2.3 இயல்பும் சிறப்பும்
உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில
இயல்புகள், சிறப்புகள் உண்டு. அழுக்குச் சேர்ந்தாலும் நல்ல
மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பின்
கண் மாசு உண்டாகும். இதை எவ்வளவு எளிமையாக
நான்மணிக்கடிகை சொல்கிறது பாருங்கள்.
மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்
|
 |
(நான் - 100) |
(மாசு = அழுக்கு)
மணி, இரும்பு ஆகியவற்றின் இயல்பைக் கூறியது போல் மன்னர், மாந்தர் ஆகியோரின்
இயல்பையும் இந்நூல் சொல்கிறது.
2.3.1.
அரசர் இயல்பு
முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் அரசன் இறைவன்
என்று சொல்லத்தக்கவன் என்கிறார் வள்ளுவர் (குறள் - 388). முறையாக ஆட்சி செய்பவனே சிறந்த அரசன். அரசன் நல்ல
ஆட்சி செய்யவில்லையென்றால் நாட்டில் மழை பெய்யாது.
மழையில்லா விட்டால் மக்களுக்கு நன்மையில்லை. மக்கள்
இல்லையென்றால் அரசனும் இல்லை. ஏனெனில் அரசன்
குடிமக்களுக்காகவே வாழ்கிறான் என்ற கருத்தைச் சொல்லும்
பாடலைப் பாருங்கள்.
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும்
தவம்இல்லார் இல்வழி இல்லை; தவமும்
அரசன் இலாவழி இல்லை; அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்
|
 |
(நான் - 49)
|
மன்னர், தாம் ஆளும் ஆட்சியால்தான் சிறப்படைவர் என்பது
நான்மணிக்கடிகை கூறும் கருத்தாகும். இனி, கற்றவர்
இயல்பைக் காண்போமா?
2.3.2
கற்றவர் இயல்பு
கற்றவர்க்கு எந்த ஊரும் தம்மூர் ஆகும். எண்ணற்ற பொன்னும்
பொருளும் பெற்ற மன்னனுக்குக் கூடத் தன்னாட்டில்தான்
பெருமையும் சிறப்பும் உண்டு. கற்றவருக்கோ
சென்றவிடமெல்லாம் சிறப்பு.
விளம்பி நாகனார், கற்றவர் சிறப்பை வலியுறுத்தக் கல்லாதார்க்கு
ஏற்படும் இழிநிலையைச் சுட்டிக் காட்டுகிறார். கல்லாத
ஒருவர்க்கு அவருடைய வாய்ச்சொல்லே எமனாக அமையும்.
வாழைமரத்துக்கு அதனுடைய குலையே சாவை உண்டாக்கும்.
தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவன் (எமன்)
ஆவான். இல்லத்தில் இருந்து கற்பு கெடுபவள்
கொண்டவனுக்குக் கூற்றுவனே என்கிறார். இந்தக் கருத்தைக்
கூறும் பாடலைப் பாருங்கள்.
கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொல்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறம்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள். |
 |
(நான் - 85)
|
கல்லாத மூத்தவனை இவ்வுலகம் மதியாது. கற்றவன்
இளைஞனாயினும் மதித்துப் பாராட்டும் என்ற கருத்தை
ஒரு குடியில் . . . . .
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு. |
 |
(நான் - 66) |
என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கும்.
கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் விளம்பி
நாகனார். கல்வியின்மை தனிஒருவரின் குற்றம் மட்டும் ஆகாது.
கல்வியறிவு இல்லாமல் குழந்தைகளை வளரவிடுதல்
சமுதாயத்துக்கே தீங்காக முடியும். இதை ஒட்டித்,
தீமையானவற்றை ஒரு பட்டியல் போட்டுத் தருகிறார்
இந்நூலாசிரியர். உயிர்களை எந்தவகையில் கொன்றாலும் அது
தீமை. நாணமற்ற பெண்களின் அழகு தீமை பயக்கும். உயர்ந்த
கொள்கைகளைக் கைவிடுவது ஒருவன் குலத்துக்கே தீங்கு
விளைவிக்கும். இக்கருத்துகளைப் பின்வரும் பாடல்
தெரிவிக்கிறது.
எல்லா இடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா வளரவிடல் தீது - நல்லார்
நலம்தீது நாணற்று நிற்பின் குலம்தீது
கொள்கை அழிந்தக் கடை
|
|
(நான் - 95) |
( நல்லார் = பெண்கள்)
2.3.3. மக்கள் இயல்பு
தம் செயலாலும், தாம் செய்யும் தொழிலாலும் வேறுபடும்
பலவகை மாந்தர்களின் இயல்புகளைத் தொகுத்து உரைக்கிறது
நான்மணிக்கடிகை.
மலர் இருப்பதை அதன் மணத்தால் அறிகிறோம். அதுபோல்
ஒருவன் செயல்திறனை அவன் சொல்லால் அறியலாம். ஒருவன்
உள்ளக் குறிப்பை அவன் முகத்தால் அறியலாம்.
நாற்றம் உரைக்கும் மலர்உண்மை கூறிய
மாற்றம் உரைக்கும் வினைநலம் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனம்உரைக்கும் முன்னம்
முகம்போல முன்உரைப்பது இல்
|
 |
(நான் - 48)
|
(நாற்றம் = மணம்; வினைநலம் = செயல்திறமை; முன்னம் = உள்ளக்குறிப்பு, கருத்து)
உழவு மாடு உடையவன் வேளாளன். எவரோடும் மாறுபடாது
ஒற்றுமையுடன் வாழ்பவன் அந்தணன் (நான்- 55). நன்மை
செய்யாதவன் துணையின்றி இருப்பான். நற்குணங்களை
உடையவன் இனிமையானவன் (நான் - 61).
பிறர்க்குக் கொடுத்து உண்பவனே புகழ் உடையவன். (“ஈத்துண்பான் என்பான் இசை நடுவான்”) கொடுப்பவன்
கைப்பொருளைப் பறித்து உண்பவன் பேராசைக்காரன்.
(நான் - 62) என்றெல்லாம் அறநோக்கில் மாந்தர் இயல்புகளை
வகைப்படுத்துவதைக் காணலாம்.
அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்தின் உயர்வும்
குலத்தின் ஒழுக்கமும் கல்லாமையால் கெடும் (நான் - 83)
என்று மனிதர் நிலையாலும், நடத்தையாலும் அவர்தம் இயல்பு
வேறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை. |