1.5 அகப்பொருள்

கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் சோழ நாடு திரும்புகின்றனர். ஆனால் தாம் வருவதாகக் கூறிய காலம் கடந்து பணி முடித்து வருகின்றனர். காலம் கடந்து வருவதால் மகளிர் ஊடல் கொள்கின்றனர். தம் கணவனை எதிர்கொண்டு வரவேற்காமல் கதவைத் தாழிட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் புலவர் மகளிரைக் கதவு திறக்க வேண்டுகிறார். இது கடை திறப்பு எனும் பகுதியாக அமைகின்றது. மகளிரின் பல்வேறு காதல் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுகிறார் புலவர். இத்தகைய இனிய பெண்களே! கதவைத் திறவுங்கள் என்று வேண்டுகிறார்.

1.5.1 அழகியும் ஆடவர் உயிரும்

பெண்கள் கூந்தலில் செங்கழுநீர் மலர்களைச் செருகுகின்றார்கள். செங்கழுநீர் மலர்களை மட்டுமா செருகுகின்றார்கள்? இல்லை! இவ்வுலகத்தில் வாழும் இளைஞர்களின் உயிர்களையும் சேர்த்து அல்லவா செருகுகின்றார்கள்? இதனை விளக்கும் பாடல் வருமாறு:

செக்கச் சிவந்த கழுநீரும்
     செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர்
    
ம்பொற் கபாடம் திறமினோ

(கடை திறப்பு : 74)

TVU - c0124 - Audio Button

(செக்கச் சிவந்த = மிகச்சிவப்பான, கழுநீர் = பூ, செகம் = உலகம், குழல் = கூந்தல், கபாடம் = கதவு)

1.5.2 கதவு திறத்தலும் அடைத்தலும்


கணவன்மார் குறித்துச் சென்ற காலம் வந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து மனைவியர் கதவைத் திறந்து வழிமேல் விழி வைத்துப் பார்த்து நின்றனர். கணவன்மார் வரவில்லை. துயரத்தால் வெறுப்பு உற்றுக் கதவைப் படார் எனச் சாத்தினர். இவ்வாறாக இரவு முழுவதும் திறப்பதும் சாத்துவதுமாக இருந்தனர்.

இதனால் கதவில் உள்ள சுழலும் குடுமி தேய்ந்தது. இதனைப் புலவர் நயம்படப் புனைந்துள்ளார்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
     வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
     தேயும் கபாடம் திறமினோ

(கடை திறப்பு : 69)

TVU - c0124 - Audio Button

(கொழுநர் = கணவர், குடுமி = கதவு திறக்கவும் மூடவும் உதவும் அச்சு)

இவ்வாறாகக் கடைதிறப்புப் பகுதி முழுவதும் அகப்பொருள் நிறைந்ததாகச் சுவைபடப் புலவர் புனைந்து இருப்பதை அறிய முடிகின்றது.