2.0 பாட முன்னுரை
பிற உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவன்,
சிந்திக்கத்
தெரிந்தவன், துன்பங்களையே நினைத்து
வருந்திக்
கொண்டிராமல் தெளிவாகச் சிந்தித்துத் துன்பங்களைப் போக்க
வழி கண்டு பிடிக்கும் திறன் உடையவன். இம்முறையில்தான்
சிந்தனையாளர் பலரும் தாம் கண்ட உண்மைகளைப் பிறர்
அறிந்து பயன்பெற ஏட்டில் எழுதி வைத்தனர். இவ்வாறு
எழுதப்பட்ட நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு
வழி
காட்டுகின்றன. இப்படி வழிகாட்டும் இலக்கியங்களுள் ஒரு
வகை என அறநூல்களைச் சொல்லலாம். பதினெண்கீழ்க்
கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக்கடிகை என்ற
அறநூலைப் பற்றி இப்பாடத்தில் படிக்கலாம்.
பாடல்களில் கூறப்பெறும் நான்கு
கருத்துகளினால்
நான்மணிக்கடிகை என்று இந்நூல் பெயர் பெற்றது. கடிகை
என்ற சொல்லுக்குரிய பொருள்களில் துண்டம்
என்பது
ஒன்றாகும். ஆதலின் நான்மணிக்கடிகை என்பது நான்கு
இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும்.
நான்கு
வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன் எனவும்
பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலிலும் சிறந்த நான்கு
கருத்துகளைத் தேர்ந்தெடுத்துச் சிறந்த முறையில் கூறியுள்ளமை
படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது.
• ஆசிரியர்
இந்த நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவர். நாகனார்
என்பது இவரது இயற்பெயர் எனவும் விளம்பி என்பது ஊர்ப்
பெயர் எனவும் கொள்வர். கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
இரண்டும் திருமாலைப் பற்றியவை. ஆதலின் இவர் வைணவ
சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம்
கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகுவாள்
|
 |
(நான்மணிக்கடிகை.85)
|
என்ற பாடல் அடி ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்‘
என்னும் சிலப்பதிகார அடிகளை ஒத்துள்ளது. எனவே
ஆசிரியர் சிலப்பதிகார காலத்தை அடுத்து வாழ்ந்தவர் எனக்
கொள்ளலாம்.
• நூல் அமைப்பும் பாடுபொருளும்
கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்கள் இந்நூலில்
உள்ளன.
பாடல்கள் வெண்பா யாப்பால் ஆனவை. வாழ்க்கை நெறிகளை
அறிவுறுத்துவது இந்நூலின் நோக்கமாக உள்ளது.
வாழ்வியல் உண்மைகளைப் பல
கோணங்களில்
எடுத்துரைக்கிறது இந்நூல். நல்லறமாகிய இல்லறத்தின்
சிறப்பைப் பேசுகிறது. கல்வியின் உயர்வையும் சிறப்பையும்
எடுத்துக் கூறி, கற்றலை வலியுறுத்துகிறது. செல்வத்தின்
சிறப்பையும் வலிமையையும் எடுத்துக்காட்டிப் பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லை என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது.
நட்பின் சிறப்பு நயமுறக் காட்டப்படுகிறது. இனியவை கூறவும்,
வன்சொல் தவிர்க்கவும் பழகிக் கொள்வதே பண்புடைமை
என்பதும் உணர்த்தப்படுகிறது. இவ்வுலகில் காணப்படும் சில
பொருள்களின் இயல்பைக் கூறி வாழ்க்கை
நெறிகளை
அவற்றோடு தொடர்புபடுத்திக் கூறும் முறையினை இந்நூலில்
காணலாம். தம் செயலாலும், தாம் செய்யும் தொழிலாலும்
வேறுபடும் பலவகை மாந்தர்களின் இயல்புகளைத்
தொகுத்துரைக்கிறது நான்மணிக்கடிகை.
குதிரைகள் அவற்றில் ஏறிச் செலுத்துவோன் திறத்திற்கேற்பவே
இயங்கும் என்றும் (நான்.73), நீரின் இருப்பை வானம்பாடிப்
பறவை அறியும் என்றும் (நான்.97) அசுணப்பறவைகள்
பறையோசை கேட்டால் இறந்துபடும் என்றும் (நான்.4)
யானையைக் கட்டுத்தறியாலும், பாம்பை மந்திரமொழியாலும்
மக்கள் வயப்படுத்துவர் என்றும்
(நான்.12) விலங்குகள்,
பறவைகள் ஆகியவற்றின் இயல்பைச் சுட்டிக்காட்டி
நீதி
உரைப்பதை நான்மணிக்கடிகையில் ஆங்காங்கே காணலாம்.
நல்ல மணமுள்ள அகில்கட்டை கள்ளிமரத்தின் நடுவில்
உண்டாகும். ஒளியுள்ள அரிதாரம் என்ற பொருள் மான்
வயிற்றில் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய
கடலில் தோன்றும். அதுபோல் எக்குடியிலும் நன்மக்கள்
தோன்றுவர் என்ற கருத்தில் அமைந்த,
கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்
மான்வயிற்றில்
ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்கும் குடி?
|
 |
(நான்.6)
|
(விலைய = விலைமதிப்புடைய; முத்தம் = முத்து)
என்னும் புகழ்பெற்ற பாடல் இந்நூலில்தான் உள்ளது.
|