4.2 ஒழுக்க முறைகள்
சில ஒழுக்க முறைகளும் பழக்க வழக்கங்களும் இந்நூலிருந்து
நமக்குக் கிடைக்கின்றன. கொடுங்கோல் மன்னர் ஆட்சியின்
கீழ் வாழ்வதை மக்கள் பெரும் துன்பமாகக் கருதினர்.
கொடுங்கோல் மறமன்னர்
கீழ் வாழ்தல் இன்னா
|
|
(இன்னா நாற்பது - 3)
|
(மற மன்னர் = அறநெறி தவறிய)
என்று கபிலர் இதனைச் சுட்டிக் காட்டுகிறார்.
வீரம் இல்லாத மன்னன் போர்க்களம்
செல்லுதல் கூடாது
என்பது அக்கால மக்கள் கொள்கை. அக்காலத்தில் மன்னனுக்கு
யானைப்படை முதன்மையாகக் கருதப்பட்டது. மன்னன் உலா
வரும்போது யானைக்கு மணி கட்டியிருத்தல் வேண்டும்.
மணியில்லாத யானையின் மீது சென்றால் அரசனுக்குத் தீங்கு
நேரும் என்று அவர்கள் அஞ்சினர்.
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தல்
இன்னா
|
|
(இன். நாற். - 13)
|
(குஞ்சரம் = யானை)
அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வழக்கம்
வெறுத்து ஒதுக்கப்பட்டது.
குலத்துப் பிறந்தவன் கல்லாமை
இன்னா
|
|
(இன். நாற். - 19)
|
என்று கல்லாமையின் இழிவு பேசப்படுகிறது.
பெரியாரோடு யாத்த தொடர்
விடுதல் இன்னா
|
|
(இன். நாற். - 26)
|
(யாத்த = நெருங்கிப் பிணைந்த; தொடர் = தொடர்பு)
என்று, பெரியோர் கேண்மையை விடல் துன்பமாகும் என்று
எச்சரிக்கிறது.
தனி மனித அறமே சமுதாய அறத்திற்கு
அடிப்படை, அறத்தின் வழிச் செல்லாத நிலையில் தனிமனிதனுக்குப் பல துன்பங்கள்
ஏற்படுகின்றன. கற்றவன், கல்லாதவன், செல்வன், வறுமையுற்றார் என்ற போதும் துன்பங்கள்
நீங்குவதில்லை. இந்தச் சமுதாயத்தில் துன்பம் தருவன எவை என்பதை இன்னா நாற்பது
தொகுத்துக் கூறுவது பற்றி இனி விரிவாகப் பார்ப்போமா?
4.2.1 ஈகையும் இரத்தலும்
மனத்தில் அருளும் கையில் பொருளும் உடையவரே
வறியவர்க்குப் பொருளைக் கொடுக்க இயலும்.
இவை
இல்லாதவர் வறியவர்க்குப் பொருள் கொடுத்தல் இயலாது.
எனவே இச்செயல் அவர்க்குத் துன்பத்தையே தரும் என்கிறது
இன்னா நாற்பது.
இன்னா பொருள் இல்லார்
வண்மை புரிவு
|
|
(இன். நாற். - 10)
|
(வண்மை = கொடை, புரிவு = செய்தல்)
தம்முடைய செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக்
குணம் இல்லாதவர்கள் அழகு பயனற்றது.
வண்மை யிலாளர் வனப் பின்னா
|
|
(இன். நாற். - 9)
|
‘இரக்கம் இல்லாதவரிடத்தில் இரந்து நிற்றல் துன்பம்
தரும்’
(இன். நாற். - 10) என்ற கருத்தை ‘அருளில்லார் தங்கள்
செலவு இன்னா’ எனச் சொல்கிறது இந்நூல்.
