1.1 இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது, மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது.

 எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து, இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய தேவையும் ஏற்பட்டது.

இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால், இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.

இலக்கண நூலை இயற்றுபவரை இலக்கண நூல் ஆசிரியர் என்று அழைப்பர். தமிழில் காலம் தோறும் பல ஆசிரியர்கள் இலக்கண நூல்களை எழுதி வந்துள்ளனர். சமண சமயத்தைச் சார்ந்த துறவிகளே இலக்கண நூல்களை மிகுதியாக இயற்றியுள்ளனர். எனினும் சைவம், வைணவம், கிறித்தவம் முதலிய சமயத்தைச் சேர்ந்தவர்களும் இலக்கண நூல்களை இயற்றியுள்ளனர்.

இலக்கண நூல் ஆசிரியர்கள் இலக்கணத்தை, விதிகளாகச் செய்யுள் வடிவில் அமைத்து இயற்றினார்கள். விதிகளைச் சூத்திரம் என்றும் நூற்பா என்றும் கூறுவர். ஒரு பொருள் பற்றிய சில விதிகள் எல்லாவற்றையும் தொகுத்து ஓர் இயலாக அமைப்பர். ஓர் இலக்கண நூலில் அப்படிப் பல இயல்கள் சேர்ந்து அமைந்திருக்கும்.

இலக்கண நூல்களை இயற்றும் ஆசிரியர்கள், அவற்றைச் சூத்திரங்களாக இயற்றியதால், எளிதில் பொருள் விளங்காமல் இருந்தன. மாணவர்கள் இவற்றைக் கற்பதற்கு மிகவும் இடர்ப்பட்டனர். அதனால், மாணவர்க்கு விளங்கும் வகையில் அச்சூத்திரங்களுக்கு எளிமையாக உரைநடையில் சிலர் பொருள் எழுதினார்கள். இவர்கள் எழுதியதை உரைகள் என்று வழங்குவர். இப்படி இலக்கண நூல்களுக்கும் இலக்கிய நூல்களுக்கும் விளக்கம் எழுதியவர்களை உரையாசிரியர் என்று அழைப்பர்.