2.5 அகமும் புறமும்
தமிழ் இலக்கிய
வரலாற்றைக் கூர்ந்து நோக்கும்போது ஓர் உண்மை புலனாகும். சங்க அக இலக்கிய
மரபும் புற இலக்கிய மரபும் காலம் தோறும் தமிழிலக்கியங்கள் மீது செல்வாக்குச்
செலுத்தி இருப்பதை அறியமுடியும். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் அச்செல்வாக்கு
உண்டு.
2.5.1
அகம் தரும் இயற்கைப் புணர்ச்சி
தலைவனும்
தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுதல் செய்வர். இதனை இயற்கைப் புணர்ச்சி
என்பர். உள்ளப்புணர்ச்சி என்றும் கூறுவர். தலைவனாகிய சிவனுக்கும் தலைவியாகிய
தடாதகைப் பிராட்டிக்கும் (மீனாட்சியம்மை) இயற்கைப் புணர்ச்சி கயிலாயத்திலே
நிகழ்கின்றது. பொய்யோ என்று எண்ணும்படியான இடையை உடையவள் மீனாட்சி. இவள்
மேரு மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானைக் காண்கிறாள். உள்ளப்புணர்ச்சி
தோன்றும் நிகழ்ச்சி மூலம் புலவர் இயற்கைப் புணர்ச்சி மரபை விளக்கிய திறம்
பாராட்டிற்கு உரியது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.
பொய்வந்த நுண்இடை
நுடங்கக் கொடிஞ்சிப்
பொலம்தேரொடு அமரகத்துப்
பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை
பொம்மல் முலை மூன்றில் ஒன்று
கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக்
கருத்தான் அகத்துஒடுங்க
(மீனா.பிள். 34) |
 |
(நுடங்க = அசைய, கொடிஞ்சி
= தேரின் உறுப்பு, பொலம் = பொன், அமரகம்
= தேவருலகம், பொன்மேருவில்லி = சிவன், கொழுநர்
= கணவன்)
இவ்வாறு அக இலக்கிய மரபாகிய இயற்கைப்
புணர்ச்சி இங்குக் கூறப்படுகிறது.
2.5.2 புறம் தரும்
ஆட்சி
அகப்பொருள்
போற்றப் படுவது போலவே புறப்பொருளும் இந்நூலில் போற்றப் பட்டுள்ளது. தடாதகைப்
பிராட்டிக்கு எனத் தனி ஆட்சிக்குரிய நிலப்பரப்பு உள்ளது. இந்த நிலப்பரப்பின்
எல்லைக் கற்களாக குலமலைகள் எட்டும் அமைந்துள்ளன. உலகில் பகை ஒழித்து
உலகை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவரத் தடாதகையாள் விரும்புகிறாள். ஒரு
குடையின் கீழக் கொண்டு வந்த பின் தென்குமரிக்கு ஒப்ப வடகடல் துறையிலும்
மண்ணு மங்கலம் (வெற்றிக்குப்பின் நீராடல் செய்தல்) செய்கிறாள். இதனைப்
புலவர்
இமயத் தொடும்வளர்
குலவெற்பு எட்டையும்
எல்லைக் கல்லில்நிறீஇ
எண்திசை யும்தனிகொண்டு புரந்து
வடாது கடல்துறைதென்
குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி
(மீனா.பிள். 39) |
 |
(வெற்பு = மலை, நிறீஇ
= நிறுத்தி, மடம் = இளமை, வடாது
= வடக்கு, பிடி = பெண்யானை (போன்ற நடை)
என்று மீனாட்சியின் வெற்றிச் சிறப்பினைப்
புகழ்ந்துள்ளார். இவ்வாறாகப் புலவர் தமிழ் இலக்கிய அக, புற மரபுகளையும்
பிள்ளைத்தமிழில் சேர்த்துப் புனைந்திருப்பது படித்து மகிழ்வதற்கு உரியது. |