நண்பர்களே! பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்ற இரு
பெரும் பகுப்புகள் உள்ளன. இதனைப் பார்க்கும் போது
பேரிலக்கியத்தைவிடச் சிற்றிலக்கியம் இலக்கியத் தகுதி
குறைந்ததாக இருக்குமோ என்ற எண்ணம் உங்கள் மனத்தில்
தோன்றலாம். அவ்வாறு எண்ணக்கூடாது என்பதற்காகச்
சிற்றிலக்கியங்களின் சிறப்புகள்
சிலவற்றை இப்போது பார்ப்போம். சிற்றிலக்கியக் கூறுகள் சங்க காலம் முதலாகவே
காணப்படும் சிறப்பு உடையன. சான்றாகச் சங்க இலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படை
என்ற சிற்றிலக்கிய வகை இடம்பெறுவதைக்
காணலாம். சங்க
காலத்தில் தோற்றம் பெற்ற இந்தச் சிற்றிலக்கிய வகை
இக்காலம் வரையிலும் தொடர்ந்து
தோன்றிக் கொண்டே
இருக்கிறது. சான்றுகளாக, காமராசர்
உலா, கிருபானந்தவாரியார்
பிள்ளைத்தமிழ் போன்ற
நூல்களைக் காட்டலாம். பெரும்பாலும்
சிற்றிலக்கியங்கள் அனைத்தும்
சமயங்களைச் சார்ந்தவர்களால்
இயற்றப்படுகின்றன. இறைவன் மக்கள், மன்னன், என
அனைத்து நிலையினரும் தலைவர்களாக அமைகின்றனர்.
நாட்டுப்புற வடிவங்களைப் பெற்ற
சிற்றிலக்கியங்கள் பாமர
மக்களையும் கவர்கின்றன. பேரிலக்கியத்திற்கு இணையான இலக்கியச் சுவையும்,
இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் பெற்று
இலக்கியத் தரம்
மிகுந்தவையாகச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன.
|