1.4 வருணனை

பரணி இலக்கியத்தின் தெய்வமாகக் காளி போற்றப் பெறுவாள். காளியின் சுற்றமாகப் பேய்கள் புனையப்படும். காளியையும் கூளியையும் (பேய்களையும்) சயங்கொண்டார் சுவைபட வருணித்து உள்ளார்.

  • காளி வருணனை

காளிதேவி தனக்கு உரிய கோயிலில் வீற்றிருந்து தன்னைப் பணிபவர்க்கு அருள் வழங்குவாள். காளிதேவியின் சிறப்புகளைத் தேவியைப் பாடியது எனும் பகுதி விளக்குகிறது.

தேவர்கள் பாற்கடலைக் கடைய வாசுகி என்னும் பாம்பு பயன்பட்டது. உலகத்தைச் சுமந்து கொண்டு இருப்பது ஆதிசேடன் எனும் பாம்பு. இந்த இரண்டு பாம்புகளையும் கயிறாகக் கொண்டு பெரிய முத்துகள் உள்ளே இடப்பட்ட சிலம்புகளைக் காளி அணிந்திருக்கிறாள் (தேவியைப் பாடியது: 122)

  • சிவன் கொடுத்த பரிசு

சிவன், விரித்த சடையையும் மூன்று கண்களையும் உடையவர். அவருக்கு உண்டான காமநோயை நீக்கியவள் காளி. சிவன் அதற்காகக் காளிக்குப் பரிசுகளைத் தருகிறார். யானையின் தோலாகிய சேலையைத் தருகிறார். யானையின் குடலையும் பாம்பையும் சேர்த்து முறுக்கிக் கட்டிக் கொள்ளும் இடைக் கச்சினையும் தருகிறார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்

பரிவு அகலத் தழுவிப் புணர் கலவிக்கு உருகிப்
     படர்சடை முக்கணுடைப் பரமர் கொடுத்த களிற்று உரிமிசை அக்கரியின் குடரொடு கட்செவியிட்டு
     ஒரு புரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையளே!

(தேவியைப் பாடியது: 125)

TVU - c0124 - Audio Button

(பரிவு = காமத் துன்பம், பரமர் = சிவன், உரி = தோல், குடர் = குடல், கட்செவி = பாம்பு, புரி = கயிறு)

  • காளியின் பிள்ளைகள்

புலவர் காளியின் பிள்ளைகளைப் பாடுகிறார். காளிக்கு யார் யார் புதல்வர்கள்?

கலைகள் கற்று மேன்மை பெற்ற பிரமன் ஒரு பிள்ளை. கருமேகம் போன்ற நிறமுடைய திருமால் மற்றொரு பிள்ளை. யானை முகமுடைய விநாயகன் ஒரு பிள்ளை. அசுரர் அழிய அம்பு செலுத்திய முருகன் பிறிதொரு பிள்ளை. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக்
     கரடதடக் கடவுள் கனக நிறத்தவனைச்
சிலைவளைவுற்று அவுணத்தொகை செகவிட்ட பரித்
     திறலவனைத் தரும் அத்திரு உதரத்தினளே

(தேவியைப் பாடியது: 126)

TVU - c0124 - Audio Button

(உத்தமன் = பிரம்மன், முகில் ஒப்பவன் = திருமால், கரடதடக் கடவுள் = விநாயகர், கனகம் = பொன், அவுணர் = அசுரர், திறலவன் = முருகன், திரு = அழகு, உதரம் = வயிறு)

  • காளியின் அணிகலன்கள்

காளி தேவி இரண்டு காதுகளிலும் பெரிய மலைகளைக் காதணியாக அணிந்தாள். அவை காதோலைகள் ஆகும். அவற்றையே வரிசையாகக் கோத்து மாலையாக அணிய விரும்பினால் அவை மணிமாலை ஆகும். அம்மாலைகளே காளி தேவியின் கைகளின் மேல் இருக்கும் போது அம்மானை (மகளிர் விளையாட்டு), பந்து முதலிய விளையாட்டுக் கருவிகள் ஆகும். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.