‘கொடுத்த அளவினால் மனம் நிறைந்து மகிழாதவர்க்குக்
கொடுத்தல் துன்பம்’(இன். நாற். - 21) செல்வத்தைப் பெற்றவர்
அச்செல்வத்தைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்தல்
வேண்டும். பொருளை அனுபவிக்காமல் வீணாகச் சேர்த்து
வைப்பவர்கள் அப்பொருளால் அடைய வேண்டிய பயனை
அடைய மாட்டார்கள். எனவே அனுபவியாமல் சேர்த்து
வைக்கின்ற பெருஞ்செல்வத்தின் தொகுதி இன்பத்தைத் தராமல்
துன்பத்தையே தரும்.
உண்ணாது வைக்கும் பெரும்பொருள்
வைப்பு இன்னா
|
|
(இன். நாற். - 16)
|
என்கிறார் கபிலர்.
4.2.2 புலனடக்கமும்
துன்பமும்
உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தன்னுடைய பெருமையும்
புகழும் கெடாதபடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
இதற்குப் புலனடக்கம் அவசியம் என்பதை இன்னா நாற்பது
எடுத்துரைக்கிறது. புலனடக்கம் இல்லையென்றால் துன்பம் வரும்
என்பதை,
தன்னைத்தான் போற்றாது
ஒழுகுதல் நன்கு இன்னா
|
|
(இன். நாற். - 32)
|
(நன்கு = மிகவும்)
பிறன் மனையாளை விரும்பாத பேராண்மை ஒருவனுக்கு
வேண்டும். மாறாக, பிறன் மனைவியை விரும்புதல் துன்பம்
தருவதாகும்.
பிறன்மனையாள் பின்நோக்கும்
பேதைமை இன்னா
|
|
(இன். நாற். -38)
|
(பேதைமை = அறிவின்மை)
4.2.3 வீரமும் வலிமையும்
வீரமும் வலிமையும் ஒருவனுக்குத் தேவைதான். அவை
மனிதனுக்குப் பெருமை தருவனவே. அவையும் எப்போது
துன்பமாகும் என்று பாருங்கள்.
வீரர்கள் பலரை உடைய ஒருவன் பகைவரை எதிர்க்கத் தானே
மார்பைத் தட்டுதல் நன்மையைத் தராது. தன்னை வியத்தல்
என்றுமே துன்பமும் தருவது ஆகும்.
எந்தச் செயலை மேற்கொள்வதாக இருந்தாலும் எண்ணித்
துணிய வேண்டும். இல்லையெனில் துன்பமே நேரும். சான்றாக
நீரில் பாய்ந்து நீந்த விரும்புகின்றவன், அந்நீர் நிலையின்
ஆழம், அதன் அடியில் இருக்கும் பாறை, மறைந்திருக்கும் மரக்கட்டைகள் ஆகியவற்றை அறிந்து பாய்ந்து நீந்த வேண்டும்.
அதனை அறியாமல் பாய்ந்து நீந்தினால் துன்பம் நிச்சயம்
(இன். நாற். - 29).
உயர்ந்த மரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பம் பயக்கும்.
நெடுமரம் நீள்கோட்டு உயர்
பாய்தல் இன்னா |
(இன். நாற். -30)
|
(நீள்கோடு = நீண்ட கிளை)
இக்கருத்தையே,
நுனிக்கொம்பர் ஏறினார்
அஃதுஇறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்
|
 |
(குறள் : 476)
|
என்று குறட்பா கூறும்.
இது போல உயிருக்கு ஊறு விளைக்கவல்ல மூன்று
வேறு
செய்திகளையும் இப்பாடல் கூறும். அவை
1. மதம் பிடித்த யானைக்கு
எதிரே செல்லுதல்
2. பாம்பு மறைந்து வாழும் வீட்டில்
குடியிருத்தல்
3. கொடிய புலிகள் உலவும் வழியில் பயணம் செய்தல்
ஆகியவை, முள்ளுடைய காட்டில் நடத்தல் துன்பம். வெள்ளத்தில் அகப்பட்ட
விலங்கைக் கொலை செய்வது கொடியது (இன். நாற். - 33). வீரமும் வலிமையும்
ஒருவர்க்கு நன்மை பயக்கவல்லன. ஆனால் அதுவே தவறாகப் பயன்படுத்தப்படுமாயின்
விளைவது துன்பமே என்கிறார் கபிலர்.
