|  
 
  தமிழ் மொழியில் எழுத்துகள் இருவகைப்படும் 
 என்றும் 
 அவை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்றும் நீங்கள் 
 படித்திருப்பீர்கள். இந்த எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு 
 வடிவங்களைக் கொண்டவை; அவை ஒலிவடிவம், வரிவடிவம் 
 என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் எழுத்துகளின் 
 வரிவடிவம் அமையும் இயல்பையும் முந்தைய பாடங்களின் வழி 
 அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் தமிழ் எழுத்துகள் ஒலிவடிவம் 
 பெறுவதன் தன்மை விளக்கப்படுகிறது.  
 எழுத்துப் பிறப்பு 
 - பொது விளக்கம்  
 ஒவ்வோர் எழுத்தும் பேச்சொலியாக 
 இருந்து, பின்பே எழுத்து 
 ஒலியாகப் பதிவு செய்யப்படுகின்றது. எனவே பேச்சிற்கு 
 அடிப்படையாக அமையும் ஒலிகள் எவ்வாறு உருவாயின என்பதை 
 இலக்கண நூலார் ஆராய்ந்து உள்ளனர். உடலில் இருந்து 
 தோன்றி மேலே எழும் காற்று, எழுத்தொலியாக வெளிப்படும் 
 நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும். இத்தகைய எழுத்து ஒலிகள் 
 பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உறுப்புகளின் ஒத்துழைப்பும் 
 தேவைப்படுகின்றன.   
  |