2.5
தலைவி திருமாலைக் காணல்
தூது பெறும் தலைவன் ஆகிய அழகர் கோடைத்
திருவிழாவிற்காக மதுரையில் உள்ள வைகை ஆற்றுக்கு
எழுந்தருளுகின்றார். இதை,
குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து
ஓடி வையைதனில்
சென்று எதிர்த்து நிற்பதுஎனச் சீபதியோர் - அன்று
எதிர்த்துக்
கூடலின்கூடல் எனும் கூடல் திருநகரில்
ஏடு அலர் தாரான் எழுந்துஅருளி - (கண்ணிகள் : 145-146) |
 |
(சீபதியோர் - அழகர் மலையில் உள்ளவர்கள்; கூடலில்
- கூடுவதால்; கூடல் - மதுரை)
திருமால் ஆகிய அழகர் மதுரையில் உள்ள வைகை
ஆற்றுக்குக் கோடைத் திருவிழாவிற்காக வருகிறார். அப்போது
அழகர் மலையில் உள்ளவர்கள் அந்த விழாவைக் காண்பதற்கு
வையை ஆற்றுக்கு வருகின்றனர். இது ஓர் அழகிய உவமை
மூலம் விளக்கப்படுகிறது. மலையில் இருந்து வெள்ளம்
பெருக்கு
எடுத்து வையை ஆற்றில் சென்று எதிர்த்து நிற்பது போல்
மக்கள் கூடி நிற்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்தக் கண்ணிகளில் இன்னும் ஒரு சுவையான செய்தி
உள்ளது. அழகர் மலையில் இருந்து ஏராளமான மக்கள்
வந்து
கூடி நிற்பதால் கூடல் என்று பெயர் பெற்ற மதுரை நகரம்
என்று வருணிக்கப்படுகிறது. மதுரைக்குக் கூடல் என்ற
ஒரு
பெயரும் உண்டு. அது இவ்வாறு வருணிக்கப்படுகிறது.
2.5.1
தலைவியின் மயக்கம்
இவ்வாறு வையை ஆற்றுக்குக் கோடைத்
திருவிழாவிற்காக
வரும் அழகரைத் தலைவி காண்கிறாள். அவன் அழகில்
தலைவி மயங்குகிறாள். இந்நிகழ்ச்சி
எப்படிக் கூறப்பெறுகின்றது
எனக் காணுங்கள்!
அவனி பரிக்கும் அனந்த ஆழ்வான் மீது
பவனி வரக்கண்டு பணிந்தேன் - அவன் அழகில்
பின்னழகு முன்னழகாம் பேர் அழகைக் காணும்
முன்னே
முன் அழகைக் கண்டேன் நான்
மோகித்தேன்(கண்ணிகள் : 166-167) |
 |
(அவனி - உலகம்; பரிக்கும் -
காக்கும்; அனந்தாழ்வான் -
ஆதிசேடன்; பவனி
- உலா)
என்று காட்டப்படுகிறது.
• ஆதிசேடனும் அழகரும்
அழகர் ஆதிசேடன் ஆகிய வாகனத்தின் மேலே
ஏறி
உலா வருகின்றார். அதைக் கண்டு தூது அனுப்பும் தலைவி
அழகரை வணங்குகின்றாள். அழகரின் முன் அழகைக் கண்ட
தலைவி அதைப் போன்ற
பின் அழகைக் காண்பதற்கு முன்பு,
அழகர் மீது
மோகம் கொள்கின்றாள். முன்பிலும் பின்பு
அழகியவர்
என்று திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு என்பது
கருதத்தக்கது
ஆகும். கடவுளுக்குக் கூட முன் அழகு, பின்
அழகு ஆகியன
உண்டாம். ஆம்! இதோ திருமாலின்
திருமேனியை அழகு செய்திருக்கும் கோலம் பாருங்கள்!
இப்போது விளங்கும்.