அண்டம் உறுகுல கிரிகள்
     அவள் ஒருகால் இருகாதில்
கொண்டு அணியின் குதம்பையுமாம்
     கோத்து அணியின் மணிவடமாம்
கைம் மலர்மேல் அம்மானையாம்
     கந்துமாம் கழங்குமாம்

(தேவியைப் பாடியது: 132, 133)

TVU - c0124 - Audio Button


(அண்டம் = உலகம், கிரி = மலை, ஒருகால் = ஒரு சமயம், குதம்பை = காதோலை / அணிவகை, வடம் = மாலை, கந்துகம் = பந்து, கழங்கு = கழற்சிக்காய்)

இவ்வாறாகப் புலவர் காளிதேவியின் உருவ வருணனையைச் சுவைபட விவரித்துள்ளதை அறிய முடிகிறது.

1.4.1 பேய் வருணனை

காளியை வருணிப்பதில் உள்ள பெருமிதச் சுவை பேய்களைப் பாடும்போது நகைச்சுவையாக மாறுகிறது. பேய்களின் உருவங்களும் அவற்றின் வேண்டுகோள்களும் வினோதம் நிறைந்து காணப்படுகின்றன.

  • பனைமரம் போன்றவை

பேய்கள் மிகப் பெரிய பசியை அடைத்து வைத்த ஒரு பாத்திரம் போலக் காணப்படுகின்றன. ஒரு நாள் போலப் பல நாளும் பசியால் மெலிகின்றன. அவற்றின் கைகளும் கால்களும் பெரிய பனை மரங்கள் போல் காணப்படுகின்றன. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

பெருநெடும் பசிபெய் கலம் ஆவன
     பிற்றை நாள் முனைநாளின் மெலிவன
கருநெடும் பனம் காடு முழுமையும்
     காலும் கையும் உடையன போல்வன

(பேய்களைப் பாடியது: 136)


(கலம் = ஏனம், பிற்றைநாள் = மறுநாள், பனம் = பனைமரம், கரு = கருமை நிறம்)

  • வாயும் வயிறும்

குகைகளோடு பேய்கள் வழக்காடுகின்றன. குகைகளின் வாயைவிடப் பேய்களின் வாய்களே பெரியனவாம். எவ்வளவு உணவு போட்டாலும் நிரம்பாத வயிற்றையும் உடையன. உட்கார்ந்தால் முகத்திற்கு மேலே மூன்று முழநீளம் போகும் முழங்கால்களைப் பெற்றிருந்தன. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

வன் பிலத்தொடு வாதுசெய் வாயின
     வாயினால் நிறையாத வயிற்றின
முன்பு இருக்கின் முகத்தினும் மேல்செல
     மும்முழம்படும் அம்முழந் தாளின

(பேய்களைப் பாடியது: 137)


(பிலம் = குகை, வாது செய்தல் = வழக்கிடுதல்)

  • மூக்கும் காதும்

பேய்களின் உடல் முழுவதும் நீண்டு தடித்துக் கறுத்து வளைந்த நிலையில் மயிர்கள் காணப்பட்டன. இவை பாம்புகளைப் போலத் தொங்கின. மூக்கின் துவாரங்களில் பழமையான பாசி படிந்திருந்தது. காதுகளின் துவாரங்களில் ஆந்தைகள் குடியேறின. இதனால் வால்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்தன (பேய்களைப் பாடியது: 141).

இவ்வாறாகப் பேய்களின் உருவத்தைப் புலவர் நயம்பட விளக்கி இருப்பதை அறிய முடிகின்றது. பேய்கள் கடும் பசியால் உணவு பெறாமல் வாடுகின்றன. காளியிடம் முறையிடுகின்றன. கலிங்கப் போர் நிகழ இருப்பதையும் அப்போது உணவு பெற இருப்பதையும் அறிந்து ஆறுதல் பெறுகின்றன.