4.2.4 கல்வியும் வறுமையும்
கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு.
கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும்
அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது.
கல்லார் உரைக்கும் கருமப்பொருள்
இன்னா
|
|
(இன். நாற். - 15)
|
என்கிறது ஒரு பாடல்.
நற்குடியில் பிறந்தவன் கல்லாதிருத்தல் துன்பம். கல்வியற்றவர்
சொல்லும் சொல்லின் பொருள் இன்னாதது. அவன் கற்றவர்
நடுவே ஒன்றைச் சொல்லுதல் துன்பமே தரும். (இன். நாற்.-28)
இனி வறுமை நிலையால் வரும் துன்பம் பற்றி இன்னா நாற்பது
என்ன சொல்கிறது என்று பாருங்கள். வறியவன் அழகு
துன்பமே தரும்.
வளமை இலாளர் வனப்பு இன்னா
|
|
(இன். நாற். - 27)
|
(வனப்பு = அழகு)
பெரிய நகரத்தில் வாழ விரும்புபவன் அதற்கு ஏற்ற செல்வமும்
உடையவனாய் இருத்தல் வேண்டும். செலவுக்குத் தகுந்த
பொருள் கையில் இல்லாதவனாய் இருத்தல் துன்பம் தரும்.
நெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை
இன்னா
|
|
(இன். நாற். - 36)
|
(கைத்து = கையகத்து; இன்மை = இல்லாமை)
செல்வம் இல்லாதவர் தம் வாய்ச் சொல் பயனற்றுப் போகும்.
நற்பொருள் நன்குணர்ந்து
சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
|
|
(குறள்:1046)
|
என்று தமிழ் மறை கூறுகிறது அல்லவா?
இதே கருத்தை
இன்னா நாற்பதும் கூறுகிறது? வறியவன் கூறுவதிலுள்ள நயமும்
பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது.
இல்லார்வாய்ச் சொல்லின்
நயம் இன்னா
|
|
(இன். நாற். - 28)
|
4.2.5 தீயோரும் நட்பும்
நட்புப் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது பாருங்கள்.
வன்சொல் கூறுவோர் நட்பு துன்பமானது. வறுமையுற்ற போது
கைவிட்டு நீங்குவோர் நட்பு துன்பமானது. (இன். நாற்.-36) இது
எந்த அளவுக்குத் துன்பம் தரும் என்பதை வள்ளுவர் எப்படிக்
கூறுகிறார் தெரியுமா?
கெடுங்காலைக் கைவிடுவார்
கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
|
|
(குறள்:799)
|
என்று கூறுகிறார்.
தக்க சமயத்தில் உதவாது விலகிச் செல்பவர் நட்பானது சாகும்
போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்
என்று,
இக்குறட்பாவில் அத்துன்பத்தின் அளவைக் குறிப்பிடுவதைக்
காணலாம்.
மனவறுமை உடையாரது சேர்க்கை துன்பமாகும். யாம் யாம்
என்று இறுமாந்து இருப்பவரோடு செய்யும் நட்பும் துன்பமாம்.
ஆங்கின்னா, யாம்என்
பவரொடு நட்பு
|
|
(இன். நாற். - 24)
|
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் புறங்கூற்றுத்
துன்பம் தரும். (இன். நாற்.-32) வஞ்சமனத்தார் நட்பு
துன்பமாகும்.
ஆங்கின்னா கள்ள மனத்தார்
தொடர்பு
|
|
(இன். நாற். - 33)
|
என்று தீயோர் நட்பு தரும் துன்பங்களை விவரிக்கிறது.
|