6.6 நட்பு
தனிமனிதருக்கும் அரசர்க்கும் நட்பு மிகத் தேவையானது.
இனி நட்பு பற்றி பழமொழி என்ன கூறுகிறது என்று
பார்ப்போமா? அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் சிறந்தது
நட்புணர்வு. நல்லோர், நண்பர்களிடத்துத் தாம் வேறு அவர்
வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர். விலங்குகளும்
தம்மோடு கூடிப் பழகியவரை விட்டு நீங்குதல் செய்யாது.
ஐந்தறிவுடைய விலங்குகளே இப்படி என்றால் ஆறறிவுடைய
மனிதர்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? பிரிதல் என்பது
கொடியது. எவ்வளவு கொடியது என்பதை நுட்பமாகச்
சொல்லும் பழமொழியைப் பாருங்கள்.
இன்னாதே பேயோ டானும்
பிரிவு |
(பழ:126)
|
(பேயோடானும் = பேயோடு ஆயினும்)
நண்பர் துன்புறுவாராயின் உடனே அவர் துன்பத்தைப் போக்க
முயற்சி செய்ய வேண்டும். மன வருத்தமும் துன்பமும் நீங்க
அவருக்கு ஆறுதல் மொழிகள் தேவை. அதுமட்டும் போதுமா?
பனியால் குளம் நிரம்புமா? நிரம்பாதல்லவா? அதுபோலத்தான்
நண்பர் துன்பம் நீங்கும் முயற்சி வெறும் உரைகளாக மட்டும்
இல்லாமல் செயலாகவும் இருக்க வேண்டும். அதுதான்
உண்மையான நட்பு.
இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
பனியால் குளம்நிறைதல் இல் |
 |
(பழ:127)
|
(துனி = சினம்)
தீயன செய்யும் பழைய நட்பை விட அஞ்சத்தகும் புதிய நட்பே
நல்லது என்ற கருத்தைச் சொல்லும் இன்னொரு பாடல் இது.
பழமை கந்தாகப் பரியார் புதுமை
முழநட்பிற் சாணுட்கு நன்று
|
 |
(பழ:129)
|
(கந்தாக = பற்றுக்கேடாக,
பரியார் = நீங்கமாட்டார், உட்கு =
அஞ்சத் தகும்)
நண்பர்கள் இருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டு
ஒழுகுதல், அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும் என்ற
கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது. எளிமையாகச் சொல்கிறது
இந்தப் பழமொழி.
ஒருவர் பொறை இருவர் நட்பு |
|
(பழ:132)
|
6.6.1 நட்புக்குத் தகுதியிலார்
நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதும் நட்புக்குத் தகுதி
இல்லாதவரை விலக்குதல் என்பதும் நாம் வரையறுக்க
வேண்டியன. பண்பிலா மக்கள் நட்பை விலக்க வேண்டும்.
தம் காரியம் முடியும் அளவும் அதை முடிக்க வல்லாருடன்
நண்பராய் இருந்து முடிந்தவுடன் விட்டு நீங்குவது பண்பிலார்
இயல்பு. மச்சின்மீது ஏணியின் வழி ஒருவனை ஏற்றிவிட்டு
அவன் இறங்குவதற்குள் ஏணியை நீக்குவது எப்படிப்பட்ட
இழிந்த செயல்? இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களும்
இவ்வுலகில் இருக்கிறார்கள். இவர்கள் நட்பை விலக்க
வேண்டும் என்கிறது பின்வரும் பழமொழிப்பாடல்.
எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு
|
 |
(பழ:136)
|
(எய்ப்புழி = தளர்வு வந்தவிடத்து, வைப்பு = பெருநிதி,
அச்சு = அச்சம்)
பண்பிலாரோடு கொண்ட நட்பு கானகத்து நிலாப் போலப்
பயனின்றிப் போகும் என்பதும் நாம் காணும் மற்ற செய்தியாம்.
6.6.2 சான்றோர் இயல்பு
சான்றோர் பெருமையை யாரும் மறைக்க இயலாது. அவர்
வறியராயினும் தம்நிலையினின்றும் திறம்பார் (மாறுபடார்).
