுமா? இவர்கள்
செல்வந்தர்களாய் இருந்தார்கள் என்ற அடையாளம் கூட
இல்லாதபடி நீங்குமாம். இதற்கு எதனை உவமை சொல்கிறது
நாலடியார், பாருங்கள். இரவில் கரிய மேகம் வெளிப்படுத்திய
மின்னல், தோன்றிய வேகத்தில் சுவடில்லாமல் அழியும்.
அடையாளமில்லாமல் அழிந்து போகும். அதுபோலச்
செல்வமும் அழிந்து விடும். இக்கருத்தமைந்த பாடல் இதோ,
செல்வர்யாம் என்று
செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும் |
 |
(நாலடி
- 8)
|
(எல் = இரவு; கொண்மூ = மேகம்; மருங்கு =
அடையாளம்)
எனவே செல்வம் இருக்கின்ற காலத்திலேயே விரைந்து அறம்
செய்க என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது.
மலர் தோறும் தேனெடுத்துக் கூடுகளில் தேனீக்கள்
தேன்
சேகரிக்கின்றன. ஆனால் அந்தத் தேனைத்
தேனீக்கள்
அனுபவிக்கின்றனவா? இல்லையே. தேனை யாரோ எடுத்துக்
கொண்டு போய்விடுகிறார்கள். தேனீக்கள் தேனை இழக்கின்றன.
அதுபோல் பொருளைத் தேடி வைத்தவர்கள் செல்வத்தின்
நிலையாமைப் பண்பின் காரணமாகச்
செல்வத்தை இழக்கிறார்கள். செல்வம் இருந்த காலத்தில் இவர்கள்
நல்ல
அறம் செய்யவில்லை. இல்லாதவர்களுக்குக் கொடுக்கவில்லை.
செல்வம் இழந்த நிலையில் அவர்களும் அனுபவிக்க இயலாது.
தேனீக்கள் தேன் சேகரித்து இழக்கும் செயலைச் சாட்சியாகக்
காட்டி விரைந்து அறம் செய்வதை வலியுறுத்தும் நாலடிப்
பாடல் இது.
உடாஅதும் உண்ணாஅதும் தம்முடம்பு
செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட
உய்த்தீட்டும் தேனீக் கரி. |
 |
(நாலடி
- 10)
|
(செற்றும் = கெட்டும்; கரி = சாட்சி)
1.4.2
இளமை நிலையாமை
கூனி வளைந்து, தலை நடுங்கி, தடியினை ஊன்றி நடக்கிறாள்
முதியவள் ஒருத்தி. இவளும் இளமையில் கண்டோர் வியக்கும்
தெய்வப் பெண்ணாக இருந்திருப்பாள். அழகும் இளமையும்
நிலைத்து நில்லாதன என்பதைத்தானே இவை காட்டுகின்றன.
கடுங்காற்று அடிக்கும் போது முதிர்ந்த பழங்கள் உதிர்கின்றன.
பிஞ்சுகளும் உதிர்ந்து விடுதல் உண்டு. கூற்றுவன் முதியவரை
மட்டுமல்லாது இளைஞரையும் எடுத்துக் கொள்வதுண்டு.
அதனால் நாம் இளைஞர், பின்னால் அறம்
செய்து
கொள்ளலாம் என்று காலம் தாழ்த்த வேண்டாம். எனவே
இப்போதே அறம் செய்க என்றுரைக்கும் பாடல் இதோ.
|
மற்றறிவாம் நல்வினை யாம்இளையோம்
என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு |
 |
(நாலடி
- 19)
|
(தீவளி = கடுங்காற்று; நற்காய் = பிஞ்சுகள்;
கரவாது = மறைத்து வைக்காது)
எனவே இளமையிலேயே அறம் செய்க என்று
எச்சரிக்கை
செய்கிறது இப்பாடல்.
1.4.3
யாக்கை நிலையாமை
பிறப்பு உண்டென்றால் இறப்பும் உண்டு. பிறந்தவர்
யாவரும்
இறந்துதான் ஆக வேண்டும். தவிர்க்க இயலாது. ஒரு நாள்
கழிந்தது என்றால் வாழ்நாளின் ஒரு பகுதி குறைந்தது என்று
பொருள். கூற்றுவன் ஒவ்வொரு நாளாக அளந்து மனிதனின்
வாழ்நாளை உண்ணுகிறான். இதனை வள்ளுவர்,
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துஉணர்வார்ப் பெறின் |
 |
(குறள்
- 334)
|
என்கிறார். ஒருவனின் ஒரு நாள் உணவு ‘நாழி’யளவென்பர்.
நாளை அளந்துண்ணும் கூற்றுவனும் ஞாயிற்றை நாழியாகக்
கொள்கிறான். மனிதனின் வாழ்நாளாகிய தானியத்தைத் தினம்
தினம் அளந்து உண்ணுகிறான். உண்ண உண்ண மனிதனின்
வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் ஒன்றுமே
இல்லாமல் போய்விடுகிறது. கூற்றுவன் ஒரு மனிதனை உண்டு
முடித்து விடுகிறான். இதனை,
தோற்றம்சால் ஞாயிறு நாழியா
வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் - ஆற்ற
அறம்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதார் இல் |
 |
(நாலடி
- 7)
|
என்ற பாடல் மூலம் எவ்வளவு அருமையான நிலைமையை
எடுத்துரைக்கிறது நாலடியார்!
நீர் மேல் குமிழியே இவ்வுலக வாழ்க்கை.
பறவைகள் தாம்
தங்கியிருக்கும் மரக்கிளையை விட்டுப் பறந்து சென்று விடும்.
அது போல உடலை விட்டு உயிர்
பறந்து செல்லும்
இயல்புடையது. இதனை உணர்ந்து அறச் செயல்களை விரைந்து
செய்க என்று வலியுறுத்துகிறது நாலடியார் (நாலடி-30).
நிலையாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் உயிரைப்
பறவைக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார். முட்டைக்குள் இருக்கும் கரு
உரிய காலம் வந்தபோது முட்டை தனித்துக் கிடக்கும். அது
போன்ற உறவும் நட்பும் தான் நம் உடம்புக்கும் உயிருக்கும்
இடையே இருக்கிறது. இக்கருத்தைக் கூறும் குறட்பா,
|
குடம்பை தனித்தொழியப் புள்பறந்
தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு |
 |
(குறள் - 338)
|
|
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை
என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை |
 |
(நாலடி - 29)
|
என்று நிலையாமைக்குப் பொருத்தமான உவமையாகப் புல் நுனி
மேல் உள்ள நீரைச் சுட்டி விரைந்து
அறம் செய்ய
வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது நாலடியார்.
செல்வம், இளமை, யாக்கை ஆகியவற்றின் நிலையாமையை
உணர்ந்து செய்யும் அறத்தின் பயன் மிகப் பெரியது. மிகச் சிறிய
ஆலம் விதை வளர்ந்து மரமாகிப் பெரிய நிழலைத் தரும். அது
போல் தகுதியுடையவர்க்குச் செய்யும் அறமும் அளவால்
சிறியதாயினும் அதன் பயன் வானத்தை விடப் பெரிதாகி
வளர்ந்து நிற்கும் (நாலடி - 38).
|