5.2 மடல் இலக்கியப் போக்கு

நண்பர்களே! மடல் இலக்கியம் என்பதைக் குறித்துப் பொதுவாகப் பார்த்தோம். இனி, சிறிய திருமடல் என்ற நூலின் துணையுடன் மடல் இலக்கிய வகையில் நூல் போக்கைக் காண்போமா?

5.2.1 உறுதிப் பொருள்கள்

பொதுவாக உறுதிப்பொருள்கள் நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், சிறிய திருமடலில் தலைவி உலகில் உள்ள உறுதிப் பொருள்கள் மூன்று என்கிறார்.

முதலில் நிலவுலகம் பற்றித் தலைவி கூறுவதைக் காண்போமா?

காரார் வரைகொங்கை, கண்ணார் கடல்உடுக்கை
சீரார் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேராற்றுப்
பேரார மார்பி
ன் பெருமா மழைக்கூந்தல்
நீரார வேலி நிலமங்கை யென்னும் . . . . . .
                         (சிறிய திருமடல், அடிகள் 1-4)
TVU - c0123 - Audio Button

(கார் = மேகம்; வரை = மலை; கண் ஆர் = பரந்த; உடுக்கை = சேலை; சுடர் = சூரியன்; செங்கலுழி = சிவந்து ஓடும்)

என்கிறார். இந்த அடிகளில் நில உலகை ஒரு பெண்ணாகக் காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார்.

நிலமகள்

மேகங்கள் சென்று தங்கும் அளவுக்கு மலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. இந்த மலைகள் பூமியாகிய பெண்ணின் மார்புகள், இடம் அகன்று பரந்த கடல் அவள் சேலை, சூரியன் அவள் இடும் பொட்டு (திலகம்), கருத்த மேகங்கள் அவளுடைய கூந்தல், இவ்வாறு நிலமகள் காணப்படுகின்றாள் என்கிறார்.

இத்தகைய நில உலகில் காணப்படும் உறுதிப்பொருள்கள் மூன்று என்கிறாள் தலைவி. அவை அறம், பொருள், இன்பம் என்பன ஆகும். இந்த நூலில் இன்பமே மேலானது. ஏன் எனில் இன்பத்தை அடைந்தவர்கள் அறத்தையும் பொருளையும் பெற்றவர்கள் ஆவார்.