1.2 இலக்கணத்தின் வகைகள்

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும். யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது. பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ், உலா, தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது. அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை, உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடத்தில் எழுத்து, சொல் ஆகிய இலக்கணங்களின் அமைப்பும், வரும் பாடத்தில் பொருள், யாப்பு, அணி, பாட்டியல் இலக்கணங்களின் அமைப்பும் அறிமுகம் செய்யப்படும்.

எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன. சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும்.

சொல் இலக்கணத்தில், சொல்லின் வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியனவும் திணை, பால், எண், இடம், காலம் முதலியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும்.

பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும். பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது. போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.

தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே. செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதே யாப்பு இலக்கணம் ஆகும்.

சங்க காலத்திற்குப்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் அதற்குப் பின்பும் பல வகைச் சிறிய இலக்கிய வடிவங்கள் தோன்றின. தூது, உலா, அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ் முதலியவை இவ்வகையான இலக்கியங்களாகும். இவற்றுக்கு இலக்கணம் சொல்லுவது பாட்டியல் இலக்கணம் ஆகும்.

இலக்கியங்களில் அழகுக்காகவும் பொருள் விளங்குவதற்காகவும் உவமைகளைப் பயன்படுத்துவது கவிஞர்களின் இயல்பு. அவ்வாறு இடம்பெறும் உவமை, உருவகம் முதலியவற்றுக்கு அணி என்று பெயரிட்டு அவற்றின் இலக்கணத்தைச் சொல்லுவது அணி இலக்கணம் ஆகும்.