5.5 முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி, காஞ்சித் திணையின்
துறைகளுள் ஒன்று. (காஞ்சித்திணை, பொதுவாக நிலையாமையைக் கூறும்). உலகியல்
உண்மைகளைத் தெளிவாகப் பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி. அதுவே இந்நூலுக்குப்
பெயராயிற்று. மேலும் ‘காஞ்சி’ என்பது மகளிர் அணியும் ஒருவகை அணிகலக் கோவையைக்
குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணிபோல முதுமொழிக்காஞ்சி என்று கருதுவாரும்
உண்டு. அவ்வாறு பொருள் கொண்டால் முதுமொழிக்காஞ்சி என்பது அறிவுரைக்கோவை என்று
பொருள்படும் என்பர் அறிஞர்.
5.5.1 ஆசிரியர்
இந்த நூல் மதுரைக் கூடலூர்
கிழாரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் கூடலூர். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் அல்லர். சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்.
இருவரும் வெவ்வேறானவர் என்பதை உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார்.
5.5.2 நூலின் அமைப்பும்
பாடு பொருளும்
சிறந்த பத்து, அறிவு பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து,
அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து,
நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து என்னும் பத்து
அதிகாரங்களைக் கொண்டது இந்த நூல். ஒவ்வோர்
அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்களாக 100 பாடல்கள்
உள்ளன. எல்லா அதிகாரத்திலும் முதல் செய்யுள் மட்டும்
‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்கி
ஈரடியால் ஆன வெண்செந்துறை யாப்பில் அமைந்துள்ளது.
ஏனைய ஒன்பது செய்யுள்களும் ஓரடியால் ஆனவை. முதல்
அடியை ஏனைய அடிகளுக்கும் பொருத்திப் பொருள்
கொள்ள வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாக
இருக்கலாம்.
பத்து என்பது பத்துப் பொருள்கள் ஆகும். முதல் பத்து
சிறந்த பத்து. சிறந்தனவாகிய பத்துப் பொருள்கள்
இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன. இதனால் இது சிறந்த பத்து
என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன் கண் உள்ள
பத்து அடிகளிலும் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று
வந்துள்ளது. அதற்குச் "சிறந்தது" என்பது பொருள். பத்து
அடிகளில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறந்த
பொருளைக் கூறி அதைவிடச் சிறந்த இன்னொரு பொருளைக்
கூறி விளக்குவது இதன் சிறப்பு.
சிறந்த பொருள்களை எவ்வாறு அறிவது என்பதை விளங்க
வைப்பது ‘அறிவுப்பத்து’. பழியார் என்ற சொல்லால் உலகில்
எதையெல்லாம் பழிக்க மாட்டார்கள் என்று பத்து அடிகளில்
சொல்வது ‘பழியாப்பத்து’ எவையெல்லாம் நீங்காது என்பதைச்
சொல்லும் அதிகாரம் ‘துவ்வாப்பத்து’. வாழ்க்கையில் அல்ல,
அல்ல என்று கூறும் முறையால் நீதிகளைச் சொல்வது
‘அல்ல பத்து’. இல்லை என்பதைக் கூறும் பத்து
முதுமொழிகளை உடையது ‘இல்லைப்பத்து’. ‘பொய்ம்மை’
கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘பொய்ப்பத்து’.
எளிமை கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘நல்கூர்ந்த
பத்து’. தவிராமை பற்றிக் கூறும் பத்து ‘தண்டாப்பத்து’. முதுமொழிக்காஞ்சி கூறும் வாழ்வியல் உண்மைகளை இனி
விரிவாகக் காண்போமா?
|