1.4.2 வீரர் வருணனை

காளி தேவியின் கோயில் முன்பு மறவர்கள் திரண்டு நிற்கின்றார்கள். 'தேவியே நாங்கள் விரும்பும் வரத்தைத் தருவாயாக! அவ்வாறு தந்தால் எங்கள் உடல் உறுப்புகளைப் பலியாக உனக்குத் தருகிறோம்' என்று வீர முழக்கம் செய்கிறார்கள். வரம் வேண்டிய பின்பு வேள்வித் தீ வளர்க்கிறார்கள். தங்கள் விலா எலும்புகளைப் பிடுங்கி வேள்வித் தீயில் விறகாக இடுகிறார்கள். உடலிலிருந்து வழியும் இரத்தத்தை நெய்யாகச் சொரிகின்றார்கள். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.

சொல்லரிய ஓமத்தீ வளர்ப்பராலோ
     தொழுது இருந்து பழுஎலும்பு தொடர வாங்கி
வல்எரியின் மிசைஎரிய விடுவராலோ
     வழிகுருதி நெய்யாக வார்ப்பராலோ

(கோயில் பாடியது : 110)


(ஓமத்தீ = வேள்வித்தீ, பழு = விலா, வாங்கி = பிடுங்கி, வல்லெரி = மிகுதியான நெருப்பு, குருதி = இரத்தம், வார்ப்பர் = ஊற்றுவர்)

  • கும்பிட்டு நிற்கும் குறை உடல்

வேள்வி முடிந்தது. மறவர்கள் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுக்கின்றார்கள். தலையற்ற உடல்கள் தேவியைக் கும்பிட்டு நிற்கின்றன. இதனை விவரிக்கும் பாடல் வருமாறு:

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
     அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ
     குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ

(கோயில் பாடியது- 111)


(சிரம் = தலை, அணங்கு = காளி, கொற்றவை = பெண் தெய்வம் (காளி), பரவும் = துதிக்கும், உடலம் = உடல்)

  • அச்சம் தரும் தலைகள்

இன்னும் சிலர் பலிபீடத்தில் தம் தலைகளை அறுத்து வைக்கின்றார்கள். அத்தலைகளை ஆண்டலை என்னும் பறவை தன் இனம் என்று எண்ணுகின்றது. அதனால் அத்தலைகளின் பக்கத்தில் வருகின்றது. வந்ததும் அறுபட்ட தலைகள் ஆண்டலைப் பறவையை அச்சமுறுத்துகின்றன. இதோ பாடல்,

நீண்ட பலிபீடத்தில் அரிந்து வைத்த
     நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் இனம் என்று எண்ணி
ஆண்டலைப் புள் அருகு அணைந்து பார்க்குமாலோ
     அணைதலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ

(கோயில் பாடியது : 112)

(குஞ்சி - ணின் தலைமயிர்)

1.4.3 போர்க்கள வருணனை

வீரர்கள் வீரத்தோடு போரிட்டு மடிகின்றனர். புலவர் போர்க்களத்தை வருணிக்கின்றார். போரில் வீரர்களின் உடல்கள் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டன. அவை நிலம் முழுவதும் நிரம்பின. வீரர் பலருடைய தலைகள் மலைகள் போல் குவிந்தன. உடல்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் கடல் போல் எங்கும் பரவியது. இரத்த வெள்ளத்தில் அவர்களின் குடர்கள் (குட கள்) மிதந்து சென்றன. (போர் பாடியது- 447)

இவ்வாறாகச் சயங்கொண்டார் போர்க்களக் காட்சியையும், மறவர்களின் வீரச்செயல்களையும் புனைந்து இருப்பது படித்து மகிழத்தக்கது.

  • பிணம் உண்ணும் பேய்கள்

கலிங்கப் போர் முடிவிற்கு வருகிறது. சோழ வீரர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். இராமாயணம், பாரதம் போன்ற வீரம் செறிந்த இந்தப் போர்க்களத்தைக் காண வருமாறு பேய் காளியை அழைக்கிறது. காளியும், பேய்கள் புடைசூழப் போர்க்களத்தைப் பார்க்கிறாள். களத்தைக் கண்டு மகிழ்ந்த காளி கூழ் சமைக்குமாறு பேய்களுக்குக் கட்டளை இடுகின்றாள்.

