1.3 எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு தமிழில் உள்ள பதங்கள் (சொற்கள்) எல்லாம் மெய் எழுத்தையும், உயிர் எழுத்தையும் முதலும் ஈறும் ஆக உடையவை என்கிறார் நன்னூலார். இதனை அவர் மேலே கூறிய புணர்ச்சி விளக்கத்தில், மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் (நன்னூல், 151-1) எனக் குறிப்பிட்டிருப்பது காணலாம். எனவே பதங்கள் எழுத்து அடிப்படையில் நான்கு ஆகும். அவை வருமாறு: (1) உயிர் முதல் உயிர் ஈறு சான்று: அணி - உயிர் முதல் அ; உயிர் ஈறு இ (ண்+இ=ணி). (2) உயிர் முதல் மெய் ஈறு சான்று: அணில் - உயிர் முதல் அ; மெய் ஈறு ல். (3) மெய் முதல் உயிர் ஈறு சான்று: மணி - மெய் முதல் ம் (ம்+அ=ம) உயிர் ஈறு இ (ண்+இ=ணி) (4) மெய் முதல் மெய் ஈறு சான்று: பல் - மெய் முதல் ப் (ப்+அ=ப); மெய் ஈறு ல் இவ்வாறு அமையும் பதங்களே புணர்ச்சியில் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வரும். நிலைமொழியின் ஈற்று எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும். நிலைமொழி ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். வருமொழி முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். எனவே நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் இருக்கும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு: (1) உயிர் ஈற்றின் முன் உயிர் வரல் (நிலைமொழி இறுதி உயிர் + வருமொழி முதல் உயிர்) சான்று: மணி + அடித்தான் (இ முன் அ வரல்) (2) உயிர் ஈற்றின் முன் மெய் வரல்: (நிலை மொழி இறுதி உயிர் + வருமொழி முதல் மெய்) சான்று: அணி + கொடுத்தான் (இ முன் க் வரல்) (3) மெய் ஈற்றின் முன் உயிர் வரல் (நிலைமொழி இறுதி மெய் + வருமொழி முதல் உயிர்) சான்று: கால் + அணி (ல் முன் அ வரல்) (4) மெய் ஈற்றின் முன் மெய் வரல் (நிலை மொழி இறுதி மெய் + வருமொழி முதல் மெய்) சான்று: கால் + விரல் (ல் முன் வ் வரல்) இவற்றுள் உயிர் ஈற்றின் முன் உயிர் வரல், உயிர் ஈற்றின் முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்று முன் உயிர் வரல், மெய் ஈற்று முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி மெய் ஈற்றுப் புணரியலிலும், விதிகள் பலவற்றைக் கொண்டு நன்னூலார் விளக்கிக் காட்டுவார். |