1.1 இலக்கிய வகை

ஒரு மொழியில் காலம்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு, ஒரு மொழியில் காணப்படும் இலக்கியங்களை அவற்றின் அமைப்பு, உள்அடக்கம் அல்லது பொருள், யாப்பு முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவர். அவற்றை இலக்கிய வகைகள் எனலாம்.

தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

TVU-Co1231d1


மேற்கண்ட பாகுபாடு மூலம் தமிழ் இலக்கிய வகைகளில் சிற்றிலக்கியம் என்பதும் ஒன்று என்பது தெரிகின்றது. சிற்றிலக்கியம் என்று கூறுவதால் பேரிலக்கியம் என்பது என்ன வென்று உங்கள் மனத்தில் கேள்வி எழுகிறதா? அதற்கான விளக்கத்தைப் பின்னர் பார்க்கலாம்.

1.1.1 சிற்றிலக்கியம் -சொல்லாட்சி

நண்பர்களே! இப்போது சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு வழக்கத்தில் வந்தது என்று பார்ப்போமா?

முதன் முதலில் சிற்றிலக்கியம் என்பது பிரபந்தம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வந்தது. பிரபந்தம் என்பது சமஸ்கிருத மொழிச் சொல் ஆகும். பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்யாது? நன்கு கட்டப்பட்டது என்பது அதன் பொருள். அதாவது நன்றாக இயற்றப்பட்டது என்பது பொருள்.

எல்லா வகையான இலக்கியங்களும் நன்றாக இயற்றப் பட்டவைதானே? பின் ஏன் குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளை மட்டும் குறிப்பிடப் பிரபந்தம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்ற சிந்தனை எழுகிறதல்லவா? எனவே, குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளைக் குறிப்பிடச் சிறு பிரபந்தம் என்று குறிப்பிட்டனர். காலப் போக்கில் தனித்தமிழ் ஆட்சி வலுப்பெற்றது. அப்போது சிறு பிரபந்தம் என்பது சிற்றிலக்கியம் என்ற சொல்லால் அழைக்கப்பட்டது.

1.1.2 சிற்றிலக்கியம் - விளக்கம்

நண்பர்களே! சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டோம். இனி, சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போமா?

காப்பியம் போல் கதைத் தொடர்ச்சி இல்லாமல், தனித்தனி எண்ணங்கள், தனித்தனி உணர்வுகள், தனித்தனிப் பாடல்கள் அமைந்து ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவது சிற்றிலக்கியம் என்பர்.

மேலும் பல அறிஞர்கள் சிற்றிலக்கியம் என்பது குறித்துத் தம் கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது பின்வரும விளக்கம் கிடைக்கின்றது. சிற்றிலக்கியம் என்பது,

1) இறைவன், மன்னன், வள்ளல், ஞானக்குரவர், சாதாரண மக்கள் முதலியோருள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை.
2) பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் பாடுபொருளாகக் கொள்ளும்.
3) அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு உறுதிப் பொருள்கள். இவற்றுள் ஒன்றைப் பற்றிக்கூறும்.
4) குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டு அமையும்.
5) பல்வேறு வகையான யாப்பு அமைப்புகளால் பாடப்படும்.
6)

ஒவ்வொரு சிற்றிலக்கியமும் ஒவ்வொரு வகையான யாப்பில் அமைந்திருக்கும்.

இந்த இலக்கணங்களைக் கொண்ட நூல்களே சிற்றிலக்கியங்கள் ஆகும்.

1.1.3 பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடு

வ.எண்

பேரிலக்கியம்

சிற்றிலக்கியம்

1)

பாட்டுடைத் தலைவனின்
வாழ்க்கையை
முழுமையாகக் கூறும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூறும்.
2) பாடல்களின் எண்ணிக்கை
அல்லது பாடல்களின் நீளம் மிகுதி.
பாடல் எண்ணிக்கை குறைவு. ஆகவே குறுகிய அளவு உடையது.
3) அறம்,பொருள்,இன்பம்,வீடு
ஆகிய நான்கு பொருள்
பற்றியது.
ஏதேனும் ஒரு பொருள் பற்றியது.

1.1.4 சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை

பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைக் கூறுகின்றன. பாட்டியல் நூல்கள் என்றால் என்ன என்ற வினா உங்களிடையே எழலாம். அதற்கான விளக்கத்தைக் கீழே பார்க்கலாம்.

பாட்டு + இயல் = பாட்டியல். பாட்டு என்றால் செய்யுள் என்று பொருள். இயல் என்றால் இயல்பு என்பது பொருள். எனவே பாட்டின் இயல்புகளை அல்லது இலக்கணங்களை வரையறுத்துக் கூறும் நூல்கள் பாட்டியல் நூல்கள் ஆகும். சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் கீழே தரப்படுகின்றன.

பன்னிரு பாட்டியல்
வெண்பாப் பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
பிரபந்த மரபியல்
சிதம்பரப் பாட்டியல்
இலக்கண விளக்கம்
முத்து வீரியம்
பிரபந்த தீபிகை
சுவாமிநாதம்

என்ன நண்பர்களே! பாட்டியல் நூல்களின் பட்டியலைப் பார்த்தீர்களா? அவற்றைப் பற்றி மேலும் சில குறிப்புகளைத் தெரிந்து கொள்ளலாமா?

மேலே குறிப்பிட்ட பாட்டியல் நூல்களில் பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை என்ற இரு நூல்களும் சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என்கின்றன. ஆனால், இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பிரபந்தம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் யாது?

விடை

2. சிற்றிலக்கியம் என்ற சொல்லாட்சி எப்போது வழக்கில் வந்தது?

விடை

3. தமிழ் இலக்கியத்தை எவ்வாறு பிரித்துக் காணலாம்?

விடை

4. சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என்று கூறும் இரு பாட்டியல் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

விடை