2.3 அணி இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். செய்யுள்களில் உள்ள அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

மலர் போன்ற முகம்

என்ற தொடரில் முகத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது. இதில்

முகம் - பொருள்
மலர் - உவமை
போன்ற - உவம உருபு

இவ்வாறு கூறும்போது புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் நூல் இயற்றும் ஆசிரியர்கள் உவமையைக் கையாள்கிறார்கள். பொருள் அணி, சொல் அணி என்று அணி இரண்டு வகைப்படும். உவமை அணி, உருவக அணி, வேற்றுமை அணி, நிரல்நிறை அணி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, பிறிது மொழிதல் அணி முதலியவை பொருள் அணி வகையைச் சார்ந்தவை ஆகும். மடக்கும் சித்திர கவிகளும் சொல் அணி வகையைச் சார்ந்தவை ஆகும். சித்திர கவி என்பது சில சித்திரங்களை வரைந்து அவற்றில் உள்ள கட்டங்களில் பொருந்தும்படி இயற்றப்படும் செய்யுள் ஆகும். எழுகூற்றிருக்கை, காதை கரப்பு, மாலைமாற்று, சுழிகுளம், சக்கரம், நாகபந்தம் முதலியன சித்திர கவியின் வகைகள் ஆகும். அணிகளில் முதன்மையானது உவமை அணி என்று முன்பு பார்த்தோம். உவமை அணி என்பது கவிஞர், தாம் சிறப்பிக்க வந்த ஒரு பொருளை மக்களால் உயர்வாக மதிக்கப்படும் வேறு ஒன்றுடன் ஒப்பிடுவது ஆகும். பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்புமை அமையும்.  உவமை அணியில் உவமை கூறப்படும் பொருள், உவமை, உவம உருபு ஆகிய மூன்றும் இருக்கும். பொதுவாகப் பொருளை விட உவமை உயர்ந்ததாக இருக்கும்.

எ.டு.

மலை போன்ற தோள் - பண்பு
புலி போலப் பாய்ந்தான் - தொழில்
மழை போன்ற வள்ளன்மை - பயன்

உவமை அணியில் பல உவம உருபுகள் வரும். அவை பின்வருமாறு:

போல உறழ
மான எதிர
புரைய சிவண
கடுப்ப கேழ்
அன்ன ஏற்ப
ஒப்ப இயைய
மலைய நேர
நிகர்ப்ப என்ன

எடுத்துக்காட்டாக உவமை அணி உள்ள ஒரு செய்யுளை இப்பொழுது காணலாம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”        (திருக்குறள் 100)

இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பேசுவது, இனிமையான பழங்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காய்களை உண்பது போல் ஆகும் என்பது இதன் பொருள். இதில் இனிய சொற்களை விட்டுக் கடுமையான சொற்களைப் பேசுதல் என்பது பொருள் ஆகும். இதற்குப் பழங்கள் இருக்கக் காய்களை உண்பது உவமை ஆகும். இப்படி உவமை மூலமாகச் சொல்லுவதால் எளிமையாக இருக்கிறது; தெளிவாகவும் புரிகிறது.