2.1.
உயிர்எழுத்துகளின் பிறப்பு - பொது
தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள்,
சார்பு
எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும்
முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல்
எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள்
பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத்
தனித்து இயங்கும்
தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள்
என்று பெயர்
பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக்
காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது
மிகவும் பொருத்தமானது.
2.1.1
தொல்காப்பியர் கருத்து
உயிர்எழுத்துகளின் பொதுப் பிறப்புப்
பற்றித்
தொல்காப்பியர் கூறும் கருத்துகளை
முதலில் காண்போம்.
முந்தைய பாடத்தில் எழுத்துகளின் பிறப்பிற்குக் கூறப்பட்ட
பொதுவான அடிப்படை இலக்கணம் உயிரெழுத்துகளின்
பிறப்பிற்கும் பொருந்தும்.
உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில்
(கழுத்தில்)
பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன. தம்நிலையில் இருந்து
மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து
தோன்றுவன. ‘தம்நிலையில் இருந்து திரியாமல்’ இருப்பது
என்னவெனில், ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல்
இருப்பது ஆகும். சில உயிர் எழுத்துகள், எடுத்துக்காட்டாக
‘இகர’மும் ‘உகர’மும், குற்றியலிகரமாகவும், குற்றியலுகரமாகவும்
வருகின்ற போது, அவை தம்நிலையில் இருந்து திரிந்து (மாறி)
விடுகின்றன. அவ்வாறு இல்லாமல், இயல்பாக வருகின்ற உயிர்
எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால்
எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர்
கருத்தாகும். இதனை,
அவ்வழிப்,
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்
(எழுத்து. 84) |
(தந்நிலை = தம்நிலை; மிடறு = கழுத்து;
வளி = காற்று)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக்
காணலாம்.
2.1.2
நன்னூலார் கருத்து
இனி, உயிர்எழுத்துகளின் பிறப்புப்
பற்றி நன்னூல் ஆசிரியர்
கூறும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக்
கூறப்பட்ட
பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான்
உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார். அந்த வழியில்
உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு
ஆகும் (கழுத்து)
என்பது அவர் கருத்து. நன்னூல் உயிர்எழுத்துகள்
பிறப்பதற்கு
உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில், மெய்யெழுத்துகள்
பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது.
நூற்பா
அவ்வழி,
ஆவி இடைமை இடம் மிட றுஆகும்
மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை
(நன்னூல். 74) |
(ஆவி = உயிர்; இடைமை = இடையினம்;
மென்மை
= மெல்லினம்;
உரம் = நெஞ்சு; வன்மை = வல்லினம்)
'அவ்வழி' என்பது முந்தைய பாடத்தில்
சொல்லப்பட்ட 'எழுத்துப்
பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி' எனப் பொருள்தரும்.
இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும்
மெய்எழுத்துகளுக்கும்
(முதல் எழுத்துகளுக்குப்) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது.
எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின்
இலக்கணம் பற்றி மட்டும் காண்போம்.
நன்னூல்,
உயிர்எழுத்துகளில் ‘இயல்பாக அமையும் உயிர்’
என்றும் ‘தந்நிலை திரியும் உயிர்’ என்றும் வேறுபடுத்திக்
கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்போது, உயிர்எழுத்துகளின் பொதுவான
பிறப்பிடம்
குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.
(1)
|
உயிர்எழுத்துகள்,
எழுத்துஒலிகளின் பொதுவான
பிறப்பிட இலக்கணத்தின் படியே பிறப்பன. |
(2)
|
உயிர்எழுத்துகளின்
பிறப்பிடம் கழுத்து ஆகும். |
(3)
|
தனியே வருகின்ற உயிர்எழுத்தும்,
எந்தவித மாற்றமும்
அடையாத உயிர்எழுத்தும் மட்டுமே கழுத்தில் இருந்து
தோன்றும். தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து
ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி
பொருந்தாது. |
|