3.2 நல்வழி

மக்கள் நல்ல வழியில் நடப்பதற்கு உதவும் அறக்கருத்துகளைக் கொண்டதால், இந்நூல் ‘நல்வழி’ என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டது.

3.2.1 கடவுள் வாழ்த்து

நல்வழியின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப் பட்டுள்ளார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா

(நல்வழி : கடவுள் வணக்கம்)

(கோலம் = அழகு, துங்க = பெருமை மிகுந்த, கரிமுகம் = யானை முகம், தூமணி = தூய மணி, தமிழ் மூன்று = இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்)

பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக! என்று ஒளவையார் வேண்டுகிறார்.

இச்செய்யுளில் விநாயகக் கடவுள் பின்வருமாறு வருணிக்கப் பட்டுள்ளார்.

விநாயகக் கடவுள் அழகிய அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளார்; பெருமை மிகுந்த யானை முகத்துடன் விளங்குகிறார்; தூய்மையான மணி போன்ற ஒளியுடன் காட்சி அளிக்கிறார் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

3.2.2 வள்ளல் தன்மை

வள்ளல்கள் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பொருள் இல்லாதவர்களுக்கு வாரி வழங்குவார்கள். இவ்வாறு வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள் தங்களிடம் பொருள் குறைந்து விட்டாலும், தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் பொருள் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
‘இல்லை’என மாட்டார் இசைந்து

(நல்வழி :9)

(பெருக்கு = வெள்ளப்பெருக்கு, அற்று = இல்லாமல், அடி = பாதம், ஊற்று = நீரூற்று, உலகு = உலக மக்களுக்கு, ஊட்டும் = தண்ணீரைக் கொடுக்கும், ஏற்றவர்க்கு = தேடி வந்தவர்களுக்கு, நல்கூர்ந்தார் = வறுமை நிலையை அடைந்தார், இசைந்து = மனமார)

வழி வழியாகப் பிறருக்குப் பொருளை வழங்கும் நல்ல குடியில் பிறந்தவர்களை ‘வள்ளல் குடியினர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். அத்தகைய வள்ளல் குடியில் பிறந்தவர்கள் வறுமை  நிலையை அடைந்தாலும், தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் ‘பொருள் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொல்வதற்கு அவர்களது உள்ளம் விரும்பாது.

இதை விளக்குவதற்கு ஒளவையார் ஆற்றை உவமைப் படுத்தியுள்ளார். ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை ஊர்மக்கள் பயன்படுத்துவார்கள். அந்த ஆற்றிலே நீர் வற்றிப் போன கோடைகாலத்தில் அதில் தோண்டப்பட்ட சிறிய ஊற்றுகளின் வாயிலாக அது ஊர்மக்களுக்கு நீர் வழங்கும். அதைப் போன்று, வள்ளல் குடியில் பிறந்தவர்கள் செல்வம் இருக்கும் போதும் வழங்குவார்கள்; வறுமை நிலையை அடைந்துவிட்டாலும் பிறருக்கு வழங்குவார்கள் என்று வள்ளல்களின் தன்மையை நல்வழி தெரிவிக்கிறது.

• வெறும் பானை பொங்குமோ?

நம்மிடம் செல்வம் இருக்கும் போது நாம் பிறருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு பிறருக்கு வழங்குவது அறச் செயல் ஆகும். இந்த அறச் செயலைச் செய்கின்றவர்களுக்குச் செல்வம் வந்து சேரும். அவ்வாறு செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது.

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்

(நல்வழி :17)

(செய் = செய்த, தீவினை = தீய செயல், நொந்தக்கால் = வருத்தப்பட்டால், எய்த = அடைய, இருநிதியம் = பெருஞ்செல்வம், வையத்து = உலகத்து, அறும் = நீங்கும், இடார்க்கு = கொடுக்காதவர்க்கு)

தொடர்ந்து தீய செயல்களைச் செய்து விட்டு, கடவுளை வணங்கினால் பெருஞ்செல்வம் சேராது. அவ்வாறு செல்வம் சேரவில்லையே என்று கடவுளை நினைத்து வருந்துவதாலும் பயன் கிடையாது. செய்த தீய செயல்களால் ஏற்பட்ட பாவம் நீங்க வேண்டும் என்றால் செல்வம் இல்லாதவர்களுக்குச் செல்வத்தை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் பாவம் நீங்குவதோடு புண்ணியம் சேரும்.

இதை விளக்குவதற்கு ஒளவையார், ‘வெறும்பானை பொங்குமோ மேல்’ என்னும் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

பானையில் எதுவும் போடாமல் நெருப்பு மூட்டினால் அந்தப் பானையிலிருந்து எதுவும் பொங்கி மேலே வராது. அதுபோல, பாவம் நீங்கும் படியாகப் புண்ணியம் செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது என்பது இதன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

• தீயாரும் இடுவர்!

