2.3 தலைவன் பெருமைகள்

தூது அனுப்பும் தலைவி தூதுப் பொருள் ஆகிய கிளியை அழைத்து அதன் பெருமைகளைப் பலவாறு புகழ்ந்து கூறிய பின் கிளியிடம் தூது பெறும் தலைவன் ஆகிய அழகரின் பல்வேறு பெருமைகளை எடுத்துக் கூறுகின்றாள். அழகரின் பெருமைகளைத் தலைவி எவ்வாறு புகழ்ந்து கூறுகின்றாள் என்று பார்ப்போமா?

2.3.1 தலைவனின் தசாங்கம்

தூது அனுப்பும் தலைவி தூது பெறும் தலைவனாகிய அழகரின் தசாங்கங்களைக் கூறிப் புகழ்கின்றாள்.

• தசாங்கம்

நண்பர்களே! தசாங்கம் என்றால் என்ன? தசாங்கம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை ஆகும். தசாங்கம் என்பது தசம் + அங்கம் என்று பிரிந்து பொருள் தரும். தசம் என்றால் பத்து என்று பொருள். அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள். தலைவனின் (அரசனின்) பத்து அங்கங்களைப் புகழ்ந்து பாடுவது தசாங்கம் ஆகும்.

• புகழுக்குரிய உறுப்புகள்

அழகர் கிள்ளை விடு தூது நூலில் இடம்பெறும் தலைவராகிய அழகரின் பத்து உறுப்புகள் புகழப்படுகின்றன. பத்து உறுப்புகள் யாவை? மலை, நதி (ஆறு), நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை என்பன பத்து உறுப்புகள் ஆகும். இந்தப் பத்து உறுப்புகள் எவ்வாறு புகழப்படுகின்றன என்று பார்ப்போமா?

இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்
மன்னிய சோலை மலையினான்

(கண்ணி : 100)

(இன்னியம் - இசைக்கருவிகள்; ஆர்க்கும் - ஒலிக்கும்; பேர் - பெயர்; மன்னிய - நிலைபெற்ற)

• மலையும் நதியும்

திருமாலின் சோலை மலைக்குக் கேசவர்த்தினி, சிங்காத்திரி, இடபகிரி என்ற பெயர்கள் உண்டு. அவற்றுள் இடபகிரி என்ற பெயர் இந்தக் கண்ணியில் சுட்டப்படுகின்றது.

மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போலவரு நூபுரநதியான்

(கண்ணி : 103)

என்று திருமாலின் நூபுர நதி கூறப்படுகிறது.

(மணி மார்பு - அழகிய மார்பு; முத்து ஆரம் - முத்துக்களால் கோக்கப்பட்ட மாலை)

திருமாலின் தோள்களிலும் மார்பிலும் முத்துக்களால் கோக்கப்பட்ட மாலைகள் தவழ்கின்றன. னை மலையிலிருந்து இறங்கி வருவது நூபுர நதி அல்லது சிலம்பாறு. இது திருமாலின் நதி என்று வருணிக்கப்படுகிறது.

இங்கு, திருமாலின் மார்புக்கு மலைகளும், முத்து ஆரத்திற்கு நதியும் உவமையாகக் கூறப்படுகின்றன.
 

திருமாலின் நாடு

........புனல் நாடும் தென்னாடும் நாட்டம் ஆம்
அந்நாடு இரண்டில் அருள்சேர் வலக்கண் எனும்
நல்நாடாம் தென்பாண்டி நாட்டினான்

(கண்ணி : 105-106)

(புனல் நாடு - நீர் வளம் மிக்க சோழ நாடு; தென் நாடு - பாண்டிய நாடு; நாட்டம் - கண்) என்று வருணிக்கப்படுகின்றது.

திருமாலின் கண்கள்

நீர்வளம் மிக்க சோழ நாடும் தென் நாடு ஆகிய பாண்டி நாடும் திருமாலின் இரண்டு கண்கள் ஆகும். இந்த இரண்டு கண்களுள் வலக்கண் ஆகிய பாண்டிநாடு திருமாலின் நாடு ஆகும் என்று கூறப்படுகிறது.

