5.1 குமரகுருபரர் : ஓர் அறிமுகம்

இந்நூலை இயற்றிய குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசாது இருந்தார். தங்கள் மகன் வாய் பேசாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.

5.1.1 மீனாட்சி அம்மை அருள்

முருகன் அருளால் இளமையிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்ற குமரகுருபரர் மதுரைக்குச் சென்றிருந்தார். அங்கே ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலை இயற்றினார். அந்நூலின் அரங்கேற்றம் திருமலை மன்னர் முன்னிலையில் மீனாட்சி அம்மை திருக்கோயிலில் நடைபெற்றது.

ஒவ்வொரு செய்யுளாகப் பாடி அவற்றின் பொருளை விரிவாக விளக்கினார் குமரகுருபரர். ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே’ என்று தொடங்கும் பாடலுக்குக் குமரகுருபரர் பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். அந்த விளக்கத்தில் தன்னை மறந்த மீனாட்சி அம்மை, அருச்சகர் மகளின் வடிவத்தில் அங்கே தோன்றினார். நேரே திருமலை மன்னரிடம் சென்று அவரது கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றி அதைக் குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்துவிட்டு மறைந்தார்.

குமரகுருபரர் அதன்பிறகு திருவாரூர், சிதம்பரம் முதலிய ஊர்களுக்குச் சென்று பல நூல்களைப் பாடினார். பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டார்; காசிக்குச் சென்று அங்கே ஒரு மடத்தை நிறுவினார். தமிழ், இந்துஸ்தானி மொழிகளில் அங்கே சைவசித்தாந்தம், கம்பராமாயணம் முதலியவை பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

5.1.2 குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

1.
கந்தர் கலிவெண்பா
2.
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்
3.
மதுரைக் கலம்பகம்
4.
நீதிநெறி விளக்கம்
5.
திருவாரூர் நான்மணிமாலை
6.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
7.
சிதம்பர மும்மணிக் கோவை
8.
சிதம்பரச் செய்யுள் கோவை
9.
பண்டார மும்மணிக் கோவை
10.
காசிக் கலம்பகம்
11.
சகல கலாவல்லி மாலை
12.
காசித் துண்டி விநாயகர் பதிகம்
13.
மதுரை மீனாட்சி அம்மை குறம்
14.
கயிலைக் கலம்பகம்
15.
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
16.
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை

ஆகிய பதினாறு நூல்களைக் குமரகுருபரர் படைத்துள்ளார். இவற்றுள் கயிலைக் கலம்பகம், காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகிய நூல்கள் கிடைக்கவில்லை.