இந்த உருவத்தைச் செதுக்கி வடித்த
சிற்பியைப்
போற்றுவதா, அழகு புலப்பட ஆடையும் அணியும்
பூட்டுவித்து
ஒப்பனை செய்த பட்டரைப் போற்றுவதா? இந்தக்
கோலம்தான் புலவரை அப்படிப் பாடத் தூண்டியிருக்குமோ?
இருக்கலாம்.
2.5.2
தலைவியின் புலம்பல்
அழகரின் அழகில் மயங்கிய தலைவி பலவாறு
புலம்புகின்றாள். சான்றாக,
செங்கரத்தில் அன்றுதிருடிய
வெண்ணெய் போலச்
சங்குஇருக்க என்சங்குதான் கொண்டீர் -
கொங்கை
மலைஅருவி நீர்உமக்கு மால்இரும் சோலைத்
தலைஅருவி நீர்தானோ சாற்றீர் - விலைஇலாப்
பொற்கலை ஒன்றுஇருந்தால் போதாதோ
அன்றுபுனை
வற்கலையிலே வெறுப்பு வந்ததோ - நற்கலைதான்
ஆரம்சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ
சோரம் திரும்பத் தொடுத்தீரோ - ஈரம்சேர்
நூலாடையாம் எங்கள்நுண் ஆடைதாம் உமக்குப்
பாலாடை ஆமோ பகருவீர்
(கண்ணிகள் : 172-176) |
 |
(செம் - சிவந்த; கரம் - கை; சங்கு
- சங்கு வளையல்;
கொங்கை - மார்பு; சாற்றீர்
- கூறுவீர்; கலை - ஆடை;
வற்கலை -
மரஉரி; ஆரம் - மாலை; சோரம் -
திருட்டுத்
தொழில்; பாலாடை - பால் போன்ற
ஆடை)
• கிருஷ்ண அவதாரம்
திருமால் கிருஷ்ண அவதாரம் எடுத்தபோது
வெண்ணெய்
திருடினான். அந்த வெண்ணெய் போன்று வெள்ளை நிறம்
உடைய சங்கைக் கையில் வைத்துள்ளான். அத்தகைய
சங்கு
இருக்கும்போது ஏன் என் கைகளில் உள்ள
வளையல்களைக்
கவர்ந்தீர் என்று தலைவி கேட்கின்றாள். தலைவனிடம்
கொண்ட காதல் காரணமாகத் தலைவியின் உடல் மெலிந்து
அவள் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று
விழுகின்றன.
இதைத்தான் தலைவி இவ்வாறு கூறுகிறாள். தலைவி பிரிவு
காரணமாகக் கண்ணீர் வடிக்கின்றாள்.
அந்தக் கண்ணீர் அவள்
மார்பில் வடிகின்றது. அது
மலையில் இருந்து வடியும் அருவி
போல் உள்ளது. அழகர்
விலைமதிக்க முடியாத பொன் ஆடை
அணிந்துள்ளார். இராம
அவதாரத்தின் போது அணிந்த மரஉரி
ஆடையில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டதோ, எனவே தான்
என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரோ என வினவுகின்றாள். மேலும், முன்னால் ஆயர்
குலப் பெண்களின் ஆடையைத்
திருடினீர். அது போன்று
இப்பொழுது என் ஆடையைத்
திருடுகிறீரோ என்கின்றாள்.
காமம் காரணமாகத் தலைவியின்
ஆடை நழுவி விழுகின்றது.
அதை இவ்வாறு சுவைபடக்
கூறுகிறார்.
• பிற பொருள்களைத் தூது அனுப்பாமையின் காரணம்
கூறுதல்
அழகரைக் கண்டு மயங்கி நிற்கிறாள் தலைவி.
அப்போது அழகர் சோலை மலைக்கு மீண்டும் சென்று
விடுகிறார். இதனால் தலைவி வருந்துகிறாள். அப்போது
கிளியைக் காண்கின்றாள். அதனைப் பலவாறு
புகழ்கின்றாள்.
