4.6 உறவு முறைகள்
இல்லறத்தில் ஈடுபடும் கணவன்
மனைவி, பெற்றோர், அரசன், குடிமக்கள் ஆகியோருக்கு எவை எவை இனிமையானவை என்பனவற்றை
இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது.
4.6.1 இல்லறம்
கணவன், மனைவி இருவரும் உளமொத்து வாழ்வதே சிறந்த இல்லறமாகும். அவ்வாறு ஒன்றுபட்ட
மணவாழ்க்கை அமையுமாயின், அம் மண வாழ்க்கை இனியது. அன்பில்லாத மனைவி அமைந்தால்
அவளை விலக்கி விடுதல் இனிது. வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ்தல் இனிது.
இதனை,
கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே |
 |
(இனி. நாற். -10)
|
( கடம் = கடன்)
என்கிறது இனியவை நாற்பது.
• கடமைகள்
மக்கள் தமக்குரிய கடமைகளினின்று
நீங்காமல் வாழ வேண்டும். விதைக்காக வைத்த தானியத்தை உண்ணக் கூடாது. விதை
இல்லையேல் மேல் விளைவும் இல்லை. மேலும், விதை பயிராக விளையும் போது பலரும்
உண்ணுவதற்கு உதவுகிறது. அதை ஒருவர் உண்பது என்பது பலர் உணவைப் பறிக்கும்
செயல் போலாகும். (இனி. நாற். -40) பால் மிகக் கறக்கும் ஆவும் கன்றும்
உடையவன் படைக்கும் விருந்து மிக இனிது (இனி. நாற். - 38) என்றும்,
மானம் அழிந்த பின் வாழாமை மிகவும் இனியது; தன் நிலை தாழாமல் அடங்கி வாழ்வது
இனிமையானது (இனி. நாற். - 13) என்றும், ஊர் ஊராய்ச் சென்று இரந்து
வாழாமை இனிது (இனி. நாற்.- 11) என்றும் இல்லறத்தார் கடமைகளை எடுத்துரைக்கின்றார்
பூதஞ்சேந்தனார்.
4.6.2 இனிக்கும்
உறவுகள்
குடும்ப உறவுகளிலும் நட்பு நிலையிலும் இனிக்கும் உறவுகள் இருப்பின் வாழ்க்கை
இனியதாகும் அல்லவா! குடும்பத்தில் பிள்ளைகள், பெற்றோர் ஏவலை மறுக்காமல் செய்யும்
ஆற்றல் பெற்றவராய் இருப்பின் அது வாழ்வில் இனிமை சேர்க்கும் அல்லவா?
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
|
(இனி. நாற் -3)
|
( ஏவது = கட்டளையிடுவது, மாறா = மீறாத, இளங்கிளைமை
= மக்கள்)
மிக்க சிறப்பினை உடைய தாய் தந்தையரைப் பணிந்து அவர் பாதங்களில் வீழ்ந்து
எழுதல் இனிது (இனி. நாற். - 18). பெற்றோரைப் பணிந்து பாதங்களில் வீழ்தல்
இனிது என்று சொல்லும் பூதஞ்சேந்தனார். தந்தையே ஆனாலும் அவன் தீநெறிக்கண்
சென்றால் அவன் சொல்வழி நில்லாமை இனிது என்கிறார்.
தந்தையே ஆயினும் தான்அடங்கான் ஆகுமேல்
கொண்டுஅடையான் ஆகல் இனிது
|
 |
(இனி. நாற். -7)
|
பழிபாவத்துக்கு அஞ்சாத
சூதாடிகளை விட்டு விலகுவது இனிது. நிலையில்லாத அறிவினருடன் சேராது நீங்குதல்
இனிது (இனி. நாற். -21).
4.6.3 அரசனுக்கு
இனியது
சமுதாயத்தில் அரசன் முதலாகிய அனைவரும் தமக்குரிய உரிமையுடன் வாழ்தல் இனிது.
அரசன், குடிமக்கள் அனைவர்க்கும் இனியன எவை எனச் சொல்கிறார் பூதஞ்சேந்தனார்.
அரசன் போர்க்களத்தில் யானைப்போர் காணுதல் இனியது (இனி. நாற். - 4). அரசனுக்கு, ஒற்றரை ஒற்றரால் வேவு பார்த்து அவற்றின் பயனை ஆராய்தல் நன்மை
பயக்கும். குற்றத்தை ஆராய்ந்து முறையாகத் தண்டனை கொடுத்தல் இனியது (இனி.
நாற்.- 35). செங்கோலனாக அரசன் ஆளுதல் வேண்டும். ஒருவரையே நம்பியிராமல்
எல்லாரிடத்தும் தானும் சென்று அறிதல் வேண்டும். இவையெல்லாம் அரசன் செய்தல்
இனிது (இனி. நாற். 35).
எவற்றைச் செய்யாமலிருத்தல் இனிது என்பதை விளக்கும் இனிய பாடல் இதோ:
கொல்லாமை முன்இனிது கோல்கோடி
மாராயம்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு |
 |
(இனி. நாற். -5)
|
( கோல் கோடி = நீதி தவறி, மாராயம் = சிறப்பு)
4.6.4 குடிமக்களுக்கு
இனியது
முல்லை நிலத்து ஆற்றங்கரையில் உள்ள ஊர் வாழ்வதற்கு இனியது (இனி. நாற்.
- 4). குடிகள் மாட்டு அன்பு வையாத அரசன் கீழ் வாழாது இருத்தல் இனிது.
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை
முன்இனிதே |
(இனி. நாற். - 32)
|
ஊரார் வெறுக்காதனவற்றைச் செய்து வருகின்ற பெருமை இனியது
(இனி. நாற். - 33). ஒதுக்குப்புறமாய்க் குடியிருந்தாலும் துன்பம் அடையாத
மாட்சிமை இனியது என்கிறார் பூதந்சேந்தனார் (இனி. நாற். -39). |