1.5 இல்லற நெறி
இல்லற நெறி என்பது இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும்
ஒழுக்கம்.
இல்லறத்திற்குரிய அறங்களை இல்லறவியலில்
நாலடியார்
கூறுகிறது. இல்லறத்திற்குத் தேவையான நல்லறங்களை
விவரிக்கின்றது.
1.5.1
இல்லறத்திற்கு வேண்டியன
நல்லறமாகிய இல்லறத்திற்குத் தேவையானவை எவை
என்று
பார்ப்போமா? ஈகை, பொறுமை முதலிய நற்குணங்கள் இனிய
இல்லறத்திற்கு அடிப்படையாகும்.
• ஈகை
ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல்.
இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது
சிறந்த
அறமாகும். நம்மிடம் இருப்பதில் அரிசி
அளவாவது
மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும். மற்றவர்க்குக் கொடுக்க
வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கின்றதா?
சிலருக்கு ஈகைக் குணம் உண்டு. சிலருக்கு இல்லை என்பதைத்
தக்க உவமை கொண்டு விளக்கும் நாலடிப் பாடற் கருத்தைப்
பாருங்கள்.
ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும்
அணுகிப்
பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்;
ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர்.
ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன்
தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று
பனை
மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும்
அழகை நாமும் ரசிக்கலாம். அவை எளிய உவமைகள்; நடைமுறை
வாழ்க்கைக்கு ஏற்ற உவமைகள் (நாலடி - 97).
முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும்.
இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும்.
சான்றோர்
ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல்
மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று
ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்லும் ஒரு நாலடிப் பாடல்
(நாலடி - 100).
• பொறையுடைமை
ஈகைக்கு அடுத்தபடியாகப் பொறுமை உடைமை.
அதாவது
பொறையுடைமை இல்லறத்திற்கு அடிப்படையான ஒன்று
எனலாம். இப்பொறுமைப் பண்பு சிறந்தது. பொறுமை இன்றி
இருத்தல் பழிக்குக் காரணமாகிவிடும் (நாலடி - 72). கீழ் மக்கள்
அறியாமையால் செய்யும் செயல்களைப் பொறுக்க வேண்டும்.
பொறுமையின்மை பழியை உண்டாக்கும் என்பதால் பொறுக்க
வேண்டும் என்பார். நட்பில் கூடப் பொறுமை வேண்டுமென்பார்.
தன்னுடைய நண்பர்கள் இனிமையல்லாதவற்றைக் கூறும் போதும்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பார் (நாலடி - 73).
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை |
 |
(குறள் - 151)
|
தன்னைத் தோண்டக் கூடியவரையும் பொறுத்துக்
கொள்ளும்
நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல்
தலை சிறந்த அறமாகும்.
• சுற்றம்
இல்லறத்தில் உறவுப்பாலம் அமைப்பவர்கள்
சுற்றத்தார்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம்
அன்புள்ள
உறவினரைக் கண்டால் நீங்கிவிடும். இப்படிப் பட்ட உறவினரைப்
பாதுகாப்பவனே சிறந்தவன். தன்னிடம் வந்த உறவினரைப்
பாதுகாத்துப் பழுத்த மரம் போலப் பலர்க்கும் பயன்படுபவனே
சிறந்தவன். துன்பமடைந்தவர்க்கு உதவும் பண்பு இல்லறத்தார்க்கு
வேண்டும். வெயிலினைத் தாங்காது வருகின்றவர்களுக்கு
நிழலைத் தந்து இடம்தரும் ஆலமரம் போலவும்; பறவைகள்
பலவும் உண்ணும் பழங்களைத் தரும் ஆலமரம் போலவும்
சுற்றத்தினருக்கு உதவ வேண்டும் (நாலடி - 202).
பல காய்களைத் தாங்கும் மரக்கிளை போலப்
பெரியவர்கள்
தம்மை வந்தடைந்த உறவினரைக் காப்பாற்ற மாட்டோம் என்று
கூற மாட்டார். உண்மையான உறவின் உயர்வைக் கூறும்
கருத்துச் சிறப்பை நாலடிப்பாடலில் காணலாம். பால் சோறு மிக
இனிமையானதுதான். ஆனால் பகைவரிடமிருந்து அதைப்
பெறும்போது அது இனிப்பதில்லை. ஆனால் உயிர் போன்ற
உறவினரிடம் பெறும் உப்பிலாக் கஞ்சியோ இன்பம் தரும்
என்கிறது. (நாலடி - 206)
1.5.2
இல்லறத்தார் விலக்க வேண்டியன
இல்லறத்திற்குப் பொருந்தாதவையாக உள்ளனவற்றை நாலடியார்
எடுத்துரைக்கின்றது. உலகமே பெறுவதாயினும் பொய் பேசக்
கூடாது. நல்லோரைக் கெடுத்தல், பிறன் மனை
நயத்தல்
ஆகியன இல்லறமாகிய நல்லறத்தைக் கெடுப்பனவாம்.
• பொய்யாமை
எல்லா விளக்கும் விளக்கல்ல
சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு |
 |
(குறள் - 299)
|
என்று பொய்யாமையை ஒளி தரும் விளக்காகக்
கூறுகிறார்
திருவள்ளுவர். நாலடியார் பொய்யாமை பற்றி என்ன கூறுகிறது
என்று பார்ப்போம்.
இரவலன் ஒருவன் பொருளை ஒருவனிடம் யாசிக்கிறான். அவன்
உடனடியாகப் பொருளைத் தரவில்லை. கொடுக்க மாட்டேன்
என்று மறுக்கவுமில்லை. பிறகு என்ன செய்தான் தெரியுமா?
கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே
இருந்து நீண்ட காலம் கழித்துச் சொன்ன
சொல்லைப்
பொய்யாக்கி விட்டான். இந்தப் பொய்யைத் தான் பெரிய குற்றம்
என்கிறது நாலடியார். எவ்வளவு பெரிய குற்றம் என்றால், பிறர்
செய்த நன்றியைக் கொன்றவரது குற்றத்தைக் காட்டிலும் பெரிய
குற்றம் உடையதாகும்.
இசையா ஒருபொருள் இல்லென்றல்
யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து. |
 |
(நாலடி - 111)
|
(வசையன்று = குற்றமன்று; நசை = விருப்பம்;
அழுங்க = குறைய; நிரைதொடீஇ = வரிசையாக வளையல்களை
அணிந்த பெண்ணே)
• பிறர் மனை நயவாமை
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு,
பிறர் மனை
நயப்பது பண்புக்கு மாறுபட்டது. பிறர் மனை நயப்பதால் வரும்
அச்சம் பெரிது. ஆதலால் நல்லோர் பிறர் மனைவியை விரும்ப
மாட்டார். பிறர் மனைவியை விரும்புவாரிடம் அறம், புகழ், நட்பு,
பெருமை இந்நான்கும் சேரா. பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய
நான்கும் சேர்வனவாம் (நாலடி - 82). குலப்பழி உண்டாகும்
(நாலடி - 84).
முற்பிறப்பில் அயலார் மனைவியை விரும்பியவரே, இப்பிறப்பில்
பேடிகளாய்ப் பிறந்து கூத்தாடி உண்பவர்கள்; என்று பிறன்மனை
விரும்பியதால் வரும் தீங்கு அடுத்த பிறவியிலும் தொடரும்
என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.
(நாலடி - 85)
இப்பிறவியில் செய்யும் வினைக்குப் பயன் மறுபிறவியிலும்
தொடரும் என்ற சமண சமயக் கொள்கையினையும் இங்குக்
காணலாம்.
|