5.9 தொகுப்புரை

நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல், உறங்குதல், பேசுதல் போன்றவற்றிற்கும் விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை, கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது. மனிதனின் உயர்பண்புகள் இவை, இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல் மதிப்புகளை வரையறை செய்கிறது. முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக வைத்துப் பல பாடல்கள் அமைந்துள்ளதை இந்நூலில் காணலாம்.

சான்றோர் செயல் இதுவெனக் கூறும் பாடல்கள் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளை எடுத்துரைக்கின்றன.

முதுமொழிக்காஞ்சி, காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து அதிகாரங்களில் நூறு முதுமொழிகளை இந்நூலில் காணலாம்.

சிறந்தனவற்றைக் கூறி அவற்றை விடச் சிறந்த பொருள்களை எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும். சிறந்தனவற்றை எப்படி அறிவது என்பதை, இந்நூல் எடுத்துரைக்கிறது. எளிமையானவை எவை, பொய்யானவை எவை, பயன் இல்லாதன யாவை என்பதையும் இந்நூல் பட்டியலிடுகிறது. யாருக்கு எது எளிது என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

எதிர்மறையால் கூறும் வாழ்வியல் உண்மைகளை, அல்ல பத்து, இல்லைப் பத்து என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறது.

வாழ்க்கையில் இன்ப துன்பங்களை, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையை மனிதன் அடைய வேண்டும் என்ற உண்மைகளையும் உணர வைக்கிறது. அளவில் சிறிய நூலாக அமைந்து, ஆன்றோர் அனுபவ மொழிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூலாக முதுமொழிக்காஞ்சி விளங்குகிறது.



தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.
முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் யார்? [விடை]
2.

முதுமொழிக்காஞ்சி மொத்தம் எத்தனைச் செய்யுட்களைக் கொண்டது?

[விடை]
3.

‘சிறந்த பத்து’ அதிகாரத்தின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுக.

[விடை]
4.

மனைவாழ்க்கை சிறப்படையக் காரணமாக விளங்குவது எது?

[விடை]
5.
நோய்கள் யாரிடம் சுலபமாகச் சேரும்? [விடை]