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா?
பசிபெரிது ஆயினும்
புல்மேயா தாகும் புலி |
(பழ:70)
|
என்பது பழமொழி.
கொல்லன் தெருவில் ஊசி விற்பாருண்டோ என்பது நாமறிந்த
பழமொழி. நற்குடிப் பிறந்தாரிடம் நற்குணங்கள் இயல்பாக
அமைந்திருக்கும். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை
விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தைச்
சொல்ல வந்த பழமொழிதான்
கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல் |
(பழ:73)
|
(கொற்சேரி = கொல்லர் சேரி; துன்னூசி = தைக்கும் ஊசி)
படரக் கொம்பில்லாத முல்லைக் கொடிக்குத்
தன் தேரை
ஈந்தவன் பாரி. வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தன்
போர்வையை அளித்தவன் பேகன். பாரியும் பேகனும்
முல்லையின் இடரையும், மயிலின் இடரையும் வேறு
பொருள்களைக் கொடுத்து நீக்க அறிவார்கள். ஆனால்
அறியார் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக்
கொடுத்த செயல் ‘அறிமடம்’ எனப்படும். இது சான்றோர்க்கு
அணியாகும் என்ற கருத்தைச் சொல்கிறது இந்தப் பாடல்.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க் கணி
|
 |
(பழ:74)
|
6.6.3 கீழ்மக்கள் இயல்பு
பண்பிலா மக்கள் கீழ்மக்கள் ஆவர். நட்புக்கொண்ட
ஒருவரைப் பொல்லாங்கு பேசுகிறார் ஒருவர். அப்படிப்பட்ட
தீயவரை நம்பக் கூடாது. உண்பவர்கள் தேவரேயாயினும்
வேம்பு கசக்கும் தன்மையது. தீயவர் தம்மோடு நட்புப்
பூண்டவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களுடன்
நன்கு பழகமாட்டார்கள். இக்கருத்தைச் சொல்ல வந்த
பழமொழிதான்,
கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு |
(பழ:95)
|
என்பது, திங்களை நோக்கி நாய் குரைத்ததுபோல என்ற
பழமொழியும் நாமறிந்ததே. சிறியோர் பெரியோரைப் பார்த்து
அடாதவற்றைக் கூறுதல் திங்களைப் பார்த்து நாய் குரைத்தாற்
போன்றதாகும். பெரியார் பெருமையை சிறியர் அறியும் தகுதியும்
இல்லாதவர். எனவே, தகாதன கூறுதலே அவர் இயல்பாகின்றது.
அதனால் துன்பம் அவர்க்குத்தானே ஒழிய பெரியோர்க்கில்லை.
குரைக்கின்ற நாயைத் திங்கள் பொருட்படுத்தாததைப் போலப்
பெரியோர் சிறியோரைப் பொருட்படுத்த மாட்டார் என்ற
விளக்கத்தையும் காணலாம்.
தீயவர்களுக்கு நன்மை செய்வதும் கேடு தருவதாகவே முடியும்.
இக்கருத்தை ‘புலிமுகத்து உண்ணி பறித்து விடல்’ என்ற
பழமொழி விளக்குகிறது. தீயவர்களுக்கு நன்மை செய்தல்
புலியின் மீது இரக்கம் கொண்டு அதன் முகத்தில் உள்ள
உண்ணிகளை எடுத்து விடும் செயல் போன்றது. புலி முகத்து
உண்ணி பறிப்பவர் எவ்வாறு பிழைக்க மாட்டார்களோ
அவ்வாறே தீயவர்களுக்கு உதவி செய்பவரும்
பிழைக்க மாட்டார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்ற
பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா?
(நுணல் = தவளை)
மணலில் பதிந்து மறைந்திருக்கும் தவளை தன் குரலைக்
காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பாரிடத்து
அகப்பட்டுக் கொள்ளும். அதுபோலவே அறிவிலான் தன்
வாயாலேயே தனக்குத் தீங்குத் தேடிக் கொள்வான்.
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்
|
 |
(பழ:114)
|
|