  • கூழ் சமைத்தல்

பேய்கள் கூழ் சமைக்க ஆயத்தமாகின்றன. வீரர்களின் தலைகள் கொண்டு, அடுப்பு அமைக்கப் படுகின்றது. யானைகளின் வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரையின் குருதி உலை நீராக ஊற்றப்படுகின்றது. வீரர்களின் மூளை தயிராகும்.

இறைச்சியாகிய செந்தயிர் பானைகளில் நிரப்பப்படுகின்றது. குதிரையின் பற்கள் பூண்டாகும். கலிங்க வீரர்களின் பற்கள் அரிசியாகும். இந்தப் பொருள்களைக் கொண்டு கூழ் சமைக்கப்படுகின்றது. (கூழ் அடுதல்)

  • தானே குடிக்கும் கூத்திப் பேய்

போர்க்களத்தில் கூழ் சமைத்து முடித்ததும் பேய்கள் உண்ணத் தொடங்குகின்றன. அவ்வாறு உண்ணும் பேய்களில் கூத்திப்பேய் என்பதும் ஒன்று. அப்பேய் தனக்கும் தன் கணவனுக்கும் சேர்த்துக் கூழ் வாங்குகிறது. பானையில் வாங்கிய அக்கூழ் பானையின் வெளிப்புறங்களில் வழிகின்றது. அவ்வாறு வழியாமல் மாமிசத் துண்டால் அதனைத் தடுத்துக் குடிக்கின்றது அப்பேய். அதனை மற்றொரு பேய் பார்க்கிறது. உன் கணவனுக்கு வாங்கிய கூழையும் சேர்த்து நீ குடிக்கின்றாயே! அவனுக்கு வேண்டாமோ என்று கேட்கிறது. உடனே கூத்திப்பேய் என் கணவன் குடிக்க மாட்டான் என்று சொல்லிக் கூழ் முழுவதையும் குடிக்கின்றது. இதனைக் கீழே உள்ள பாடல் விளக்கும்.

தடியால் மடுத்துக் கூழ் எல்லாம்
     தானே பருகித் தன்கணவன்
குடியான் என்று தான்குடிக்கும்
     கூத்திப் பேய்க்கு வாரீரே

(கூழ் அடுதல்: 575)

(தடி = தசை, மடுத்து = அமிழ்த்தி, கூத்திப்பேய் = கூத்தாடும் பேய், வாரீர் = ஊற்றுங்கள்)

  • நான்முகனுக்கும் கிட்டாத கூழ்


இவ்வாறு பேய்கள் கூழை உண்ணும்போது நான்முகனைப் (பிரம்மனை) பார்த்து நகைக்கின்றன. நான்முகன் தனக்கு மட்டும் நான்கு வாயைப் படைத்துக் கொண்டான். ஆனால் நமக்கு ஒரு வாயைத்

தந்துள்ளான். இதனால் நான்முகன் வஞ்சகன். என்றாலும் அமுதம் போன்ற இந்தக் கூழினைக் குடிக்க நான்முகனுக்குக் கொடுத்து வைக்கவில்லை: ஆனால் ஒரு வாய் பெற்ற நாமோ இக்கூழினைக் குடித்து மகிழ்கின்றோம். ஆதலால் நான்முகனும் வெட்கப்படும்படி மகிழ்ச்சியுடன் கூழினை உண்போமாக என்று பேய்கள் கூறி மகிழ்கின்றன. இதனைக் கீழே உள்ள பாடல் விவரிக்கும்.

தமக்கு ஒரு வாயொடு வாய்மூன்றும்
     தாம் இனிதாப் படைத்துக் கொண்டு
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார்
     நாணும்படி களித்து உண்ணீரே

(கூழ் அடுதல் : 581)


(நான்முகனார் = பிரமன், களித்து = மகிழ்ந்து)

இவ்வாறாகப் பல்வேறு பேய்களின் கூழ் உண்ணும் நிலைகளைச் சயங்கொண்டார் கற்பனை வளத்துடன் வருணித்துப் படைத்துள்ளதை அறிய முடிகின்றது.