1.3 இலக்கியச் சிறப்பு

முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அந்நாட்டை வெற்றி கொண்டதன் நினைவாக இப்பரணி பாடப்பட்டுள்ளது. வீரம் மிக்கதாய் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. கற்பனை கலந்த நிகழ்ச்சிகள் இலக்கிய நயத்தோடு இடம் பெற்றுள்ளன.

நண்பர்களே! இந்த பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணியின் அமைப்பு, இலக்கியச் சிறப்பு எனும் இரு நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம்.

1.3.1 கலிங்கத்துப் பரணியின் அமைப்பு

கலிங்கத்துப் பரணி 14 பகுதிகளை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாகக் கடவுள் வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது. அடுத்துக் கடைதிறப்பு எனும் பகுதி அமைந்துள்ளது. கலிங்கப் போர் புரியச் சென்ற மறவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்தனர். அவ்வூடல் நீக்கப் புலவர் கடையைத் (கதவை) திறக்கச் சொல்வது கடைதிறப்பு ஆகும்.

  • காளி

போர்த் தெய்வமாகிய காளி வாழும் காட்டை விவரிப்பது காடு பாடியது எனும் பகுதி ஆகும். கோயில் பாடியது எனும் பகுதி காளி தேவியின் கோயிலை வருணிப்பதாகும். அடுத்துத் தேவி பாடியது எனும் பகுதி காளியைப் பாடுவதாகும். காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களை விவரிப்பது பேய்களைப் பாடியது எனும் பகுதி ஆகும். ஒரு பேய் காளி தேவியின் முன் மாயாசாலங்களைச் செய்து காட்டுகிறது. இது இந்திரசாலம் எனும் பகுதி ஆகும்.

  • சோழர் வரலாறு

அடுத்துச் சோழர்களின் குல வரலாற்றை இராச பாரம்பரியம் எனும் பகுதி எடுத்துக் கூறுகிறது. குலோத்துங்க சோழன் பிறந்ததை அவதாரம் எனும் பகுதி விவரிக்கிறது.

  • போர்க்களமும் பேய்களும்

காளிக்குக் கூளி கூறியது எனும் பகுதி கலிங்கப் போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது. போர் நடவடிக்கைகள் முதலியவற்றை ஒரு பேய் காளியிடம் கூறுவதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. போர் பாடியதும் களம் பாடியதும் போர் நிகழ்ச்சிகளைச் சுவையாக வருணித்துள்ளன. நூலின் நிறைவாகக் கூழ் அடுதல் (சமைத்தல்) எனும் பகுதி அமைந்துள்ளது. இறந்த வீரர்களின் உடல்களைக் கொண்டு கூழ் சமைத்துக் காளிக்குப் படைத்துப் பேய்கள் தாமும் உண்பதாகக் கூழ் அடுதல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

1.3.2 கற்பனை

இப்பரணி நூலின் சிறப்பு, கற்பனை கலந்த பாடல்கள் ஆகும். பேய்களின் செயல்களையும் போர் நிகழ்வுகளையும் பற்றிப் பாடும் புலவரின் கற்பனை, இன்பம் தரத்தக்கது. நண்பர்களே! ஒரு சில பாடல்களை இப்பகுதியில் பார்ப்போம்.

  • நிழல் இல்லா நிழல்

காளியின் உறைவிடமாகச் சங்க இலக்கியங்கள் கூறுவது பாலை நிலம் ஆகும். பாலை என்பது மிகுந்த வறட்சி உடையது; வெப்பம் மிக்கது. கலிங்கத்துப்பரணியில் உள்ள காடு பாடியது எனும் பகுதி காளி கோயில் உள்ள காட்டைப் பாடுவதாக உள்ளது. இக்காடு, மிகுந்த வெப்பமும் வறட்சியும் உடையது.

இரை தேடுவதற்காக வானத்தில் வட்டமிட்டுப் பறந்து செல்கிறது பருந்து. அது பாலை வெப்பத்திற்கு அஞ்சிப் பறந்து ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற பருந்தின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அந்நிலத்தில் இல்லை. இதனை,

ஆடுகின்ற சிறைவெம் பருந்தின் நிழல்
அஞ்சி அக்கடு வனத்தை விட்டு
ஓடுகின்ற நிழல் ஒக்கும்;நிற்கும் நிழல்
ஓரிடத்தும் உள அல்லவே

(காடு பாடியது: 80)

TVU - c0124 - Audio Button

(கடு = கொடிய, சிறை = சிறகு, வனம் = காடு)

என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.

  • நக்கி விக்கும் நவ்வி (மான்)

பாலை நிலத்தில் கொடிய வெப்பம். அதனால் மானின் வாய் வெந்துபோய் உள்ளது. மானுக்குத் தண்ணீர்த் தாகமும் மிகுதி. நெருப்பிலிருந்து நீர் கிடைத்தாலும் குடித்துவிடும். தாகத்தினால் துன்புறும் மான் செந்நாயின் வாயிலிருந்து வடியும் எச்சில் நீரைக் குடிக்கிறது. செந்நாய்க்கு அஞ்சி ஓடும் மான் கூடத் தாகத்தால் இவ்வாறு செய்கிறது. இக்காட்சியைத்

தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தைகூர வாய்வெந் துலர்ந்துசெந்
நாயின் வாயின்நீர் தன்னை நீர்எனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே

(காடு பாடியது: 83)

TVU - c0124 - Audio Button


(தீயின் வாய் = நெருப்பிடையே, நீர் எனா = நீரெனக் கருதி, நவ்வி = மான்)

என்று புலவர் விவரிக்கிறார். இவ்வாறு காளி தேவி கோயில் கொண்டுள்ள காட்டைப் பற்றிய நிலையைப் புலவர் எடுத்துரைக்கின்றார்.