1.3 தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றி, மொழியை வளப்படுத்தியுள்ளன. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன. நீண்ட வரலாற்றில் அரசாட்சி, பிறமொழிகளின் தாக்கம், சமூக மாற்றம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறி. எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன. எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம். தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது.

1.3.1 தொல்காப்பியம்

தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்த நூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழில் உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியது தொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள் இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம் திகழ்கிறது.

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறிய முடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

1.3.2 நன்னூல்

பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது. நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும். எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்திகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.

அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர். எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்து வருகின்றனர்.

தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நூல் ஆசிரியர் காலம் இலக்கண வகை
தொல்காப்பியம் தொல்காப்பியர் கி.மு.4ஆம் நூற். எழுத்து, சொல், பொருள்
நன்னூல் பவணந்தி முனிவர் 13ஆம் நூற். எழுத்து, சொல்
நேமிநாதம் குணவீர பண்டிதர் 12ஆம் நூற். எழுத்து, சொல்
இறையனார் களவியல் --- 7ஆம் நூற். அகப்பொருள்
நம்பியகப் பொருள் நாற்கவிராசநம்பி 13ஆம் நூற். அகப்பொருள்
மாறனகப் பொருள் குருகைப்பெருமாள் கவிராயர் 16ஆம்நூற். அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் 9ஆம் நூற். புறப்பொருள்
யாப்பருங்கலம் அமிர்தசாகரர் 10ஆம் நூற். யாப்பு
யாப்பருங்கலக் காரிகை அமிர்தசாகரர் 10ஆம் நூற். யாப்பு
தண்டியலங்காரம் தண்டி 12ஆம் நூற். அணி
மாறன் அலங்காரம் குருகைப்பெருமாள் கவிராயர் 16ஆம் நூற். அணி
வீரசோழியம் புத்தமித்திரர் 11ஆம் நூற், ஐந்திலக்கணம்
இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் 17ஆம் நூற். ஐந்திலக்கணம்
தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 18ஆம் நூற். ஐந்திலக்கணம்
சுவாமிநாதம் சுவாமி கவிராயர் 18ஆம் நூற். ஐந்திலக்கணம்
அறுவகை இலக்கணம் தண்டபாணி சுவாமிகள் 19ஆம் நூற். ஐந்திலக்கணம்
முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாயர் 19ஆம் நூற். ஐந்திலக்கணம்
பன்னிரு பாட்டியல் --- 10ஆம் நூற். பாட்டியல்
வெண்பாப் பாட்டியல் குணவீர பண்டிதர் 12ஆம் நூற். பாட்டியல்
இலக்கண விளக்கப் பாட்டியல் தியாகராச தேசிகர் 17ஆம் நூற். பாட்டியல்