5.8 விருப்பமும் விளைவும்

இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள். சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்வர். அத்தகையோருக்கு என்ன சிறப்பு கிட்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது.

சிலர், உடல் வளத்தை மனத்திற்கொண்டு, எப்பொழுதும் அளவுக்கு அதிகமான உணவையே உண்டு மகிழ்வர். அத்தகையோருக்கு எத்தகைய தீமை வரும் என்பதனை முதுமொழிக் காஞ்சி வெளிப்படுத்துகிறது.

5.8.1 துன்பமும் இன்பமும்

ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்றபொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம். ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். துன்பங்களைக் கண்டு அஞ்சி, செயலைக் கைவிடுதல் கூடாது. அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும். எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும் (எளிய பத்து : 5).
 

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
(எளிய பத்து - 5)

(வெய்யோர் = விரும்புவோர்)
 

5.8.2 உணவும் நோயும்

ஒருவன் உண்ணும் போது அளவறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோய் உண்டாகாது. அளவு கடந்து உண்டால் அவ்வுணவு செரிக்காது. உண்டவனுக்கு மிகுந்த நோயை உண்டு பண்ணும். எனவே, உணவை அளவுக்கு மேல் உண்பவர்கட்கு நோயானது எளிமையாக வந்து சேரும்.

உண்டிவெய் யோர்க்கு உறுபிணி எளிது
(எளிய பத்து - 7)

(வெய்யோர் = விரும்புவோர்)

இவ்வாறு அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தை முதுமொழிக்காஞ்சி வலியுறுத்துகிறது, எனவேதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றார் ஆன்றோர்.