5.7 சிறப்பு இல்லாதவை
சிறப்பான பொருள்களைப் பற்றி இலக்கியங்கள்
பேசுவது இயல்பு. சிறப்புள்ள பொருளும் சிறப்பில்லாமல் போவது எப்போது என்பதைப்
பத்துப் பாடல்களில் சொல்கிறார் மதுரைக்கூடலூர் கிழார்.
5.7.1 விருப்பமில்லா விருந்து
இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்னாது கொடுப்பது
ஈகை. அதுவே விருப்பம் இல்லாமல்
பிறருடைய
கட்டாயத்திற்காகக் கொடுக்கப்படும்போது ஈகையே
சிறப்பில்லாமல் போய்விடும் என்பதை,
பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
|
|
(துவ்வாப் பத்து : 4)
|
(பேணில் ஈகை = விருப்பமில்லாத
ஈகை; துவ்வாது =
நீங்காது)
என்ற பாடல் உணர்த்துகிறது.
ஒருவர்தாம் உண்ணும்பொழுது இரப்பவர்க்கு இயன்ற
அளவு கொடுத்துவிட்டு உண்ண வேண்டும். தான் ஒருவனே
உண்டு வாழும் வாழ்வு சிறப்புடையது அன்று. எவனொருவன்
தன் ஒருவனுக்காகச் சமைத்துக் கொள்கிறானோ அவன்
பாவத்தை உண்கிறான் என்று குறிப்பிடுகிறது பகவத் கீதை.
எனவே ஒருவன் பிறர்க்கு ஈயாது தான் மட்டும் உண்டு
வாழ்தல் கூடாதது ஆகும். இதனை முதுமொழிக்காஞ்சி,
தான்ஓர் இன்புறல் தனிமையில்
துவ்வாது |
|
(துவ்வாப் பத்து : 10)
|
என்று குறிப்பிடுகிறது. ஆசாரக்கோவையும் "தமக்கென்று
உலை ஏற்றார்" (39) என்று கூறுவதைக் காணலாம்.
5.7.2 மாண்பில்லா
மனைவி
எதிர்மறையாகக் கூறும் உண்மைகள் ‘அல்ல பத்து’ என்ற
தலைப்பில் வரும் முதுமொழிகளாகும். இல்லறத்தில்
மனையாள் பங்கைச் சிறப்பிற்குரியதாக இலக்கியங்கள்
பேசுகின்றன. மனையாள் மாண்புடன் இருந்தால்
மனைவாழ்க்கை சிறப்படையும். இல்லையெனில் இல்லறம்
நல்லறமாகாது என்பது
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று
|
(அல்ல பத்து : 2)
|
(மாணாதது = சிறவாதது)
என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
5.7.3 அறமில்லா ஈகை
ஈகையானது அறவழியில் இருக்கவேண்டும்.
வறியார்க்கு
ஒன்று ஈதல், அறச்சாலைகட்குப் பயன்படுத்துதல், அறிவுமுறைகட்கு வழங்கல் முதலிய வகைகளில்
அமைய
வேண்டும். பசுவைக் கொன்று செருப்பைத் தானம் செய்வது
போல அமையக்கூடாது. இதனை முதுமொழிக்காஞ்சி
எப்படிச் சொல்கிறது பாருங்கள்!
அறத்தாற்றின் ஈயாதது ஈகை யன்று
|
(அல்ல பத்து : 8)
|
ஈகையும் அறவழியில் நிற்கும் தகுதியுடைவர்க்குச்
செல்ல
வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஓட்டைப் பாத்திரத்தில்
தண்ணீர் விட்டால் ஒழுகிவிடும் அல்லவா?
இளமைக்காலம் தொட்டு முதுமைக்காலம் வரை ஒருவன்
அறம் செய்து பயன் அடையவேண்டும். அவ்வாறு அறம்
செய்யாமல் அடைந்த மூப்பு சிறப்புடையதாகாது என்று
வாழும் வாழ்க்கைக்குப் பொருளாயிருப்பது மற்றவர்க்கு
உதவும் அறஉணர்வே என்பதை முதுமொழிக்காஞ்சி,
மறுபிறப் பறியாதது மூப்பு அன்று
|
(அல்ல பத்து : 10)
|
என்று சொல்கிறது. மறு பிறவி உண்டு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி
வாழாமல் முதிர்ந்த மூப்பு சிறந்த மூப்பாகாது என்பது இதன் பொருள்.
5.7.4 மக்கட்பேறு இல்லா
வாழ்க்கை
இவ்வுலகில் கிடைத்தற்கரிய பேறுகள் எத்தனையோ உள்ளன.
அவற்றில் மக்கட்பேறே சிறந்த பேறு என்பதை,
பெறுமவற்றுள் யாமறிவதில்லை
அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற |
 |
(குறள் : 61)
|
என்பார் திருவள்ளுவர்.
படைப்புப் பலபடைத்துப் பலரோடு
உண்ணும்
உடைப் பெருஞ் செல்வ ராயினும் . . . . .
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லை தாம்வாழும் நாளே |
 |
என்று புறநானூற்றுப் பாடலும்
(188) மக்கட்பேற்றைச்
சிறப்பித்துக் கூறுகின்றது.
இந்தக் கருத்தையே முதுமொழிக்காஞ்சி
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை |
 |
(இல்லைப் பத்து : 1)
|
என்று பிரதிபலிக்கிறது. செய்ய வேண்டிய
கடமைகளைச்
செய்தலை விடத் தக்க செயல் வேறில்லை.
|