2.4 புராணக் கதைகள்

தூது அனுப்பும் தலைவி திருமாலின் பெருமைகளைப் புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்திப் புகழ்கின்றாள். இதற்குச் சில கண்ணிகளைச் சான்றுகளாகக் காட்டலாம்.

அரிவடிவும் ஆய்ப் பின் நரன் வடிவும் ஆகிப்
பெரியதுஒரு தூணில் பிறந்து - கரிய

வரைத்தடம்தோள் அவுணன் வன்காயம் கூட்டி
அரைத்திடும் சேனை அருந்தி - உருத்திரனாய்ப்

பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக்காப்பும்
உண்ணும் படியெல்லாம் உண்டருளி - வெண்ணெய்உடன்

பூதனை தந்தபால் போதாமலே பசித்து
வேதனையும் பெற்று வெளிநின்று - பாதவத்தைத்

தள்ளுநடை இட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான்

(கண்ணிகள் : 67 - 71)

(அரி - சிங்கம்; நரன் - மனிதன்; அவுணன் - இரணியன்; காயம் - உடம்பு; சேனை - படை; உருத்திரன் - சிவன்; பண்ணும் தொழில் - அழித்தலாகிய தொழில்; பகைத்து = எதிராக; நிலக்காப்பு - உலகைக் காத்தல்; படி - உலகம்; வேதன் - பிரம்மன்; வெளிநின்று = வெளி எங்கும் பரவி; பாதவம் - மருதமரம்)

இங்கு, திருமால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்வதாக, நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கண்ணனாக வெண்ணெய் உண்டதையும் பூதனையை மாய்த்ததையும் மருத மரங்களைச் சாய்த்ததையும் சொல்கிறார். அப்படியும் விளையாட்டுத்தனம் போகவில்லையாம்.

2.4.1 இரணியன் கதை

இரணியன் என்பவன் ஆணவம் மிகுந்து காணப்பட்டான். அவன் மகன் பிரகலாதன். அவன் எப்போதும் ஓம் நமோ நாராயணா என்று திருமாலைப் புகழ்ந்து கொண்டிருப்பான். இது இரணியனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் உன் கடவுள் ஆகிய திருமால் எங்கு இருக்கிறான் என்று கேட்டான்.

அதற்குப் பிரகலாதன் திருமால் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்; என்றான். உடனே இரணியன் வாளால் பக்கத்தில் உள்ள தூணை வெட்டினான். அதில் இருந்து திருமால் நரசிங்க அவதாரம் எடுத்து வந்தார். இரணியன் மார்பைப் பிளந்தார். அவன் ஆணவத்தை அடக்கினார். நரசிங்க வடிவு என்பது சிங்கமுகமும் மனித உடலும் இணைந்த வடிவம் ஆகும். இத்தகைய பெருமை உடையவன் திருமால் என்று போற்றப்படுகிறது.

2.4.2 திருமாலின் வடிவம்

திருமால் குறுகிய வடிவம் எடுத்து மாபலி என்ற மன்னனிடம் தமக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டார். மன்னனும் இவன் குறுகிய வடிவம் உடையவன்தானே? என்று எண்ணிச் சம்மதித்தான். திருமால் நீண்ட வடிவம் எடுத்து ஓர் அடியால் நிலத்தை அளந்தார். மற்றோர் அடியால் வானத்தை அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார். இடம் இல்லை ஆதலால் மன்னனின் தலையில் திருவடியை வைத்தார். இவ்வாறு தன் அடியால் உலகை அளந்த சிறப்பு உடையவன் திருமால் எனப் போற்றப்படுகின்றான்.

2.4.3 பூதனையின் அழிவு

பூதனை என்பவள் அரக்கி. அவள் கண்ணனைக் கொல்ல எண்ணினாள். தன் மார்பில் விஷத்தைத் தடவினாள். கண்ணனுக்குப் பால் புகட்டினாள். அவள் வஞ்சத்தை அறிந்த இறைவன் ஆகிய கண்ணன் அவள் மார்பை உறிஞ்சி அவளைக் கொன்றான். இத்தகைய சிறப்புகளை உடையவன் திருமால் என்று போற்றப்படுகின்றான். இவ்வாறு, தூது பெறும் தலைவனாகிய அழகரின் பல்வேறு சிறப்புகள் புராணக் கதைகள் மூலம் போற்றப்படுகின்றன.