4.5 ஒழுக்க நெறிகள்
இனியவை நாற்பதில் பல ஒழுக்க நெறிகள்
கூறப்பட்டுள்ளன. பிறர் மனைவியை விரும்புதலாகிய தீய
செயலை எல்லா அறநூல்களும்
கண்டிக்கின்றன.
திருக்குறளில் ‘பிறன்இல் விழையாமை’ என்று
ஓர்
அதிகாரம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிறன் மனைவியை நஞ்சு என்று கருதுவதே இனிமையானது என்று
இனியவை நாற்பது கூறுகிறது. அதைக் கீழ்க்காணும் பாடல்
அடிகள் தெரிவிக்கின்றன.
தடமென் பணைத்தோள் தளிரிய
லாரை
விடமென் றுணர்தல் இனிது |
 |
(இனி. நாற்.-37)
|
(பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள், தளிரியலார்
= தளிர் போன்ற மென்மை உடைய பிற பெண்டிர், விடம் =
நஞ்சு)
இன்னா நாற்பதின் நேர் எதிராக இனியவை
நாற்பது தோன்றினாலும் நீதிகளைச் சுவைபடச் சொல்வதைப்
படித்து ரசிக்கலாம்.
4.5.1 கல்வி இனிமை
தரும்
கல்வி சிறந்தது. அது எப்போது இனிதாகும் தெரியுமா? கற்ற கல்வி நல்ல அவையின்கண் கைகொடுக்கிறதல்லவா?
அப்போது அது இனிதாகிறது. கற்றலின் அருமை பெருமை உணர்ந்து, பிச்சை எடுத்தாவது கற்றல் இனிது. “பிச்சை
புக்காயினும் கற்றல் மிக இனிதே” (இனி. நாற்.-1).
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே |
 |
என்று வெற்றி வேற்கையும் சொல்லுகிறது. கற்றார்
முன் கல்வி உரைத்தல் இனிது. அறிவால் மேம்பட்டவரைச்
சேர்தல் இனிது. அதுபோல் கல்லாதவரிடமிருந்து நீங்குதலும்
இனிதாகும். கையில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும் கல்லாதவரை விட்டு நீங்குதல் இனிது
என்கிறார் பூதஞ்சேந்தனார்.
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண்
தீர்வு இனிதே |
(இனி. நாற். -25)
|
(தீர்வு = விட்டுப்பிரிதல்)
கற்றவரிடம் சேர்ந்தால் நமக்கு நன்மை
கிடைக்கும். கற்றவர் பொருள் உணர்ந்து சொல்கின்ற சொல்லை
ஏற்றுச் செய்யும் செயலின் பயன் இனிதாகும் (இனி.
நாற்.-32).
4.5.2 இனிய அறச் செயல்கள்
இயன்றவரை அறம் செய்தல் இனிது. நம்மால் முடிந்தவரை செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் அறச் செயலைச்
செய்யவேண்டும்.
ஆற்றும் துணையால் அறம்செய்கை
முன் இனிதே |
(இனி. நாற்.-6)
|
வள்ளுவரும்,
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் |
 |
(குறள்:33)
|
என்று இயன்றவரை அறம்
செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார். அறச்செயல் செய்து பாவங்களைச்
செய்யாமை இனியது, சோலை வளர்த்தல், குளம் வெட்டுதல் போன்றவை இனியன. இக்கருத்தை,
காவோடு அறக்குளம் தொட்டல்
மிகஇனிதே |
(இனி. நாற்.-23)
|
(கா = சோலை, தொட்டல் = தோண்டுதல்)
என்று குறிப்பிடுகிறது இனியவை நாற்பது.
இந்தக் கருத்தையே,
காவோடு அறக்குளம் தொட்டானும்
செல்வர் எனப்படு வார் |
 |
(திரிகடுகம்-70)
|
|
என்று திரிகடுகமும்
காவளர்த்தும் குளந்தொட்டும்
கடப்பாடு வழுவாமல் |
(பெரியபுராணம்
- திருநாவுக்கரசர் புராணம் -36) |
என்று பெரியபுராணமும் சிறப்பித்துப் பேசுகின்றன.
ஒருவர் செய்த நன்றியின் பயனைக்கருதி வாழ்வது இனிது.
நியாய சபையின் கண் ஓரஞ் சொல்லாத மாண்பு இனிது (இனி. நாற். - 30).