பின்பு, பிற பொருள்களை ஏன் தூது சென்று வர
அனுப்பவில்லை என்று காரணம் கூறுகின்றாள்.
|
ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத்
தூதுவிட்டால்
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ - கூடுகட்டி
அன்பாய் வளர்த்த தாயார்க்குஉதவாக்
கோகிலம்தான்
என்பால் அருள்வைத்து இயம்புமோ - தன்பேர்
அரிஎன்று சொன்னால் அளிஎன்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ - விரகம்செய்
வன்கால திக்கின் மலைவாய் இருக்கின்ற
தென்காலும் என்காதல் செப்புமோ -
பொன்காதல்
வண்டுஅலையும் தாரான்முன் மாதரை எல்லாம்
தூற்றும்
கொண்டலையும் தூதுவிடக் கூடுமா - உண்ட
படிஏழும் காக்கும் பரங்கருணையான் முன்
கொடியோரும் போவாரோ கூறாய் (கண்ணிகள் : 199-204) |
 |
(எகினம் = அன்னம்; கோகிலம் - குயில்; இயம்புமோ -
கூறுமோ; அரி - திருமால்; விரகம் -
துன்பம்; காலதிக்கு -
எமன் திசை, அதாவது
தெற்குத் திசை; வாய் - இடம்;
தென்கால்
- தென்றல் காற்று; அலையும் - மொய்க்கும்;
தாரான்
- மாலையை உடையவன்; மாதரை - பெரிய பூமி;
தூற்றும்
- தூற்றுகின்ற; கொண்டல் - மேகம்; படி
- உலகம்;
கொடியோர் - காக்கைகள்)
• தூது அனுப்ப இயலாக் காரணங்கள்
முன்னால் பிரமன் அன்னத்தின் வடிவம்
எடுத்துச் சென்று
சிவபெருமானைக் காண முயன்றான். முயன்றும் முடியவில்லை.
எனவே அன்னத்தைத் தூது விட முடியாது. குயில்
காக்கைகளின் கூட்டில் சென்று முட்டை இடும். அதை அறியாத
காக்கைகள் அந்த முட்டையை அடைகாத்துக் குஞ்சு
பொறிக்கும். பின் வளர்ந்த பிறகுதான் அது தன் குஞ்சு
அல்ல
என்று அறிந்து கொள்ளும்.குயில் குஞ்சும் அந்தக் காக்கைக்
கூட்டை விட்டுப் பறந்துவிடும். எனவேதான், அன்பாய்த்
தன்னை வளர்த்த தாயாகிய காக்கைக்கு உதவாத
குயிலைத்
தூது விட முடியாது என்கிறாள் தலைவி.
வண்டு என்பதைக் குறிக்க அரி, அளி என்ற
சொற்களும்
பயன்படும். இதனை அடிப்படையாக வைத்துத் தன் பெயரை
அரி என்று சொன்னால் அளி என்று மாற்றிக் கூறும்
வண்டைத்
தூது விட முடியாது. தென்றல் தெற்குத் திசையில் உள்ள
மலையிலிருந்து வீசும். தெற்குத் திசை எமனுடையது. எனவே,
துன்பம் செய்வாரோடு தொடர்பு உடைய
தென்றலைத் தூது
விட முடியாது. பெரிய நில உலகம் முழுதும் தூற்றும்
மேகத்தைத் தூதுவிட முடியாது என்கிறாள். உலகம்
முழுவதையும் காப்பவன் திருமால். அவனிடம் கொடியோர்
ஆகிய காக்கைகளைத் தூது விட முடியாது. காக்கைக்குக்
கொடியோர் என்ற பெயரும்
உண்டு. எனப் பிறபொருள்களைத்
தூது அனுப்பாமையின் காரணங்கள் கூறப்படுகின்றன.
2.5.3
தூதுக்குரிய காலமும் நேரமும்
எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற
சமயம்
வேண்டும். அதுபோலத் தூது சொல்வதற்கும் ஏற்ற சமயம்
வேண்டும். எனவே, தூது அனுப்பும் தலைவி கிளியிடம்
தூது
கூற ஏற்ற சமயத்தைக் கூறுகிறாள்.
ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன்
அப்பொழுதுஉன்
வார்த்தை திருச்செவியில் வாயாது -
சேர்த்தியிலே
மெல்ல எழுந்தருளும் வேளைபார்த்து அவ்வேளை
சொல்ல
எழுந்து ஒருவர் சொல்லாமுன் - வெல்லும் மதன்
அம்புஅலர் தூற்ற அடர்ந்து வரும்முன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே - கும்பமுனி
வாயில் நுரைஅடங்க வந்தகடல் அடங்கத்
தாயின் உரை அடங்கத் தத்தையே - நீ
உரையாய்
(கண்ணிகள் : 230 - 233) |
(திருவோலக்கம் - சூழ்ந்து இருப்பவருடன்
இருக்கையில்
இருத்தல்; சேர்த்தி = பள்ளியறை; வார்த்தை - சொல்; வாயாது
- சேராது; மதன் - மன்மதன்; அம்பலர்
- அம்பாகிய மலர்; வம்பலர் - அயலவர்;
கும்பமுனி
- அகத்திய முனிவர்; தத்தையே - கிளியே)
• தூது சொல்லும் நேரம்
அழகர் தம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் இருக்கையில் அமர்ந்து இருப்பார். கிளியே! அப்போது சென்று நீ தூதுச்
செய்தியைக் கூறினால் அது அவர்
செவியில் கேட்காது. அவர் பள்ளியறைக்குச் செல்ல எழுந்திருப்பார். அப்போது நீ செல்.
பிறர் எழுந்து ஏதேனும் செய்தியைக் கூறும் முன்னால் நீ
சொல்லி விடு. மன்மதன் என்னை வருத்தும் செயல் செய்யும்
முன்பும் அயலார் பழிச்சொல் கூறும் முன்பும், காதலரை வருத்தும் கடல் அலைகள்
அடங்கவும், தாயின் ஏச்சுச் சொற்கள் அடங்கவும் நீ தூதுச் செய்தியைக் கூறுவாயாக
என்று தலைவி கிளியிடம் வேண்டுகின்றாள்.
இங்கு அகத்திய முனிவர் கடலைத் தன் வயிற்றுள்
அடக்கிய செயல் சுட்டப்படுகிறது.
2.5.4
தலைவியின் வேண்டுதல்
தலைவி தூதுப் பொருள் ஆகிய கிளியிடம்
வேண்டும்
செய்திகளைப் பார்ப்போம்.
எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை உதவீரேல் - அம்மை திருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மின் என்பாய் -
நீதி
அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்
கொடுப்பவன் இல்லை என்று கூறான் - தடுக்கும்
அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீ வாங்கி வா (கண்ணிகள் : 236-239) |
(மாலை - திருமாலை; மாலை - பூமாலை; புயம்
- தோள்;
வரவிட்ட - அனுப்பிய; தாதையார்
- தாதுக்கள் நிறைந்த;
தம்மின் - தாருங்கள்; ஆடித்தியாகம்
- ஆடிமாதத்தில்
அடிகளுக்கு நடைபெறும் திருவிழா; மாலை
- மயக்கத்தை; மரு
- மணம் மிக்க)
கிளியே! தலைவன் ஆகிய திருமாலின் இரு
தோள்களிலும்
கிடக்கும் மாலையைக் கேள். அந்த மாலையைத் தராவிட்டால்
திருவில்லிப்புத்தூரில் இருந்து திருவிழாக்காலத்தில்
சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய
மாலையை வாங்கி வா. தம்மை
அன்போடு சேர்ந்தவர்
யாவர்க்கும் இல்லை என்று கூறாதவன்
தலைவன் ஆகிய அழகர்.
எனவே என் அரிய மயக்கத்தை
நீக்கும் அழகரின் மணம்
மிக்க மாலையை வாங்கி வா என்று
தலைவி வேண்டுகிறாள்.
இவ்வாறு, அழகர் உலா வருவதைக் கண்டு, காதல்
கொண்டு மயங்கிய தலைவி அவரிடம் கிளியைத் தூது
அனுப்புவதாக அழகர் கிள்ளைவிடு தூது நூல் திகழ்கிறது. |