தாம் சேர்த்த பொருளைப் பிறருக்கு வழங்குவதற்கு நல்ல குணம் வேண்டும். அந்த நல்ல குணம் இல்லாதவர்களும் சில வேளைகளில் வழங்குவார்கள். எப்போது அவர்கள் வழங்குவார்கள் என்பதைப் பின்வரும் நல்வழிப்பாடல் தெளிவாக்குகிறது.

பெற்றார், பிறந்தார், பெருநாட்டார், பேர் உலகில்
உற்றார், உகந்தார் என வேண்டார், மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்

(நல்வழி : 18)

(பெற்றார் = பெற்ற தாய், தந்தை, பிறந்தார் = உடன் பிறந்தவர், பெருநாட்டார் = தன் நாட்டைச் சேர்ந்தவர், உற்றார் = உறவினர், உகந்தார் = வேண்டியவர், மற்றோர் = அயலார், இரணம் = துன்பம், சரணம் = தாள் பணிதல்)

பெற்ற தாயும் தந்தையும், உடன்பிறந்தவர்களும் தன் நாட்டைச் சேர்ந்தவர்களும், உறவினரும், வேண்டிய நண்பர்களும் கெஞ்சிக் கேட்டாலும் வள்ளல் குணம் இல்லாதவர்கள் சிறிது பொருளும் கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்பே இல்லாதவர்கள் மிரட்டித் துன்புறுத்திக் கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்று ஈகைக் குணம் இல்லாதவர்களின் இழி குணத்தை நல்வழி கூறுகிறது.

இத்தகைய ஈகைக் குணம் இல்லாதவர்கள் அஞ்சி, பொருள் வழங்குவதற்கு என்ன காரணம்?

யாருக்கும் வழங்காமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பதால் கருமிகளிடம் செல்வம் மிகுதியாகச் சேர்ந்து விடுகிறது. மிகுதியான பொருள் சேர்ந்து விடுவதால் அந்தப் பொருளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. மேலும் உறவினர்கள், நண்பர்கள் என்று யாருடனும் நல்ல உறவு இல்லாததால் அவர்களின் உதவியையும் கருமிகள் இழந்து விடுகிறார்கள். எனவே, கருமிக்கு அச்சம் மேலும் கூடுகிறது. இத்தகைய கருமிகளை மிரட்டினால் அவர்கள் அஞ்சி, பொருளைக் கொடுத்துவிடுகிறார்கள்.

3.2.3 செல்வம்

செல்வம் என்பது பலவகையான சொத்துகளைக் குறிக்கும். தோட்டம், வீடு, மாடு போன்ற பல வகையான சொத்துகளுடன் பணமும் செல்வம் ஆகும். செல்வம் இருப்பவர்களை எல்லோரும் போற்றுவார்கள். செல்வம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதில்லை.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர்; இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற்று ஈன்றுஎடுத்த
தாய்வேண்டாள்; செல்லாது அவன்வாயின் சொல்

(நல்வழி :34)

(கைப் பொருள் = செல்வம், எதிர்கொள்வர் = வரவேற்பர், இல்லானை = செல்வம் இல்லாதவனை, ஈன்று = பெற்று, இல்லாளும் = மனைவியும், வாயின் சொல் = வாய்ச்சொல், பேச்சு)

கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை. ஆனால், கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள்.

செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.

• செல்வத்தின் நிலை

செல்வம் எப்போதும் ஒருவரிடமே நிலைத்து இருப்பதில்லை. அது அடிக்கடி ஒருவரைவிட்டு வேறு ஒருவரிடம் செல்லும். இந்த இயல்பை ஒளவையார் பின்வரும் பாடலில் அழகிய உவமையின் வாயிலாக விளக்கியுள்ளார்.

ஆறுஇடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! - சோறு இடும்;
தண்ணீரும் வாரும்; தருமமே சார்புஆக,
உள்நீர்மை வீறும், உயர்ந்து
(நல்வழி :32)

(இடும் = உருவாக்கும், மடு = பள்ளம், ஏறிடும் = உயர்ந்திடும், வீறும் = மிகும்.)

ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப்போல், செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை. ஒருவரிடம் மிகுதியாகச் செல்வம் சேரும். வேறு ஒருவரிடம் குறைவாகச் சேரும். அதுவும் நிலையாக இருப்பதில்லை. எனவே, செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் முதலிய அறச்செயல்களைச் செய்தல் வேண்டும். இவ்வாறு அறச்செயல்கள் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்று நல்வழி தெரிவிக்கிறது.

3.2.4 உழவுத்தொழில்

உலகில் உள்ள பழமையான தொழில்களில் உழவுத் தொழிலும் ஒன்று. உழவுத் தொழில் நடைபெறவில்லை என்றால் உலகில் உள்ள மக்கள் உண்ண உணவு இல்லாமல் துன்பப்படுவார்கள். எனவே, உழவுத் தொழிலைச் சிறப்பித்து, பல புலவர்கள் பாடியுள்ளனர்.

