6.5 செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்

மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும்.

செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது. அதை இங்கே காண்போம்.

சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை மீண்டும் நினைவு கூர்வோம்.

ம் என்னும் மெய்எழுத்து, தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும். இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும்.

எடுத்துக்காட்டு
போன்ம்
மருண்ம்

இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும். இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.