திருமாலின் சீர்பதி என்ற ஊர்,

ஆர்பதியான அமராபதி போலும்
சீர்பதியான திருப்பதியான்

(கண்ணி : 111)

(ஆர்பதி - அருமையான ஊர்; அமராபதி - தேவர் உலகம்)

தேவர் உலகம் போன்ற சீர்பதி என்பது திருமாலின் ஊர் என்று காட்டப்படுகிறது.

திருமாலின் மாலை

திருமாலின் மாலை துளசிமாலை என்பது

...................................................- மார்பு இடத்தில்
எண்ணும்கலன் நிறத்தோடும் இந்திரவில் போல்பசந்த
வண்ணம்தரும் துளப மாலையான்

(கண்ணி : 112)

(மார்பு இடத்தில் - மார்பில்; கலன் - அணிகலன்; பசந்த வண்ணம் - பச்சை நிறம்; துளப மாலை - துளசி மாலை) என்று கூறப்படுகிறது.

திருமாலின் மார்பு

திருமாலின் மார்பில் பல அணிகலன்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பச்சைநிறத் துளசி மாலையும் சேர்ந்து உள்ளது. அது பார்ப்பதற்கு இந்திரவில் போன்றுள்ளது என்று உவமை நயம்பட வருணிக்கப்படுகின்றது. திருமால் அத்துவிதானந்தம் என்ற யானையை உடையவன் என்பது,

.............................................- உள்நின்று
உருக்கும் வயிணவமாம் ஓங்கும் மதம்பொங்கத்
திருக்கொம்புதான் துதிக்கை சேர - நெருக்கிய

பாகம்ஒத்த வைகானதம் பாஞ்சராத் திரம்ஆம்
ஆகமத்தின் ஓசைமணி ஆர்ப்புஎடுப்ப - மோகம்அறு

மட்டும் பிணைக்கும் வடகலையும் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறுஆக - விட்டுவிடா
ஆனந்தம்ஆன மலர்த்தாள் கண்ட அத்துவித,
ஆனந்தம் என்றகளி யானையான்

(கண்ணிகள் : 113-116)

(மதம் - சமயம், யானையின் மதம்; திருக்கொம்பு = திருமகள், அழகிய யானைக் கொம்பு; துதிக்கை - துதித்தல், யானையின் துதிக்கை; வைகானதம், பாஞ்சராத்திரம் - வைணவ ஆகமங்களின் பெயர்கள்; வடகலை, தென்கலை - வைணவ சமயத்தின் உட்பொருள்கள்; புரசைக்கயிறு - யானையின் கழுத்தில் கட்டும் கயிறு) என்று காட்டப்படுகின்றது.

திருமாலின் யானை

திருமால் அத்துவிதானந்தம் என்ற யானையை உடையவன். வைணவ சமயம் என்பது யானையின் மதம். யானையின் அழகிய கொம்புகள் துதிக்கையைச் சேர்ந்துள்ளன. வைகானதம், பாஞ்சராத்திரம் என்ற வைணவ ஆகமங்கள் ஆகிய மணிகளின் ஓசை ஆரவாரிக்கின்றது. வடகலை, தென்கலை ஆகிய வைணவ சமயத்தின் உட்பிரிவுகள் யானையின் கழுத்தில் கட்டும் கயிறுகளாக உள்ளன என்று வருணிக்கப்படுகின்றது.

திருமாலின் குதிரை

.............................................- ஆறு அங்கம்
சாற்றியதம் அங்கமாய்க் கொண்டு தாரணியில்
போற்றிய வேதப் புரவியான்

(கண்ணி : 119)

(அங்கம் - உறுப்பு; தாரணி - உலகம்; தார்+அணி = படை அணி; புரவியான் - குதிரையை உடையவன்)

எனத் திருமாலின் குதிரை குறிப்பிடப்படுகிறது.

ஆறு வகையான உறுப்புகளைத் தன் உறுப்புகளாய்க் கொண்டு விளங்கும் வேதம் ஆகிய குதிரையை உடையவன் திருமால் என்று திருமாலின் குதிரை ஆகிய உறுப்பு வருணிக்கப்படுகின்றது.

இதைப் போன்று திருமாலின் கருடக்கொடியும், மும்முரசும், தவ நிலை ஆகியவையும் போற்றப்படுகின்றன..