ஆற்றங் கரையின் மரமும், அரசுஅறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும்அன்றே; ஏற்றம்
உழுதுஉண்டு வாழ்வதற்கு ஒப்புஇல்லை கண்டீர்;
பழுதுஉண்டு வேறுஓர் பணிக்கு
(நல்வழி :12)

(ஏற்றம் = உயர்வு, பழுது = குறை)

ஆற்றங்கரையில் நிற்கின்ற மரம் ஆற்றில் ஓடும் நீரின் உதவியால் நன்கு செழித்து வளரும், நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அந்த மரமும், மண் அரிப்பின் காரணமாக ஒரு நாள் விழும். அரசனுக்கு இணையாக வாழ்கின்றவனின் உயர்ந்த வாழ்விலும் தாழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற தொழில்களிலும் ஏதோ ஒரு வகையில் குறை உண்டு. ஆனால், உழவுத் தொழில் செய்து அதனால் கிடைக்கும் விளைச்சலில் உணவு உண்டு உயிர் வாழ்கின்றவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் ஏற்றமே நிலைக்கும்.

உழவுத் தொழிலின் மேன்மையைத் திருக்குறள் பத்துக் குறட்பாக்களில் தெரிவிக்கிறது. ஒளவையாரின் நல்வழி ஒரே ஒரு பாடலில் உழவுத்தொழிலின் மேன்மையைத் தெரிவித்தாலும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளதை இப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

3.2.5 வரவு செலவு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரவுக்கேற்பச் செலவு செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ் நூல்கள் தெரிவித்துள்ளன.

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
(478)

என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது.

வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் தவறு இல்லை என்பது இதன் பொருள். வருவாயை விடவும் செலவு மிகுதியாக இருந்தால் ஏற்படும் இழிநிலையை நல்வழி பின்வரும் செய்யுள் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆன முதலில்அதிகம் செலவு ஆனால்
மானம் அழிந்து மதிகெட்டு, போனதிசை
எல்லார்க்கும் கள்ளன்ஆய், ஏழ்பிறப்பும் தீயன்ஆய்
நல்லார்க்கும் பொல்லன்ஆம் நாடு
(27)

(முதலில் = வருவாயில், மதி = அறிவு, பொல்லன் = தீயன், ஏழ் பிறப்பு = தோன்றும் பிறப்பு)

வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்; சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டிவரும்; அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும்; நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள். எனவே, வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

3.2.6 இன்சொல்

இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள். வன்மையான (கடுமையான) சொற்களைப் பேசுகிறவர்கள் பிறரால் இகழப்படுவார்கள். இது எல்லாக் காலத்திற்கும் பொதுவானது. இதை ஒளவையார்,

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுஉருவும் கோல்பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
(33)

(வெட்டென = கடுமையாகப் பேசும் பேச்சுகள், மெத்தென = மென்மையான பேச்சுகள், வேழம் = யானை, உருவும் = வெளியேறும், கோல் = வேல், நெட்டிருப்புப்பாரை = நீண்ட கடப்பாரை, நெக்கு = உடைதல், பசுமரம் = பச்சைமரம்)

என்று பாடியுள்ளார்.

கடுமையாகப் பேசும் பேச்சுகளால் மென்மையான பேச்சுகளை வெல்ல இயலாது என்ற உண்மையை ஒளவையார் உணர்த்த விரும்பியுள்ளார். அதற்காக இரண்டு உவமைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். வலிமையான யானையின் மேல் எறியப்பட்ட கூர்மையான ஈட்டி, அதன் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்லும். ஆனால் அதே ஈட்டியால் மென்மையான பஞ்சின்மேல் பாய இயலாது என்பது ஓர் உவமை.

பெரிய கடப்பாரையால் கூடப் பிளக்க இயலாத வலிமை வாய்ந்த பாறையானது, பச்சை மரத்தின் வேரால் பிளவுபடும் என்பது மற்றோர் உவமை.

முதல் உவமையில் கூர்மையான ஈட்டியால் பஞ்சைப் பிளக்க முடியாது என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது உவமையில் மென்மையான வேரால், வலிமையான பாறையைக் கூடப் பிளக்க முடியும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

முதல் உவமையில் கூறப்பட்டுள்ள கூர்மையான ஈட்டி வன்சொல் போன்றது. வன்சொல்லால், மென்சொல்லை வெல்ல முடியாது என்பது இதன்மூலம் அறிய வருகிறது. இரண்டாம் உவமையில் கூறப்பட்டுள்ள மென்மையான வேர், இன்சொல் போன்றது. இன்சொல்லால், வன்சொல்லை வெல்ல முடியும் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.