(ஓரம் = ஒரு பக்கம் சாய்தல்)
முன்பு தன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளை,
அறிவார் யாருமில்லை என்று அபகரிக்கக்
கூடாது. அடைக்கலப் பொருளைக் காத்தலிலும்
இனியது வேறொன்றில்லை (இனி. நாற்.-30).
• ஈகை இனியது
பொருள் உடையவரிடம் ஈகைப்பண்பு இருக்க வேண்டும். அதுவே இனியதாம். எள் அளவாயினும் பிறரிடம் இரத்தல்
கூடாது. பிறர்க்குக் கொடுத்தலே இன்பம் தரும்.
ஒரு பொருளை விரும்பித் தன்னிடம்
வந்தவர் விருப்பத்தைப் புறக்கணிக்காத மாண்பு இனியது. எந்த
நிலையிலும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒளிக்காத
அன்பு இனியது.
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்குஇனியது இல் |
 |
(இனி. நாற்.-26)
|
(திறம் = வகை, இயைவ = முடிந்தவற்றை, கரவாத = ஒளிக்காத, பற்று = அன்பு)
இந்த அடிப்படையில் ஒரு கைப்பிடி அளவு அரிசியாவது
நாள்தோறும் கொடுத்து வாழுங்கள். அது உண்மையான இன்பம் ஆகும் என்று நாலடியார் கூறுகிறது.
இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவகொடுத் துண்மின் |
 |
(நாலடியார் -64)
|
4.5.3
நட்பில் இனிமை
நல்லவர்களுடன் கொள்ளும் நட்பு இன்பம் தருவதாகும்.
ஆகவே, எங்கே செல்ல நேர்ந்தாலும் அங்கெல்லாம்
நல்லவர்களைத் தேடிச் சென்று நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
‘தான் செல்லும் திசைகளில் எல்லாம் தக்காரை நட்புக்
கொள்ளுதல் இனிது’ (இனி. நாற். - 3) நட்புடையவர்க்கு
இனியன செய்தல் இனிது. எந்த நிலையிலும்
தன் பகைவரோடு சேராதவரை நட்பாக்கிக் கொள்ளுதல் இனிது.
(இனி. நாற். - 17).
இனிய நட்பைப் பாதுகாக்கவும் ஒரு வழி சொல்கிறது
இனியவை நாற்பது. நட்புக் கொண்டவரைப்
புறம் கூறாதவராய் வாழ்வது மிக இனியது (இனி. நாற்.
- 19).
வலிய வந்து தாமாகவே நட்புக் கொள்ளினும் கயவருடைய நட்பை நீக்குதல் இனிது என்று நீக்க வேண்டிய நட்பு எது
என்று கூறி நம்மை எச்சரிக்கை செய்கிறது (இனி. நாற்.
-20).
• பிற இனிய பண்புகள்
அன்றாட வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கிறோம்.
பழகுவதற்கு இனியர் என்று சிலரைத்தான் சொல்கிறோம். இனியவராய் இருக்க என்ன பண்புகளைக் கொண்டிருக்க
வேண்டும்? பூதஞ்சேந்தனார் சொல்வதைக் கேட்போம். குற்றம் இல்லாமல் யாவர்க்கும் இரங்கி அன்புடையவராய்
வாழ்தல் இனிது. தப்பு வழியில் சென்று விடாத மதி நுட்பம் இனிது (இனி. நாற். -11).
உயிர் போவதாயினும் உண்ணத்தகாதவர் கையில் உணவு உண்ணாமை பெருமை
உடையது. சத்தியத்தைப் பாதுகாத்துப் பணிந்து
ஒழுகல் இனிது. ஒருவர்க்குச் சார்பாகாத மனஎழுச்சி இனிது என்று நடுவு நிலைமைப்
பண்பு, சத்தியம் போற்றல் ஆகிய பண்புகளை இனியன என்கிறார் பூதஞ்சேந்தனார் (இனி. நாற்.-11,19,22).
செல்வம் அழிந்தாலும் பாவச் சொற்களைச் சொல்லாத தெளிவு இனிது. இவர் வறியாரென்று இகழாமை இனிது.
இயன்றவரை பிறர் மீது குற்றம் கூறாமை இனிது. பொறாமை கொள்ளாமை மிக இனிது. சினம் நீக்கி வாழ்தல்
இனிது. மானம் உடையவர் மதிப்பு இனியது என்று வாழ்வியல்
மதிப்புகளைப் பட்டியலிடுகிறது (இனி. நாற். - 28,29,30).
|